PIB Headquarters

சுவாச மண்டலத்துக்கு சுகமளிக்கும் மூலிகை முகக்கவசம்

Posted On: 23 MAY 2020 2:12PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுப் பரவலானது இந்தியாவின் உள்ளுறை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது. மக்கள் தொகை என்று மட்டுமே பார்க்கப்பட்ட குடிமக்களை மனித வள ஆற்றலாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை இந்த நெருக்கடிச் சூழல் ஏற்படுத்தி உள்ளது.  மே-12ல் உரையாற்றிய இந்தியப் பிரதமர் “கொரோனா தொற்று உலகின் பல்வேறு பகுதிகளில் பரவத் தொடங்கிய போது இந்தியாவில் ஒரு பாதுகபாபுக் கவச உடைகூட உற்பத்தி செய்யப்படவில்லை. அதே போன்று என்-95 முகக்கவசத்தின் பெயரைக் கூட கேள்விப்பட்டது கிடையாது.  ஆனால் இன்று நாளொன்றுக்கு 2 லட்சம் பாதுகாப்பு கவசங்களும் 2 லட்சம் என்-95 முகக்கவசங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன”, என்று குறிப்பிட்டு இருந்தார்.  தேவையும் அவசரகால நெருக்கடியும் மக்களிடம் உள்ளுறைந்து இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளன.  நாட்டின் ஒட்டுமொத்த திறன் மட்டுமல்லாது தனிநபர்களின் ஆற்றல், புத்தாக்கம், மனிதநேயம், அறிவு ஆகியனவும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஆச்சரியப்படத்தக்க அளவில் வெளிப்பட்டு உள்ளன.

அந்த வகையில்தான் வேலூரைச் சேர்ந்த இளம் சித்த மருத்துவரும் ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவச் சேவை மையத்தைச் சேர்ந்தவருமான ட.பாஸ்கரன் மூலிகை முகக்கவசத்தை உருவாக்கி உள்ளார்.  கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி ஆகிய மூன்றும் அரசால் வலியுறுத்தப்படுகின்றன.  எனவே இன்னும் சில மாதங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் முகக்கவசத்துடன்தான் சென்றாக வேண்டும்.

மூலிகை முக கவசங்கள் விநியோகம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சுசி கண்ணம்மாள், ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் வி.விக்ரம் குமார் ஆகியோர் நாள் முழுவதும் அரசு ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டிருப்பதில் எரிச்சலும் வேதனையும் அடைவதை அறிந்து மாற்று வழியைத் தேடிக் கொண்டிருந்தனர்.  இதமளிக்கும் முகக்கவசத்தை தயாரிக்கும் பணியை மருத்துவர் பாஸ்கரனிடம் இவர்கள் ஒப்படைத்தனர்.

டாக்டர் பாஸ்கரும் பாரம்பரிய சித்த மருத்துவர்களுடன் சேர்ந்து கூட்டாகச் சிற்சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மூலிகை முகக்கவசத்தைத் தயாரித்து ஆட்சியர் சிவனருளிடம் வழங்கினார்.  நற்பலனுடன் மூலிகை முகக்கவசம் இருப்பதை அனுபவித்து உணர்ந்த ஆட்சியர் சிவனருள் உடனடியாக 3000 சாதாரண முகக்கவசங்களை டாக்டர் பாஸ்கரனிடம் ஒப்படைத்து மூலிகை முகக்கவசமாக மாற்றித் தருமாறு கூறினார்.  பிறகு அவற்றை அரசு அலுவலர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் விநியோகித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் டாக்டர் பாஸ்கரன் மூலிகை முக கவசம் வழங்குகிறார்.

இதை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.சண்முகசுந்தரமும் டாக்டர் பாஸ்கரனை வரச் செய்து மூலிகை முகக்கவசத்தை அணிந்து பரிசீலித்துப் பார்த்த பிறகு அவரும் 3000 மூலிகை முகக்கவசங்கள் செய்து தருமாறு கூறினார். வேலூர் மாவட்டத்திலும் அனைத்து களப்பணியாளர்களுக்கும் மூலிகை முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. 

