PIB Headquarters

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ‘இல்லம் திரும்புவோம்’ என்ற திட்டத்தின் கீழ் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்

1565 சிறப்பு ரயில்கள் மூலமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இல்லம் திரும்பினர்

Posted On: 19 MAY 2020 5:04PM by PIB Chennai

நாட்டின் உயிர்நாடியான இந்திய ரயில்வே, கோவிட்-19 பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட பெருஞ்சவாலான புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாலை சமாளித்து உள்ளது. மாவட்ட ஆட்சியாளர்களிடமிருந்து வேண்டுகோள் வரப் பெற்றதையடுத்து, அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலிருந்து, அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய தயாராக உள்ளதாக ரயில்வே தெரிவித்திருந்தது. இதுவரை 1565 சிறப்பு ரயில்கள் மூலமாக ரயில்வே துறையால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1,400 க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோ அருகே அக்பர்பூர் வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர். இந்தத் தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். முதல்கட்டமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 254 புலம்பெயர் தொழிலாளர்கள் கரூரிலிருந்து பேருந்து மூலம் திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சமூக விலகியிருத்தலைத் தொடர்ந்து பின்பற்றினர். அவர்கள் கைகளைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டன. கோவிட்-19 காலத்தில் சமூக விலகியிருத்தலைக் கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகள் பற்றி, அந்தத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு அவர்கள் திருச்சி சந்திப்பிலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் செல்வதற்காக திருச்சிக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

மாவட்ட அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, கரூர் மாவட்டத்தில் பதினான்கு மாநிலங்களைச் சேர்ந்த 7,779 புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் 2802 பேர் கரூர் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 254 பேர்; மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 72 பேர்;  பீகாரைச் சேர்ந்தவர்கள் 604 பேர்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் 936 பேர். தாங்கள் ஊர் திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்து தந்தமைக்காகவும், உணவும் உறையுளும் வழங்கியதற்காகவும் மத்திய மாநில அரசுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக பெரம்பலூர் மாவட்டத்திலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 120 பேருக்கு, 1.10 லட்சம் ரூபாய், ரயில் கட்டணமாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் செலுத்தியது. அவர்கள் பெரம்பலூரிலிருந்து திருச்சி சந்திப்புக்கு, பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். போக்குவரத்து கட்டணமாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவுப் பொட்டலங்களும், குடிநீரும் வழங்கப்பட்டது.

 

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், நம் மாநிலத்திலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக மட்டுமல்ல; பிற மாநிலங்களிலுள்ள, நம் மாநிலத் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வருவதற்காகவும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களைச் சேர்ந்த 494 தொழிலாளர்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக மகாராஷ்டிராவில் உள்ள பூனேயிலிருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு செவ்வாய்க்கிழமையன்று வந்து சேர்ந்தனர். சிறப்பு பேருந்துகள் மூலமாக அதிகாரிகளால் இவர்கள், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

சிறப்பு ரயில் மூலமாக டெல்லியிலிருந்து 558 பேர் திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு திங்களன்று அழைத்துவரப்பட்டனர். இந்தப் பயணிகள், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் மற்றும் தஞ்சாவூர் உட்பட 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். திருச்சிராப்பள்ளியிலிருந்து 64 பேர் இரண்டு பேருந்துகள் மூலமாக சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்படும் வசதி செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இந்த முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள். நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 292 பயணிகளுக்கு கோவிட்-19 உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களைச் சேர்ந்த 962 புலம்பெயர் தொழிலாளர்கள், மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு, பேருந்துகள் மூலமாக அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

 

குடும்பத்தாருடன் மீண்டும் ஒன்று சேர வேண்டும்; எதிர்பாராத நெருக்கடி காலத்தில், எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்று சேர்ந்துவிட வேண்டும்; என்பது போன்ற மனதை நெகிழவைக்கும் பல கதைகளை கோவிட்-19 பொது முடக்கம் கொண்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் முகங்களில் தெரியும் மிகப் பெரும் நிம்மதி, அவர்களுக்கும் மத்திய அரசுக்கும், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கிய இந்திய ரயில்வேக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இந்த நற்செயலை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி.

திருச்சி சந்திப்பில் பாதுகாப்பான தொலைவில் புலம்பெயர் தொழிலாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர்

திருச்சி சந்திப்பில், ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் ஏறவிருக்கின்ற ஒரு புலம்பெயர் தொழிலாளி

சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக பெண்கள் பாதுகாப்பான தொலைவில் நிற்கின்றனர் - இடம் திருச்சிராப்பள்ளி சந்திப்பு

ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் செல்வதற்காக, பேருந்து மூலம் திருச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்



(Release ID: 1625148) Visitor Counter : 209