PIB Headquarters
ஆன்லைன் மூலமான ஸ்வயம் வகுப்புகள் டிஜிட்டல் இடைவெளியை நிரப்பியுள்ளது.
9 ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்ட வகுப்புக்கான கல்விக்குத் தேவையான நன்கு தயாரிக்கப்பட்ட பாடங்களை அளிக்கிறது.
Posted On:
23 MAY 2020 2:53PM by PIB Chennai
ஸ்வயம் (SWAYAM) என்ற ஆன்லைன் வகுப்பறை முனையம், மத்திய அரசால் 2017இல் தொடங்கப்பட்டது. முடக்கநிலை காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள ஒரு டிஜிட்டல் குருவாக இந்த முனையம் மாறியுள்ளது. கல்விக் கொள்கையின் மூன்று முக்கிய கோட்பாடுகளான - அணுகுதல் வசதி, சமத்துவம் மற்றும் தரம் - ஆகியவற்றை எட்டுவதை இலக்காகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பான கற்றல் வளங்களை அளிப்பதாக ஸ்வயம் உள்ளது. டிஜிட்டல் புரட்சி இன்னும் சென்றடையாமல் இருந்து, அறிவுசார் பொருளாதாரம் என்ற பிரதானப் பாதையில் இணைய முடியாமல் இருந்த மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் அந்த இடைவெளியை ஸ்வயம் நீக்கிவிட்டது.
கோவிட்-19 நோய்த் தாக்குதல், அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அறிவு மற்றும் கற்றலுக்காக ஏங்கும் மாணவர்களுக்கு உதவும் ஆபத்பாந்தவன் போல ஆன்லைன் வகுப்புகள் அமைந்துள்ளன.

பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி
ஸ்வயம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பாடங்கள், வீடியோ வகுப்புகளின் அடிப்படையில், விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கற்றலுக்கான விஷயங்கள், சுய மதிப்பீட்டு சோதனைகள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள ஆன்லைன் கலந்துரையாடல் கொண்டதாக இருக்கின்றன. ஆடியோ - வீடியோ மற்றும் மல்டி-மீடியா மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் கற்பித்தல் கலைகளைக் கொண்டதாக உருவாக்கி இருப்பதால் கற்றல் அனுபவத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் ஸ்வயம் ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது என்று திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்ட்பக்கழக இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார்.
ஸ்வயம் தளத்தில் 9 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்ட வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்குத் தேவையான பாடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஸ்வயம் தளத்தின் பத்தாவது தேசிய ஒருங்கிணைப்பாளராக திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்ட்பக்கழகம் (NIT) ஏற்கப்பட்டுள்ளதாகவும், பொறியியல் வகுப்புகளில் தாங்கள் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறினார். எங்கிருந்து வேண்டுமானாலும், கிராமப் பகுதிகளில் இருந்தும் கூட, யார் வேண்டுமானாலும், அணுகும் வகையில், அனைத்து பாடத் திட்டங்களுக்கான கற்பித்தலும் ஸ்வயம் வகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. எல்லா பாட வகுப்புகளுமே கலந்துரையாடக் கூடியதாக, நாட்டின் சிறந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாக, கற்றலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகக் கிடைப்பதாக உள்ளது. நாடு முழுக்கத் தேர்வு செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் பாடத் திட்டங்களைத் தயாரித்துள்ளனர்.
