PIB Headquarters

பிரதம மந்திரியின் அழைப்பால் ஊக்கம் பெற்ற ஆசிரியர்கள் பிறருக்கு உதவி செய்பவர்களாக மாறி உள்ளனர்.

கிராமப்புற ஏழை மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்கியுள்ளனர்.

Posted On: 27 MAY 2020 4:43PM by PIB Chennai

ஏழைக்குடும்பங்களுக்கு உதவுமாறு அதிலும் குறிப்பாக அவர்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்றுமாறு, பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த அழைப்பை சரியான முறையில் தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்கின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் கிராமப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் நிலையான வருமானம் இல்லாததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகளாகவும் கட்டுமானத்தொழிலாளர்களாகவும் உள்ளனர்.  வேலைக்காக நகரங்களுக்குச் செல்ல முடியாததால் அவர்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தச் சூழலில் கருணை என்பது வீட்டில் இருந்துதான் தொடங்குகிறது என்பதை கிராமப்புறப்பள்ளிகளின் ஆசிரியர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். கிராமப்பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை அதிலும் குறிப்பாக ஊரடங்கு காலத்தின் நிலைமையை ஆசிரியர்கள் நன்கு அறிவார்கள்.  எனவே அவர்கள் உதவிகளைச் செய்வதற்கு தாமாகவே முன்வந்தனர்.

தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் தான் ஊட்டச்சத்தான உணவுக்கு முக்கியமான ஆதாரம் ஆகும்.  பள்ளிக்கு வரும் பெரும்பாலான மாணவர்கள் வறுமை காரணமாக காலை உணவாக எதுவும் சாப்பிடுவதில்லை, பள்ளியில் தரப்படும் மதிய நேர உணவுதான் தரமான விருந்தாக அமைந்து அவர்களின் பகல் நேரப் பசியைப் போக்குகிறது. பள்ளி நிர்வாகிகள் இந்தத் திட்டத்தின் கீழ் போதுமான உணவு தானியங்களைப் பெற்று கல்வியோடு சமச்சீரான சத்துணவையும் வழங்குகின்றனர்.  தமிழ்நாட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து மதிய உணவுத் திட்டமானது 43,000க்கும் அதிகமான மையங்களில் செயல்படுத்தப்பட்டு ஏறத்தாழ 50 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கனவே செப்டம்பர் மாதம் வரையிலான இரு காலாண்டுகளுக்கு மாநிலங்களுக்கு 12.23 லட்சம் டன் உணவு தானியங்களை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் தினசரி மதிய உணவுக்காக சமைக்கும் செலவு ஒரு ஆரம்பப்பள்ளி மாணவருக்கு ரூ.4.97 ஆகவும் நடுநிலைப்பள்ளி மாணவருக்கு ரூ.7.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளிச்சிறார்கள் வீட்டிலேயே இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்தான மதிய உணவு கிடைக்காமல் போனது.  இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவுகட்ட, சிறார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உள்ள வீடுகளுக்கு நேரடியாக அரிசி, பருப்பு, பயறு ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்குமாறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அவர்களுக்கு சத்துமாவு, இதர இணை உணவுகள் ஆகியவற்றுடன் வாரத்துக்கு மூன்று முட்டைகளும் வழங்கப்படுகின்றன.  ஆனாலும் வழங்கப்படும் உணவு தானியம் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் போதுமான அளவில் இருப்பது இல்லை. இத்தகைய நிலைமை தான் கிராமப்புற ஆசிரியர்களை ஒன்றாக இணைத்து தன்னார்வமாக நிதி திரட்டி மாணவர்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வைத்துள்ளது.

திருச்சியில் காட்டூர் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும், ஊழியர்களும் தேவையான நிதியைத் திரட்டி மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.  அரிசி மற்றும் மளிகைச் சாமான்கள் அடங்கிய தொகுப்பானது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 90 மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கரூரில் தொட்டியாப்பட்டி அரசு பள்ளியில் 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 69 மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.  பள்ளித் தலைமையாசிரியர் மூர்த்தி ஒரு தனியார் கிளப் வழங்கிய நன்கொடை மூலம் ரூ.32,500 மதிப்பில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி விநியோகித்தார்.  திருச்சியில் துறையூர் காட்டுக்குளம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஊராட்சி மன்றத் தலைவருடன் இணைந்து 190 மாணவர்களின் பெற்றோர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.  ஊரடங்கால் மக்கள் முடங்கி இருந்ததால், அவர்களுக்கு அரிசியும் மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன.  தஞ்சாவூரில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் 55 குடும்பங்களுக்கு ரூ.12,000 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர். காய்கறிகள், மளிகை என அத்தியாவசியமான 11 பொருள்களைக் கொண்டதாக இந்தத் தொகுப்பு இருந்தது.  மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.  கரூரில் சிஎஸ்ஐ பள்ளி தலைமையாசிரியர் பியூலா இந்த ஊரடங்கு காலகட்டத்தில் 100 மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கியதாகக் கூறுகிறார்.

மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் பொருள்கள் வழங்கியதற்கும் உதவியதற்கும் பல உதாரணங்கள் உள்ளன.  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசு முடிந்த அளவுக்கு உதவி வருவதை குடிமக்கள் உணர்ந்துள்ளனர்.  நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கின்ற ஆசிரியர்கள் மாண்புமிகு பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்க உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.  இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைவருக்கும் உந்துசக்தியாக அவர்கள் சேவையாற்றியுள்ளனர்.

 



(Release ID: 1627172) Visitor Counter : 240