PIB Headquarters

மோட்டார் வாகன ஆவணங்கள் காலாவதிக் காலத்தை நீட்டிப்பு செய்யும் முடிவுக்குப் பரவலான வரவேற்பு

Posted On: 26 MAY 2020 4:23PM by PIB Chennai

பல்வேறு மோட்டார் வாகன அனுமதிகளுக்கான தாமதக்கட்டணம் மற்றும் இதரக் கட்டணங்கள் வரும் ஜூலை 31 வரை வசூலிக்கப்படமாட்டாது என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், போக்குவரத்து அலுவலகங்களை அணுகி, மோட்டார் வாகனக் கட்டணங்களைச் செலுத்த முடியாமல் இருக்கும் மக்கள் இதனை வரவேற்றுள்ளனர். அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். கொவிட்-19 பரவல் இல்லாத மண்டலங்களில் இருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில், சோதனைக்கு எந்தவிதமான தளர்வும் இல்லை. இதனால், ஓட்டுநர்கள் அவ்வப்போதைய நிலவர விவரத்தை அறிந்திருக்க வேண்டியுள்ளது.

பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து காலாவதியான மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்கும் அரசின் முடிவு, லாரி ஓட்டுநர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் என லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். இந்த உத்தரவை, செயல்படுத்தும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் , அப்போதுதான் இதனை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், மக்கள் அதிகமாக தங்கள் சொந்த வாகனங்களில் வெளியே வருகின்றனர். பொதுப் போக்குவரத்து இயக்கப்படாததால், மக்கள் இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் பயன்படுத்துகின்றனர். திருச்சி புறநகர்ப்பகுதியில், ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது, 55776 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் மட்டும், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக, 17242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகனவரியைச் செலுத்துவதற்கு எந்தவித அபராதமும் இல்லாமல் அரசு காலநீட்டிப்பு செய்துள்ளதால், வாகன ஆவணங்களைச் சோதனையிடுவதால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறைந்து, அதிகாரிகள் கொவிட்-19 தொற்று தொடர்பான பணிகளில் முழுவதுமாக கவனம் செலுத்த வழி ஏற்பட்டுள்ளது.

காப்பி நிறுவனம் ஒன்றின் மூத்த சேவை நிர்வாகியான திரு. நாகேந்திரன், மோட்டார் வாகனச்சட்டம் மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள்  தொடர்பான ஆவணங்களின் காலாவதி காலநீட்டிப்பை வரவேற்றுள்ளார். காலநீட்டிப்புக் கோரிக்கைகள் சாலைப்போக்குவரத்து அலுவலகங்களில் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு இது நிம்மதியை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்த பின்னர் தாங்கள் மெதுவாக வேலைக்குத் திரும்பியுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் கிறிஸ்டோ கூறுகிறார். பொதுப்போக்குவரத்து , குறிப்பாக அரசுப்பேருந்துகள் இன்னும் இயங்காத நிலையிலும், தங்களுக்கு போதுமான சவாரிகள் கிடைக்கவில்லை என அவர் கூறுகிறார். ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்டால், சிறந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இவ்வாறு தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் நிலையில், உரிமங்கள், காப்பீடுபுதுப்பிப்பு போன்ற மோட்டார் வாகன ஆவணங்களுக்கு நீட்டிப்பு அளித்துள்ள முடிவு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

வாடகைக்கார் நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விட்டுள்ள உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளதாக திருச்சியைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் செந்தில் கூறியுள்ளார். போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுப்பித்தல் மனுக்கள் நிலுவையில் இருந்தாலும் அது செல்லுபடியாகும் என்ற அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளார். ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் காலாவதியான, தகுதிச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பதிவு ஆகியவற்றைப் புதுப்பிக்க ஜூன் 30 வரை காலத்தை நீட்டித்து அரசு முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில், வரி செலுத்துவதற்கான பொறுப்பை ரத்து செய்ய போக்குவரத்து வாகனங்கள் பயன்பாடு இல்லை என்ற பிரிவைப் பயன்படுத்தலாம். வாடகைக்கார்கள், பேருந்துகள் ஆகியவை இயங்கவில்லை என்பதற்குரிய வரி நிவாரணத்தை வாகன் ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்திப் பெறலாம். பிற மாநிலங்களில் சிக்கி, சொந்த ஊருக்கு வரமுடியாமல் தவிக்கும் ஏராளமானோர், தங்களது உரிமங்களைப் புதிப்பிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் அரசு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளது. உரிமம், பதிவு, அனுமதி ஆகியவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம், ஊரடங்கு காலத்தில் வாகன உரிமையாளர்களுக்கு நிச்சயம் உதவும்.

 

வாடகைக் கார் ஓட்டுநர் செந்தில், திருச்சி

T (2).jpeg

நாகேந்திரன் ஆர்எஸ், மூத்த சேவை நிர்வாகி, திருச்சி



(Release ID: 1626914) Visitor Counter : 364


Read this release in: English