PIB Headquarters

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மருத்துவமுறைகள்

பொதுமக்கள் கருத்துகளை அறிய ஆயுஷ் சஞ்சீவனி செயலி

Posted On: 29 MAY 2020 6:27PM by PIB Chennai

கொரோனா வைரஸைக் கொல்வதற்கோ அல்லது அக்கிருமி உடலில் தொற்றாமல் இருக்க தடுப்பு மருந்தோ இல்லாத நிலையில் பல  நாடுகளும் தங்களது பாரம்பரிய மருத்துவ முறையிலான சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவிலும் ஆயுஷ் அமைச்சகம் தனது சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா-இயற்கை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் கொரோனாவுக்கு எதிரான பல ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. மக்கள் தங்களது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு ஆலோசனைத் தொகுப்பையும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

பிரதம மந்திரியும் பாரம்பரியமான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் முறைகளைக் கையாளுமாறும் யோகா செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனைத் தொகுப்பின்படி சித்த மருத்துவ முறையில் கபசுர குடிநீர்நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆடாதொடை மணபாகு ஆகியன முன்தடுப்பு மருந்துகளாகவும் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கூட்டு மருந்துகளாகவும் தரப்பட்டு வருகின்றன.  ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்து தரப்படுகின்றது. வேது பிடித்தல், மிளகு, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துதல் போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாரம்பரிய மருத்துவ ஆலோசனைகளை எந்த அளவு ஏற்று கடைபிடிக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு என்ன பயன் ஏற்பட்டு உள்ளது, கொரோனா வைரசை தடுப்பதில் இந்த மருந்துகளும் வழிமுறைகளும எந்த அளவிற்கு பயன் உள்ளவையாக இருக்கின்றன என்பவை குறித்து தெரிந்து கொள்வதற்காக ஆயுஷ் அமைச்சகம் ஆயஷ் சஞ்சீவனி என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்த செயலியை ஆயுஷ் மருத்துவர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.  

கிருமித் தொற்றுக்கு அதிக அளவில் ஆளாகக் கூடிய நிலையில் உள்ள மக்களுக்கு இந்த பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுடைய ஆரோக்கியத்தின் தரம் எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதும் இந்த செயலியின் நோக்கம் ஆகும்.  மக்களின் பின்னூட்டங்களை அறிவதோடு மக்களுக்கு ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்த அறிமுக அறிவை தருவதும் இந்தச் செயலியின் நோக்கம் ஆகும். ஆரோக்கியத்துக்கு ஆயுஷ், சுயபாதுகாப்பிற்கான தேவை, பொது சுகாதார நடவடிக்கைகள், ஆயுர்வேத நோய் எதிர்ப்பாற்றல், ஆயுஸ் சுகாதார பராமரிப்பு ஆகிய தலைப்புகளில் தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்தச் செயலியை மொபைல் போனில் நிறுவியப் பிறகு தாங்கள் கடைபிடிக்கும் மருத்துவ முறையைத்  தேர்ந்தெடுத்து அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டே வர வேண்டும்.  இந்தப் பதில்களில் இருந்து இந்திய மருத்துவ முறையானது எந்த அளவிற்கு பயனைத் தந்து உள்ளது என்று கணக்கிட முடியும். உதாரணமாக ஆயுஷ் முன்தடுப்பு ஆலோசனைகளை எவ்வளவு காலமாக நீங்கள் கடைபிடித்து வருகிறீர்கள், கோவிட்-19 முன்தடுப்புக்கு ஆயுஷ் அடிப்படையிலான மருந்துகள், வாழ்க்கை முறைகள், தற்போதைய பழக்கத்தை மாற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றில் நீங்கள் எதை கடைபிடிக்கிறீர்கள், அவ்வாறு கடைபிடித்தால் எவ்வளவு காலமாக கடைபிடிக்கிறீர்கள், ஆயுஷ் முன்தடுப்பு சிகிச்சைகள் எந்த அளவிற்கு பயன் தருவதாக நினைக்கிறீர்கள் இது உங்களுக்கு பயன் தந்துள்ளதா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். 

இந்தியா முழுவதும் 50 லட்சம் மக்களிடம் இருந்து பின்னூட்டங்களை இந்தச் செயலி மூலம் சேகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.  ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள 5 மத்திய ஆராய்ச்சி குழுமங்கள், 11 தேசிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படுகின்ற துணை நிறுவனங்கள் மாநில அரசுகள் இந்தப் பின்னூட்டங்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.  இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகளை பகுப்பாய்வு செய்து கண்டறியப்படும் முடிவுகள் வருங்காலங்களில் எந்த ஒரு பெருந்தொற்று ஏற்பட்டாலும் அதனை எளிதில் எதிர்கொள்வதற்கான அறிவை வழங்கும்.

