PIB Headquarters

ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு சிறந்த வழி.

Posted On: 26 MAY 2020 6:52PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக எதிர்பாராத விதத்தில், உடல்நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள். இதற்கு, முன்னால் நின்று தலைமை தாங்கும் முயற்சியாக மாண்புமிகு பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உடலின் இயற்கையான பாதுகாப்பு முறையை வலுப்படுத்துவதற்கான பொதுவான வழிமுறைகள்” என்பது குறித்து சில விளக்கப்படங்களைப் (ஸ்லைடுகளைப்) பகிர்ந்து கொண்டுள்ளார்.

நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்று தனது பதிவில் அறிவுரை கூறியுள்ள பிரதமர், தற்போது கோவிட் நோயை குணப்படுத்த எந்தவிதமான மருந்தும் இல்லை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று கூறியுள்ளார். ஆயுர்வேதம் சக்தி வாய்ந்தது என்றும், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நாள் முழுவதும் சூடான தண்ணீர் அருந்துவது, யோகாசனம் செய்வது, பிராணாயாமம் செய்வது, குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு தியானம் செய்வது, தினந்தோறும் காலையில் 10 கிராம் ச்யவன்ப்ராஷ் சாப்பிடுவது, சமையலில் மஞ்சள் தூள், சீரகம், தனியா, பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது ஹெர்பல் தேனீர், /கோல்டன் மில்க், மஞ்சள் தூள் சேர்த்த பால் ஆகியவற்றை அருந்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் உள்ளன.

 

கோவிட்-19 நோயைக் குணப்படுத்துவதற்கு ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ சி எம் ஆர்) போன்ற ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் அறிவியல் மதிப்பீடு செய்வதற்காக பணிக்குழு ஒன்றை மாண்புமிகு பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக உதவக்கூடிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஆயுஷ் சஞ்சீவனி என்ற செயலியை உருவாக்கியுள்ளன. இந்த செயலி மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்களால் புதுதில்லியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது கோவிட்-19 நோய் சிகிச்சைக்காக புதுதில்லியில் ஆயுஷ் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளையும் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

 

கோவிட்-19 நோயை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், ஆயுஷ் அறிவுரைகளையும் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றுபவர்கள் பற்றிய விவரங்களை அறியவும், மக்களிடையே கோவிட்- 19 பாதிப்பைத் தடுப்பதில் இவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதை அறியவும் ஆயுஷ் சஞ்சீவனி அலைபேசி செயலி உதவும் என்றும் கூறினார்.  இந்தச் செயலி 50 லட்சம் மக்களைச் சென்றடையும் இலக்கு உள்ளது என்றார்

 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆயுர்வேதம் அதிகரிக்கும் என்றும், சஞ்சீவனி அலைபேசி செயலி மூலம் வீட்டிலேயே எளிமையான முறைகளைக் கொண்டு நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் கோயம்புத்தூரை சேர்ந்த திரு. ராம்குமார் கூறுகிறார்.

 

கேரளாவில் இருந்த தனது குடும்பம் கோயம்புத்தூரில் குடியமர்ந்துள்ளதாகக் கூறும் திருமதி அகல்யா, தமது குடும்பம் எப்போதும், ஆயுர்வேத சிகிச்சை முறையையே சார்ந்திருப்பதாகக் கூறினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆயுர்வேதம் மிகவும் உதவிகரமாக உள்ளது என்று கூறிய அவர், இந்த சிறப்புச் செயலியை அறிமுகப்படுத்தியதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

 

கோயம்புத்தூரில் உள்ள SIHS காலனியைச் சேர்ந்த பள்ளி மாணவரான ஆதித்யன், குழந்தைகளும், முதியவர்களும் கோவிட்-19 வைரஸ் நோயால் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள்; இந்த இரு சாராருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்தச் செயலி அறிவுரை வழங்குகிறது என்றார்.

 

ல்லங்களிலேயே கிடைக்கக்கூடிய பெருவாரியான பாரம்பரிய மருத்துவகுணம் வாய்ந்த பொருள்களைப் பயன்படுத்துவது பற்றி அறிவுரை அளிப்பதால், ஆயுஷ் சஞ்சீவினி செயலி மக்களின் கவனத்தை அதிக அளவில் பெற்று வருகிறது. இந்த நெருக்கடியான காலத்தில் அரசு எடுத்து வரும் பல்முனை அணுகுமுறையுடன் கூடிய பல்வேறு நடவடிக்கைகளுடன், இத்தகைய சக்தி வாய்ந்த நம்பத்தகுந்த செயலியின் உதவியுடன் பெருந்தொற்று நம் நாட்டிலிருந்து விரைவில் அகலும் என்று நாம் நம்பலாம்.

 

 

 



(Release ID: 1627003) Visitor Counter : 221


Read this release in: English