PIB Headquarters
பால் பண்ணை கால்நடை வளர்ப்பு ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வகை செய்யும்.
‘ஆத்ம நிர்பார் பாரத்’ சுயசார்பு இந்தியா பொருளாதாரத் தொகுப்பு கால்நடை வளர்ப்புத்துறைக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
Posted On:
01 JUN 2020 5:53PM by PIB Chennai
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தேசிய அளவிலான பொது முடக்கம் நாடு முழுவதும் பல்வேறு துறைகளையும் பாதித்துள்ளது. இதில் பால்பண்ணைத் துறையும் அடங்கும். 12 மே 2020 அன்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திரமோடி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு சமமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார். சுய சார்பு இந்தியா இயக்கம் வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். மத்திய நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்புப் போக்குவரத்து, திறன் மேம்படுத்துதல், வேளாண் துறை, மீன்வளத் துறைகளில் நிர்வாக சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தார்.
கால்நடைகள், எருமை மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி, போன்ற விலங்குகளில் மொத்தம் 53 கோடி விலங்குகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவதற்காக 13,343 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய விலங்குகள் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றையும், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொண்ட கால்நடைக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றையும் அவர் அறிவித்தார். பண்ணை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பால்பண்ணை பொருள்கள், கால்நடைத் தீவனக் கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் முதலீட்டிற்கு ஆதரவு அளிப்பதே இதன் நோக்கமாகும். முக்கிய பொருள்களைத் தயாரிப்பதற்கான ஆலைகளை நிறுவுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நகரங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களை விட்டு இடம்பெயர்வது உட்பட பல்வேறு காரணங்களால் கோவிட் நெருக்கடி காலத்தின் போது, பாலுக்கான தேவை திடீரென்று குறையும் என்று பால்பண்ணை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த நெருக்கடியிலிருந்து மீள்வது பற்றி, சிறு பால்பண்ணை விவசாயிகளுக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை.
கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொடர்பான செயல்பாடுகளுக்கு, கொங்குமண்டலம், மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிட் நெருக்கடியின் போது மக்கள் தங்கள் வீடுகளிலேயே உணவு உண்ணத் தொடங்கினர். பால், தயிர், நெய் போன்றவை தினசரி உணவின் முக்கிய அம்சங்களாகும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த ஏஜி வெங்கடேஷ் கூறினார். வயதான மாடுகளைப் பராமரிக்கும் கோசாலை ஒன்றை நிர்வகிக்கிறார் திரு வெங்கடேஷ். நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட கால்நடைவளர்ப்பு குறித்த அரசின் திட்டங்களை அவர் வரவேற்றார். பால் பண்ணை தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு மேலும் ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
கோயம்புத்தூரின் புறநகர்ப்பகுதியில் உள்ள கலிபாளையத்தை சேர்ந்த ஹரிவர்தனன் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை தனது குடும்பத்தினராகவே கருதுகிறார். தினந்தோறும் நெய், பனீர் ஆகியவற்றைத் தயாரிக்க அவருக்கு, அவரது மனைவி கவுசல்யா உதவுகிறார். அவருடைய குழந்தைகளும் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஹரிவர்தனனுடைய பண்ணையில் உள்ள அனைத்து நாடுகளுமே நாட்டு மாடுகள். விவசாயத்தைத் தவிர கூடுதலாக கால்நடை வளர்ப்பிலும் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வருமானத்தை அதிகரிக்கவும், பஞ்சம் வரும் காலத்திலும் வாழ்க்கையை நடத்தவும் விவசாயிகளுக்கு இது உதவும்.
மாடுகளைச் செல்வமாகக் கருதவேண்டும் என்று புராணங்களும் இதிகாசங்களும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன. எனவே பால் பண்ணை விவசாயம், விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை நிச்சயம் வழங்கும் என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த கோவர்தனன் கூறினார். பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் புதிதாகத் தொழில் துவங்க உள்ள அமைப்புகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் மிகுந்த ஆதரவு அளித்து வருவதால் இத்தொழிலைத் தொடங்க மேலும் அதிக அளவில் முன்வரவேண்டும் என்றார். கால்நடை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம், கட்டமைப்பு நிதியம் ஆகிய அறிவிப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை வரவேற்பதாகக் கூறிய அவர், பால் பண்ணை தொடங்குதல் போன்ற சுயசார்புச் செயல்களில் ஈடுபட இத்திட்டங்கள் மக்களுக்கு உதவும் என்றார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ராஜேஷ் கோவிந்தராஜுலு கூறினார். பால் பொருள்கள், நெய் மற்றும் பனீர் போன்ற உடல்நலத்துக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க உதவும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பல்முனை அணுகுமுறை தேவை. விலங்குகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கும், 15,000 கோடி ரூபாயிலான கால்நடைக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியமும் இந்த இலக்கை அடைவதற்கான மிகப்பெரிய வழிமுறையாகும்.

பால்பண்ணை செயல்பாடுகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் ஏஜி வெங்கடேஷ்

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுவதால் வருவாய் அதிகரிக்கும் என்று ஹரிவர்தனன் கூறுகிறார்

சுயசார்பு இந்தியா அறிவிப்புகள் கால்நடை வளர்ப்புத்துறையை ஊக்குவிக்கும் என்று ராஜேஷ் கோவிந்தராஜுலு கூறுகிறார்
(Release ID: 1628396)
Visitor Counter : 378