ஸ்வயம் தளத்துக்கு ஏற்கெனவே 9 ஒருங்கிணைப்பு அமைப்புகள் உள்ளன. சுய ஆர்வம் கொண்ட மற்றும் சர்வதேசப் பாடத் திட்டங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், பொறியியலில் தொழில்நுட்பத்தால் மேன்மைப்படுத்திய கற்றலுக்கு தேசிய கல்வித் திட்டம், தொழில்நுட்பம் அல்லாத முதுநிலை பட்ட வகுப்புக் கல்விக்கு பல்கலைக்கழக மானியக் குழு, இளநிலை பட்டக் கல்வித் திட்டங்களுக்கு கல்வித் தொடர்பியல் கூட்டமைப்பு, பள்ளிக் கல்விக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில், பள்ளிக் கல்விக்கு திறந்தநிலை பள்ளித் திட்ட தேசிய நிறுவனம், பள்ளிக்குச் செல்லாத மாணவர்களுக்கான கல்விக்காக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மேலாண்மைக் கல்விகளுக்கு பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மையியல் கல்வி நிலையம், ஆசிரியர் பயிற்சிக் கல்வித் திட்டங்களுக்கு தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் ஆகியவை உள்ளன. இதில் 10வது ஒருங்கிணைப்பாளராக திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்ட்பக்கழகம் இருக்கும். ஸ்வயம் மூலமாகப் படித்ததற்கு சான்றிதழ் வேண்டுவோர், குறைந்த அளவிலான கட்டணத்தைச் செலுத்தி தேர்வுக்குப் பதிவு செய்ய வேண்டும். குறிப்பிடப்படும் தேதியில், குறிப்பிடப்படும் மையத்தில் அவர்கள் தேர்வுக்கு நேரில் செல்ல வேண்டும். சான்றிதழுக்கான தகுதிகள் குறித்த விவரம், கல்வித் திட்டத்தின் பக்கத்தில் அறிவிக்கப்படும். இப்போதைய ஸ்வயம் தளத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை, கூகுள் மற்றும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் உதவியுடன் உருவாக்கியுள்ளன.
.

ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு
மாணவர் வி. பிரகதீஷ்
நகரங்களில் உள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைக்காத கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக ஸ்வயம் இருக்கும் என்று, திருச்சியில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்கூட ஆசிரியை திருமதி ஆனந்தி முத்தய்யன் கூறுகிறார். கோவிட்-19 பாதிப்பால் முடக்கநிலை அமலில் இருப்பதால், இழந்த கல்வி கற்பித்தல் நாட்களை ஈடு செய்வதற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஏற்கெனவே ஆன்லைன் வகுப்புகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஸ்வயம் தளத்தில் உள்ள பாடத் திட்டங்கள் எளிமையாகவும், புரிந்து கொள்ள எளிதாக, படங்களுடன் விளக்கம் தரப்பட்டிருப்பதாக திருச்சியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்தார். நேரடியாகவே வகுப்பில் இருப்பதைப் போன்ற உணர்வை ஸ்வயம் தருகிறது என்று திருச்சி புதூர் உத்தமனூரை சேர்ந்த மாணவி காயத்ரி கூறினார். டிஜிட்டல் இடைவெளியை அகற்றும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது என்று திருச்சியைச் சேர்ந்த முதுகலைப் பட்ட வகுப்பு மாணவி எஸ். கவுசல்யா தெரிவித்தார். இது இலவசமாக அளிக்கப்படுவதால், மாணவர்கள் மட்டுமின்றி, அறிவுத் தாகம் உள்ள எல்லோரும் ஸ்வயம் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு தலைப்பிலும் ஏராளமான தகவல்கள் தரப்பட்டிருப்பதால், ஒரே இடத்தில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள உதவும் டிஜிட்டல் வழிகாட்டியாக ஸ்வயம் உள்ளது என்று பெரம்பலூரைச் சேர்ந்த இளங்கலை பட்ட வகுப்பு மாணவி சி. பிரியதர்ஷினி கூறினார். மாணவர்களுக்குத் தமிழக அரசு இலவசமாக லேப்டாப்கள் வழங்கியுள்ளது. இலவச இன்டர்நெட் வசதியும் இருப்பதால், ஸ்வயம் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
வசதிகள் கிடைக்காத நிலையில் இருப்பவர்களுக்கு, வசதிகளை கிடைக்கச் செய்வது அரசின் நோக்கமாக உள்ளது. டிஜிட்டல் வழிமுறையில் அனைவருக்கும் கல்வி கற்பித்தல் மூலமாக, அனைவருக்கும் அறிவுத் திறனை கொண்டு சேர்க்கும் லட்சிய தொலைநோக்கு இலக்கு நிச்சயம் நிறைவேறும்.
(Release ID: 1626369)
Visitor Counter : 644