PIB Headquarters

நெருக்கடி நேரத்தில் சிறப்புத் திறனாளிகளுக்கான கவனிப்பு.


முடக்கக் காலத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைய வகுப்புகளை வழங்குகிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Posted On: 25 MAY 2020 5:31PM by PIB Chennai

கோவிட்-19 முடக்கம் பல பிரச்சினைகளுக்கு வழி வகுத்திருக்கலாம், ஆனால், இது பிரச்சினைகளுக்குப் பல புதுமையான தீர்வுகள் ஏற்படவும் வழிவகுத்தது. மாணவர்களுக்குக் கல்வியையும், அறிவையும் போதிப்பதில் இணையதள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஆனால் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நிலை என்ன? முடக்கக் காலத்தில் அவர்கள் உண்மையிலேயே வகுப்புகளை இழந்தனர். சிக்கலான இந்த நேரத்தை, அவர்கள் சமாளிக்க,  அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, பரிவு ஆகியவை தேவை. முடக்கக் காலத்தில் பிசிஏ பட்டப்படிப்பு படிக்கும், பேச்சு மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்படுவதாக திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளி மைய இயக்குநர் டாக்டர் எம்.பிரபாவதி தெரிவித்தார். கூகுள் மீட் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் ஒவ்வொரு பிரிவினருக்கும் வாரத்துக்கு 2 வகுப்புகள் எடுக்கப்பட்டன. அவர்கள் என்ன புரிந்து கொண்டனர் என்பதை மதிப்பிட, குறும்படங்கள் தயாரிக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகள், ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அவை தனிப்பட்ட விதத்தில் தீர்க்கப்பட வேண்டும்.

ஆபிஸ் ஆட்டோமேஷன் மற்றும் அசிஸ்டிவ் தொழில்நுட்ப டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு ஆடியோ வழிமூலம் தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தப்பட்டதாக இயக்குநர் பிரபாவதி கூறினார். பின்னூட்டம் முக்கியம் என்பதால், அனைத்து இணைய வகுப்புகளின் பாடங்கள், கூகுள் கிளாஸ்ரூம்ஸ் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதன் மதிப்பீடு கூகுள் பார்ம்ஸ் மூலம் செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கற்பித்தலில், தாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் மிகப்பெரியது, இணையவழி கற்பித்தல் முறையை ஏற்பதில் அவர்கள் உணர்வுப்பூர்வமாக நிலையற்றவர்களாக இருந்தனர்.  அவர்களுக்கு அதிக அளவிலான ஊக்குவிப்பு தேவைப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை பயனுள்ள வகையில் கற்க வைப்பதில், அவர்களின் பெற்றோர்களின் உதவியும் நாடப்பட்டது. காதுகேளாத மாணவர்களுக்குத் தகுந்தபடி, கற்பிக்கும் முறைகள் வகுக்கப்பட வேண்டியிருந்தது. செய்கை மொழி மூலம் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியிருக்கிறது. கற்கும் திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அசைவுகளுடன் கற்பிக்க வேண்டியுள்ளது.

வலுக்கட்டாயமான செயல்பாடு அற்ற தன்மையால், முடக்கம், மாணவர்கள் மனதில் வெற்றிடத்தை  ஏற்படுத்தும். அங்கே, மாணவர்களின் ஆக்கப்பூர்வ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்களை ஆசிரியர்களால் ஊக்குவிக்க முடியும். புகைப்படவியல், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, நடனம் மற்றும் மாணவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபட அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் என டாக்டர்.பிரபாவதி கூறினார். தொலைதூர கிராமங்களில் வசிக்கும், சாதாரண கைபேசிகள் வைத்திருக்கும் மாணவர்களை அணுகுவதில் சிரமங்கள் இருந்தன. அவர்களால் கேட்கவும் முடியாது என்பதால், இணைவழிக் கற்பித்தல் அவர்களுக்கு சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டார். அத்தகைய மாணவர்களுக்கு பாடங்கள் அச்சிடப்பட்ட வடிவிலும், பிரெய்லி மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவேண்டும். அதேபோல், கலை, வண்ணம் தீட்டுதல், இசை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். இது போன்ற முயற்சிகள், பல வழிகளில் திறம்பட செயலாற்றக் கூடிய மாணவர்களுக்கு  தொடர்ந்து ஊக்குவிப்பாகவும், சிறந்த ஊக்குவிப்பாளராகவும் இருக்க வேண்டும் என அவர் கூறினார். பேச மற்றும் கேட்க முடியாத மாணவர்கள் பலர் பல நிகழ்ச்சிகளில் பாரம்பரிய பரதநாட்டியம் மற்றும் நாட்டுபுற நடனங்களில் ஈடுபட்டதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது பேச மற்றும் கேட்க முடியாத மாணவர்களுக்கு பிசிஏ (Bachelor of Computer Applications) பட்டப்படிப்பையும், ஒருங்கிணைந்த பயிற்சி மற்றும் மேம்பாட்டில் முதுநிலை பட்டயப்படிப்பையும்,  அடிப்படைக் கணிணிப் பட்டயப் படிப்பையும், அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஆபிஸ் ஆட்டோமேஷன், பார்வை மற்றும் கற்கும் திறன் குறைந்த மாணவர்களுக்கு ஆபிஸ் ஆட்டோமேஷன் மற்றும் அசிஸ்டிவ் டெக்னாலஜி பட்டயப் படிப்பையும் நடத்துகிறது. மனவளர்ச்சி குன்றிய மற்றும் கற்கும் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு அடிப்படை யோகா பயிற்சியில் சான்றிதழ் படிப்பையும் அவர்கள் நடத்துகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வானம் கூட எல்லை இல்லை, அறிவும் அவர்களை சென்றடைவதற்கு  அப்பால் இல்லை. அவர்களுக்கு இரக்கத்தைக் காட்டுவதை விடவும் உண்மையிலேயே சரியான வாய்ப்பும், ஊக்குவிப்பும் தேவை. பாரதிதாசன் பல்கலைக்கழக மையம் போல், ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மையத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போது நமது நாட்டை சிறப்புத் திறனாளிகள் அணுகக்கூடிய நாடாக மாற்ற முடியும்.  மத்திய அரசின் அணுகத்தக்க இந்தியா பிரசாரம், இந்தியாவை மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நாடாக மாற்றுவதில் மிகப் பெரிய நடவடிக்கை.

Description: T (1).jpeg

பாரதிதாசன் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகள் மையத்தின் இயக்குனர் டாக்டர். பிரபாவதி.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் மையத்தின் இணைய வகுப்பு.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மையம்

 

=======

 


(Release ID: 1626750) Visitor Counter : 316
Read this release in: English