மூலிகை முகக்கவசத்தை எப்படி தயாரித்தீர்கள் என டாக்டர் பாஸ்கரிடம் கேட்டபோது, ”கிராம்பு, திருநீற்றுப்பச்சிலை, புதினா உப்பு, கற்பூரவள்ளி மற்றும் திரவ ஆவி வடித்தல் முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை சாரங்கள் ஆகியவற்றை பாரம்பரிய சித்த வைத்திய முறைப்படி கலந்து தயாரித்தோம்” என்றார். மேலும் அவர் இதனை நாங்கள் சேவை அடிப்படியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு இலவசமாகத் தயாரித்துத் தருகின்றோம் என்றார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் இந்த நறுமணம் மிக்க மூலிகைக் கவசம் எல்லோரின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்றும் அதை நிரந்தமாகத் தொடர்ந்து செய்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். 

இந்த மூலிகை முகக்கவசத்தை டாக்டர் பாஸ்கரன் தயாரிக்க மூலகாரணமாக இருந்த ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார மைய சித்த மருத்துவ அலுவலர் விக்ரம்குமார் ”ஏதோ மூலிகைச் செடிகள் நிறைந்த காட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு என் நாசிக்குள் ஏற்படுகிறது, தொண்டைப் பகுதியைத் தாண்டி மூச்சுக்குழாய் வரை மூலிகைகளின் நெடி நுழைவதை உணர முடிகிறது.  ஆவி பிடித்தல் போன்ற உணர்வும் சுகமும் கிடைக்கிறது” என மூலிகை முகக்கவசத்தைப் பயன்படுத்தி பார்த்துவிட்டு கூறுகின்றார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ டாக்டர் சஞ்சய்காந்தி ”மூலிகை முகக்கவசம் புதுமையாகவும் பயன் உள்ளதாகவும் இருக்கிறது.  இதை அணிந்தவுடன் 10 நிமிடங்களில் புத்துணர்ச்சி கிடைக்கிறது.  சுவாசமண்டலம் சீராகிறது.  இவற்றை தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மின்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இலவசமாக வழங்கி உள்ளோம்” என்று கூறுகிறார். 

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலக உதவி இயக்குனர் தி.சிவக்குமார் டாக்டர் பாஸ்கரனிடம் இருந்து மூலிகை முகக்கவசங்களை வரவழைத்து அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளவர்களுக்கும் வழங்கி இருந்தார்.  ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலர் (சித்தா) டாக்டர் இரா.இரத்தினமாலா ”மூலிகை முகக்கவசத்தை அணிந்தவுடன் இதமான நறுமணம் எனது மூக்கு, தொண்டை, நெஞ்சு பகுதிக்குள் நுழைவதை உணர்ந்தேன்.  உடலுக்கு மட்டுமல்லாமல் மனதிற்கும் நன்றாக இருக்கிறது.  மூலிகை வாசம் நெடுநேரம் தங்கி இருப்பது போன்று இந்த முகக்கவசத்தை தயாரிக்க வேண்டும்.  வாய்ப் பகுதியில் சிலருக்கு விறுவிறுப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.  சிறு சிறு குறைகளை நீக்கி விட்டால் இந்த முகக்கவசமானது வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறுகிறார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் டாக்டர் பாஸ்கரன் மூலிகை முக கவசம் வழங்குகிறார்.

மூலிகை முகக்கவசப் பயன்பாடு கொரோனா நெருக்கடி காலத்தோடு முடிந்து விடாது.  இதனை மேலும் செம்மைப்படுத்தி தயாரித்தால் வருங்காலத்தில் காற்று மாசுபாட்டுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.  நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முதல் கட்ட சிகிச்சையாகக்கூட இது பயன்படலாம்.  கோவிட்-19 காலகட்டத்தில் வெளிப்படுகின்ற நமது இளைஞர்களின் அர்ப்பணிப்பு, அறிவியல் உணர்வு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை நாடு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

 



(Release ID: 1626368) Visitor Counter : 569