PIB Headquarters

சுயசார்பு இந்தியா: உள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்க தொழில்முனைவோர் வேகம்

Posted On: 28 MAY 2020 1:53PM by PIB Chennai

தேசிய முடக்கத்தால் ஏற்பட்ட மந்தநிலையிலிருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான நிதியுதவி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து 5வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வழி சுயசார்பு இந்தியா - ஆத்மநிர்பார் பாரத் என்றார். தேவை விநியோக சங்கிலி முதல் உற்பத்திவரை பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவிவையும் புதுப்பிக்க இந்த நிதித்திட்டம் உதவும் என்று பிரதமர் கூறினார்.

உள்நாட்டுத் தயாரிப்புகளை வாங்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும் என மக்களை பிரதமர் வலியுறுத்தினார். மக்கள் உள்நாட்டுத் தயாரிப்புக்கு குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் முடங்கியுள்ள வர்த்தக செயல்பாடுகளுக்கு தேவையான ஊக்கத்தை ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் மூலம் அளிக்க முடியும்.  இதற்கு மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது, குறைந்த தொழில்நுட்பப் பொருட்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மாற்றாக, குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.

பிபிஇ பாதுகாப்பு உடைகளை தயாரிக்க, திருப்பூரில் உள்ள மூன்று ஆடை நிறுவனங்கள், ஒரு பொறியில் தொழில் நிறுவனத்துடன் இணைந்து புதிய வெப்ப விளிம்பு தையல் இயந்திரத்தை (Heat seam machine) உருவாக்கியுள்ளன. சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பு உடைகள், பனிச்சறுக்கு, மிதிவண்டி ஓட்டுதல், பாய்பரப் படகு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களின் உடைகள் தைக்கும் வகையில், இந்த உள்நாட்டு தயாரிப்பு இயந்திரம், வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகச் சிறந்த உதாரணம். இதன் விலை வெறும் ரூ.1.5 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி வரி. இதே வகை இயந்திரத்தை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால், அதன் விலை ரூ.2.5 லட்சங்கள் முதல் 5 லட்சங்கள் வரை இருக்கும்.

இந்த வெப்ப விளிம்பு தையல் இயந்திரத்தைத் தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் பி.திருவாசகமணி கூறுகையில், ‘‘பிபிஇ பாதுகாப்பு உடைகளைத் தயாரிப்பதற்கான வெப்ப விளிம்பு தையல் இயந்திரம் உள்நாட்டில் கிடைக்காததால், இதை இறக்குமதி செய்ய சீனா போன்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இந்த இயந்திரத்தின் விலையும் அதிகமாக இருந்தது, இதை திருப்பூர் கொண்டு வர நீண்ட காலமானது. அதனால் உள்நாட்டில் இந்த இயந்திரத்தைத் தயாரிக்க நினைத்தோம்.  தற்போது மருத்துவப் பாதுகாப்பு உடைகள் திருப்பூரில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. இதற்கு குறைந்த விலையில் கிடைக்கும் உள்நாட்டு வெப்ப விளிம்பு தையல் இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த இயந்திரத்தை சமீபத்தில் தொடங்கி வைத்த ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், இது போன்ற உள்நாட்டு முயற்சிகள், மேக் இன் இந்தியா திட்டத்துக்கும், ஆத்ம நிர்பார் திட்டத்துக்கும் முதுகெலும்பை ஏற்படுத்தும் என்றார்.

கோவிட் நெருக்கடிக்கு இடையில், உற்பத்திப் பிரிவு முயற்சிகளால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் முத்திரை பதிக்கின்றன. இது பிரதமரின் சுயசார்பு இந்தியா தொலை நோக்கை நிறைவேற்றும். மேலும், இது நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.



(Release ID: 1627397) Visitor Counter : 1213