PIB Headquarters

குடும்ப வன்முறைகளுக்கு எதிரான புகார்களை பெறப்போகின்றனர் அங்கன்வாடி பணியாளர்கள்

Posted On: 22 MAY 2020 4:26PM by PIB Chennai

முடக்க காலத்தில் நடக்கும் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான புகார்களை பெறும்படி தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கோவிட்-19 தொற்றால் அறிவிக்கப்பட்ட முடக்கம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும் அச்சத்துக்கு வழிவகுத்துவிட்டது. குடும்ப வன்முறைகளுக்கு எதிரான புகார்களைப் பெற, அங்கன்வாடி பணியாளர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு நடவடிக்கை எடுத்துள்ளது. கிராமங்களில் உள்ள பெண்களை, அங்கன்வாடி பணியாளர்களால் எளிதில் அணுக முடியும். கோவிட்-19 முடக்க காலத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், www.icds.tn.nic.in என்ற வெப்சைட்டில் அங்கன்வாடி பணியாளர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று தங்களது புகார்களை அளிக்கலாம். 181, 1091, 122 போன்ற அவசர எண்களிலும் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான புகார்களை அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர்  திரு.அன்பழகன் கூறியுள்ளார். குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கன்வாடி பணியாளர்களிடம் புகார் அளிக்கும்படி, அரியலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா வலியுறுத்தியுள்ளார்.

முடக்க காலத்தில் குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கையை திருச்சிராப்பள்ளி சமூக நலத்துறை எடுத்து வருகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒன் ஸ்டாப் மையங்கள் உதவி செய்து வருகின்றன. அவைகள் மருத்துவ உதவி, போலீஸ் உதவி, உளவியல் சமூக ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை அளிக்கின்றன. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, குடும்ப வன்முறை தொடர்பான புகார்களை அங்கன்வாடி பணியாளர்கள் பெற்று குடும்ப ஆலோசனை மையங்களுக்கு அனுப்பி வருவதாக கரூர் கிருஷ்ணராயபுரம் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி திருமதி. குறள்செல்வி கூறினார்.

முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் திருச்சிராப்பள்ளி காவல்துறையும் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், கடந்த 4 ஆண்டுகளாக, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட 13 ஆயிரம் பேரை தொடர்பு கொள்ளும் மிகப் பெரிய நடவடிக்கையை காவல்துறை தொடங்கியது.  முடக்க காலத்தின் தொடக்கத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் 15 ஆய்வாளர்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும், வன்முறைகள் மீண்டும் நடக்காததையும் உறுதி செய்தனர்.

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து வரும் பொது மக்களின் புகார்கள் கூகுள் மீட் செயலி மூலம் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை கேட்கப்படும் என திருச்சி டிஐஜி திரு.வி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், டிஐஜி அலுவலகத்தை 0431-2333909 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் பெயர் மற்றும் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறையை தடுக்க அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இப்போது தேவையானது. இந்த மோசமான கொடுமையில் இருந்து சமூகத்தை காக்கும் பொறுப்பு ஒவ்வொருக்கும் உள்ளது.



(Release ID: 1626079) Visitor Counter : 552


Read this release in: English