இந்தச் செயலி குறித்து புதுச்சேரி மற்றும் காஞ்சீபுரத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்:

டாக்டர் ஆர்.ஸ்ரீதரன், புதுச்சேரி அரசின் தலைமை சித்த மருத்துவர்:

கோவிட்-19 காலத்தில் கொரோனா தொற்றுக்கு முன்தடுப்பு மருந்துகளாக  சில சித்த மருந்துகள் தரப்பட்டு வருகின்றன.  கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், ஆடாதொடை மணபாகு அகியவற்றை  நாங்கள் தருகின்றோம். இந்த மருந்துகள் எதிர்பார்த்த பலனைத் தருகின்றனவா என்று மக்கள் கருத்தை அறிய இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டாக்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைப் பயன்படுத்தி அரசுக்கு தங்கள் கருத்துகளை, பின்னூட்டங்ளைத் தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார், ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) & நிர்வாக அதிகாரி, மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி:

கோவிட்-19 தாக்கத்தைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதில் ஒன்றாக இந்த ஆயுஷ் சஞ்சீவனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாக்டர்கள் அனைவரும் இந்தச் செயலியை தங்கள் குடும்ப உறுப்பினர்கள், தெரிந்தவர்கள், நோயாளிகள் என அனைவரையும் பயன்படுத்தச் சொல்லி அவர்களின் பின்னூட்டங்களை அரசுக்குத் தெரிவிக்கச் செய்ய வேண்டும். சமையலறையில் உள்ள பொருட்கள் பலவும் மருந்துகளே என்பதை இந்தச் செயலியில் உள்ள ஆலோசனைத் தொகுப்பு தெள்ளத் தெளிவாகச் சொல்லுகின்றது.

டாக்டர் ரவிக்குமார் சதர்லா, ஆராய்ச்சி அலுவலர் (ஹோமியோ) & நிர்வாக அதிகாரி, மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி:

புதுச்சேரியில் சுமார் 13 ஆயிரம் நபர்களுக்கு நாங்கள் ஹோமியோ நோய் எதிர்ப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மாத்திரையை வழங்கி உள்ளோம்.  அவர்களின் மொபைல் எண்கள் எங்களிடம் உள்ளன.  அவர்களைத் தொடர்பு கொண்டு கோவிட்-199 அறிகுறி இருக்கிறதா எனக் கேட்டு வருகின்றோம். இத்தகைய பின்னூட்டத்தை அறிவியல் முறைப்படி தொகுத்து பகுத்து ஆராய இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எங்கள் கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் நாங்களே இந்த செயலியை அவர்களின் ஒப்புதலோடு பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கற்றுத் தருகின்றோம்.

டாக்டர் கீர்த்தனா, ஆயுர்வேத மருத்துவர், ஆதரா கேரள ஆயுர்வேத மருத்துவமனை, காஞ்சீபுரம்:

ஆயுஷ் மருந்துகள், தினசரி வாழ்க்கை முறையில் மாற்றங்கள், புதிய பழக்க வழக்கங்கள் ஆகியன எந்த அளவில் நம்மை கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்கின்றன என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு செயலியாக இது உள்ளது. பொதுமக்கள் நலனைக் கருதி ஆயுஷ் அமைச்சகம் இதனை வெளியிட்டுள்ளது.

டாக்டர் திவ்யா திருமாறன், ஆராய்ச்சி அலுவலர் (ஹோமியோ), மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி:

கொரோனா தடுப்பு வழிமுறைகள்/மருந்துகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவாக விளக்குவதோடு அவற்றைப் பயன்படுத்திய பிறகு ஏற்பட்ட பலன்களைப் பகிர்ந்து கொள்ள இந்தச் செயலி உதவுகின்றது.

 

WhatsApp Image 2020-05-29 at 15.12.03.jpeg

டாக்டர் ஆர்.சிறீதரன், புதுச்சேரி அரசின் தலைமை சித்த மருத்துவர்

WhatsApp Image 2020-05-29 at 15.12.30.jpeg

டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார், ஆராய்ச்சி அலுவலர் மற்றும் நிர்வாக அதிகாரி, மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி

 

WhatsApp Image 2020-05-29 at 15.13.03.jpeg

டாக்டர் ரவிகுமார் சதர்லா, ஆராய்ச்சி அலுவலர் மற்றும் நிர்வாக அதிகாரி, மத்திய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி

WhatsApp Image 2020-05-29 at 15.13.31.jpeg

டாக்டர் கீர்த்தனா, ஆதரா கேரளா ஆயுர்வேத மருத்துவமனை, காஞ்சிபுரம்

WhatsApp Image 2020-05-29 at 15.15.51.jpeg

டாக்டர் திவ்யா திருமாறன், ஆராய்ச்சி அலுவலர், மத்திய ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி



(Release ID: 1627687) Visitor Counter : 675