PIB Headquarters

உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது நகரங்களை மட்டும் அல்ல இதயங்களையும் இணைக்கிறது

உறவினர்களுடன் மீண்டும் இணைவதால் லட்சக்கணக்கானோர் நிம்மதி

Posted On: 28 MAY 2020 4:32PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றால் ஏற்பட்ட முடக்கம்,  நாடு முழுவதும் உள்ள  தனிநபர்கள், வர்த்தகம், மற்றும் தொழிலை பாதித்தது. ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்க எடுத்த முடிவு, தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவியதால்உள்நாட்டு விமானங்களை மீண்டும் இயக்க எடுத்த முடிவும் குடும்பங்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தங்கள் விருப்ப இடங்களுக்கு செல்ல உதவும். உறவினர்களை இணைத்ததுடன்இது வர்த்தகப் பிரிவினரின் தன்னம்பிக்கையையும் அதிகரித்தது. மேலும், இது நமது பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். இந்தியா போன்ற பெரிய நாட்டை இணைப்பதில் சர்வதேவ விமானங்களைப்போல், உள்நாட்டு விமானங்களும் முக்கியம்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கிய 3வது நாளில், 354 புறப்பாடு, 288 வருகையில் சுமார் 50 ஆயிரம் பயணிகள் பயணித்ததாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கூறினார். 2ம் நாளில், நமது விமான நிலையங்களில் 445 புறப்பாடு, 447 வருகை மூலம் 62,641 பயணிகள் பயணம் செய்தனர். மே 25ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில், 832 விமானங்களில் 58,318 பேர் பயணித்தனர்.  மார்ச் 26ம் தேதி தொடங்கிய உதான் லைப்லைன் சேவையால், தற்போது வரை 927 டன் மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 579 விமான சேவைகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வந்தே பாரத் திட்டம் மூலம் முதல்கட்டத்தில் 13,750 பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் உட்பட 12 நாடுகளில் இருந்து 64 விமானங்களில் இந்தியா திரும்பினர். தற்போதைய 2வது கட்டத்தில்  ஐரோப்பா, ஆப்ரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருந்து  ஜூன் 17ம் தேதி வரை 58,750 இந்தியர்கள்,  311 விமானங்களில் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.

சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு முன்னணி தனியார் விமானம் 17 பயணிகளுடன் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியது. அந்த விமானம் 31 பயணிகளுடன் சென்னை திரும்பியது. திருச்சி-பெங்களூர் இடையே முதல் விமான சேவையும் மீண்டும் தொடங்கியது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கரூர் உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 65 பயணிகள் பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்தனர். அவர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  திரும்பி சென்ற விமானத்தில் திருச்சியிலிருந்து 52 பேர் பெங்களூர் சென்றனர். விமானப் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஆன்லைன் மூலமாக விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு முதல் 1 மணி நேரம் முன்பு வரை பெற்றுக் கொள்ளும்படி பெரும்பாலான  விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஆன்லைன் போர்டிங் பாஸ்களின் நகல்கள் அல்லது எலக்ட்ரானிக் நகல்கள் கொண்டுவரும்படியும், அவர்கள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.  மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானங்கள் மூலமோ அல்லது ரயில்கள் மூலமோ வர விரும்பும் பயணிகள் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் -பாஸ் பெற வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் வருகையின் போது, தனிமைப்படுத்துதல் முத்திரை குத்தப்பட்டு, 14 நாட்கள் வீட்டு தனிமை முறைகளை பின்பற்ற  வேண்டும்.

உள்நாட்டு விமானங்களை மீண்டும் இயக்கியதற்கு, பெங்களூரில் உள்ள .டி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் திருமதி டி வி லட்சுமி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், `நான் எனது பெற்றோருக்கு ஒரே பெண். சென்னையில் இருக்கும் அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போது உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், அவர்களை சென்று பார்ப்பதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார். இதேபோல் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அவர்கள் தமிழ்நாடு வர -பாஸ் பெற வேண்டும் மற்றும் அவர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருக்க கூடாது.

உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருக்கும் பெற்றோர்களைப் பார்க்கவும், மருத்துவ சிகிச்சைக்காகவும்,  அவசர பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும், உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது உதவும். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள் இன்னும் முழு அளவில் தொடங்காத நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து உண்மையிலேயே உதவும். ஆனால், கோவிட்-19 பரவலை தடுக்க அரசு வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவது நமது கடமை.



(Release ID: 1627430) Visitor Counter : 577