PIB Headquarters

கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள தடைச் சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளதை பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் வரவேற்கின்றனர்.

Posted On: 24 MAY 2020 2:36PM by PIB Chennai

மாதாந்திரக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகையை ஆகஸ்டு மாத இறுதி வரை மேலும் மூன்று மாதங்களுக்கு  நீட்டிக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முடிவு வரவேற்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, கடன் தவணைகளைத் திரும்ப செலுத்துவதற்கு மூன்று மாத காலத்துக்கு தடைச் சலுகையை வழங்க வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அனுமதித்து மார்ச் 27-ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. பொதுமுடக்கம் தொடரும் காரணத்தால், தடைச் சலுகையை ஆகஸ்டு 31 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு  நீட்டிக்க இந்திய ரிசர்வ் வங்கி இன்னொரு உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் வரையிலான ஆறு மாத காலத்துக்கு கடனைத் திரும்ப செலுத்தாமல் இருப்பினும், கடன் கட்டத் தவறியவர் என்று கடன் தகவல் நிறுவனங்களுக்கு தகவல் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அறிவித்தார்.

 

கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு அறிவிக்கப்பட்ட தடைச் சலுகை ஒரு கருணைக் காலமே என்றும், அது கடன் தள்ளுபடி இல்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நபர் ஆகஸ்டு மாதம் வரை கடன் தவணைகளைச் செலுத்தாமல் இருப்பினும், அதற்காக அவர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மாட்டார் என்று நிதி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் முதல் ஆகஸ்டு வரை கடன் தவணைகளைத் திருப்பி செலுத்துவதற்கு தடைச் சலுகையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், செப்டம்பரில் தவணைகளை கடன் வாங்கியவர் செலுத்தலாம். செலுத்தப்படாதக் கடனுக்கான வட்டியை வங்கி வசூலிக்கும் மற்றும் கடன் காலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நீட்டிக்கும் என்பதால் இதில் சாதகங்கள், பாதகங்கள் இரண்டுமே உள்ளன.

இந்தத் துன்பமான காலக்கட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு ஒரு உதவியாக இந்தத் தடைச் சலுகை இருக்கும் என்று பொதுத்துறை வங்கியொன்றின் மூத்த மேலாளர் கூறுகிறார். ஆனால், கடன் வாங்கியவர்கள் வருங்காலத்தில் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும், இதற்கு வட்டியும் பொருந்தும். கடனைத் திரும்பச் செலுத்த தவணைகளை மேலும் நீட்டிக்குமாறு கடன் வாங்கியவர்கள் வங்கியைக் கேட்டுக்கொள்ளலாம். நிலையான சம்பள வருமானம் உள்ளவர்கள் தவணைகளைத் திரும்ப செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் கடனை சீக்கிரம் கட்டி முடித்து விட்டு மேலும் புதியக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பொதுமுடக்கத்தின் போது போதிய வருமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் தடைச் சலுகையை பயன்படுத்திக் கொள்வதை விட்டால் வேறு வழியில்லை.

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து வீடு கட்ட கடன் வாங்கி இருந்த திரு. பிரபாகரன், கொவிட்-19 நிவராணத் தொகுப்பின் ஒரு பகுதியாக, மார்ச்சில் இருந்து மே 2020 வரை கடன் தவணைகளைத்  தான் கட்ட வேண்டாமென்றும், அவரது அடுத்தத் தவணை ஜூன் 2020க்கு மாற்றியமைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். தற்போது இந்திய ரிசர்வ் வங்கி செய்துள்ள புது அறிவிப்பின் காரணமாக, கடனைத் திருப்பிக் கட்டுவதற்கான அடுத்தத் தவணை ஆறு மாதத் தடைக் காலத்துக்குப் பின் செப்டம்பரில் தான். ஆனால், வங்கி அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்ட அவர், தடைச் சலுகையை தான் பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும், கடன் தவணைகளைச் செலுத்தி விடுவதாகவும் கூறியிருக்கிறார். அதே சமயம், பொதுமுடக்கத்தின் போது நிலையான வருமானம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் தடைச் சலுகை கட்டாயமாக ஒரு வரம் ஆகும். லாரி ஒட்டுநர்கள், சிறு வணிகர்கள், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள், தேநீர்க் கடை உரிமையாளர்கள் போன்று பொதுமுடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அரசு வழங்கி இருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ள தடைச் சலுகையை வரவேற்கின்றனர். மாதாந்திரத் தவணைகளைக் கட்டுவதற்கு தங்கள் கைகளில் பணம் எதுவும் இல்லாமல் இருப்பதால், இந்தத் தடைச் சலுகைக் காலம் கட்டாயம் அவர்களுக்கு உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். கடனைத் திருப்பி செலுத்துவதற்கு ஆகஸ்டு வரை உள்ள சலுகை மிகவும் உதவிகரமாக உள்ளதாக புகைப்படக்காரரான திரு. பாண்டிதுரை தெரிவிக்கிறார். பொது முடக்கத்தின் போது வியாபாரம் இல்லாததால் வருமானமும் இல்லாமல் இருப்பதால், கடனைத் திரும்பச் செலுத்த அளித்த சலுகைக்காக அரசுக்கு அவர் நன்றி கூறுகிறார். ஆறு மாதம் கடன் தடைச் சலுகைக்காக அரசுக்குத் தான் நன்றியுடன் இருப்பதாக ஓட்டுநர் சசிகுமார் கூறுகிறார். பொதுமுடக்கத்தின் போது தனக்கு வருமானம் இல்லை என்பதால், பொதுமுடக்கம் முடிந்தவுடன் தனக்கு வருமானம் வரும் போது அவரால் கடனைக் கட்ட முடியும் என்கிறார். தான் ரூ 10,000 கடன் பெற்றிருப்பதாகக் கூறும் கரூர் குளித்தலையை சேர்ந்த தையல் கலைஞரான காஜா மைதீன், அதைத் திரும்ப செலுத்த மூன்று மாதங்கள் தடை ச்சலுகைக் கிடைத்ததாகக் கூறுகிறார். தற்போது இன்னும் மூன்று மாதங்கள் கூடுதல் காலம் கிடைத்திருப்பதால், மத்திய அரசுக்கு அவர் நன்றி கூறுகிறார். கரூர் குளித்தலையில் பெட்டிக் கடை வைத்திருக்கும் ஷாஜகான், தான் வங்கிக் கடன் பெற்றிருப்பதாகக் கூறுகிறார். கடனைத் திரும்பச் செலுத்த முதலில் மூன்று மாத காலம் தடைச் சலுகையை அளித்ததற்கும், பின்னர் அதை இன்னொரு மூன்று மாதங்களுக்கு நீட்டித்ததற்கும் மத்திய அரசுக்கு அவர் நன்றி கூறுகிறார். கொவிட்-19 பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலுக்கும், அதற்கேற்ற தீர்வோடு அரசு வருகிறது. வட்டிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது மற்றும் ஒட்டுமொத்த திரும்ப செலுத்தும் காலம் அதற்கு பின்னர் நீட்டிக்கப்பட்ட மாட்டாது என்பதைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் தடை சலுகையை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும்.

 

  • கே. தேவி பத்மநாபன், விவசாயிகள் தயாரிப்பாளர் நிறுவனம், திருச்சி

 

 



(Release ID: 1626573) Visitor Counter : 373


Read this release in: English