PIB Headquarters

பிஎம் இ-வித்யா திட்டம் கல்வித்துறையில் டிஜிட்டல் புரட்சியை விரைவுபடுத்தும் ஊரடங்கின் போது மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் வகுப்புகள் பிரபல்யம்

Posted On: 18 MAY 2020 5:55PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட நெடுங்கால ஊரடங்கால் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட துறையாக கல்வித்துறை உள்ளது.  கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிக்கூடங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று அரசு கண்டிப்பாக ஆணையிட்டு உள்ளது.  அதனால் பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்காலத்தை நீட்டித்து உள்ளன.  ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் அறிவைப் பெறுவதுதான் சிறந்த வழியாக உள்ளது.  கல்வி கற்பிப்பதற்கு குறிப்பாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையே தற்போது பயன்படுத்துகின்றன.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்தரா பல்கலைக்கழகம் பி.டெக் மாணவர்களுக்கான இன்டர்னெல் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி உள்ளது.  பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூகுள் கிளாஸ் ரூம் வழியாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆன்லைன் வகுப்புகளை எடுத்தனர்.  கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  பெரம்பலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவி அய்னுல்ஜரியா ஊரடங்கால் தன்னால் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்.  ஆனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தன்னால் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிகிறது என்றும் ஊரடங்கிற்குப் பிறகு பருவத் தேர்வுகளை எழுத இது உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.  பெரம்பலூர் வேப்பந்தட்டையைச் சேர்ந்த பொறியியல் மாணவி தஸ்லீமா ஆன்லைன் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஊரடங்கின் போது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட உதவுவதாகவும் குறிப்பிடுகிறார்.  வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு ஆஃப்லைனில் படிக்க முடிகிறது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பொறியியல் மாணவி கிருத்திகா மிக விரைவில் பிஎம் இ-வித்யா திட்டம் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி என்கிறார்.  ஊரடங்கின் போது வகுப்புகள் நடத்தப்படாததால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அதே போன்று மாணவர்கள் புராஜெக்ட் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாமல் உள்ளனர் என்று கூறுபவர் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தனது ஆசிரியர்களுடன கலந்துரையாடவும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் முடிகிறது எனத் தெரிவிக்கிறார்.  பள்ளிக் கல்விக்கான தீக்‌ஷா என்னும் செயலி, 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பிரத்யேக டிவி சேனல், பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்பு இ-பாடங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக பிஎம் இ-வித்யா திட்டம் இருக்கும்.

தனது www.swayam.gov. வலைத்தளத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கற்பதற்கான தீக்‌ஷா என்னும் போர்டலைச் செயல்படுத்துகிறது.  இதில் 12ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி மற்றும் மாநிலக் கல்வி வாரியங்கள் ஆகியவற்றின் இ-புத்தகங்கள் 80,000க்கும் மேல் உள்ளன. கூகுள் பிளே-ஸ்டோர் மூலம் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அல்லது www.epathsala.gov. என்ற வலைத்தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.  பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி அமிர்தா ஜும் மற்றும் ஸ்கைப் மூலம் நிறைய ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதாகக் கூறுகிறார்.  அவரது படிப்புக்கு இந்த ஆன்லைன் வகுப்புகள் உண்மையில் பெருமளவில் உதவியாக இருக்கின்றன என அவர் மேலும் தெரிவிக்கிறார். ஆன்லைனில் பரதநாட்டிய வகுப்பில்கூட கலந்து கொள்வதாக அவர்  கூறுகிறார்.  படிப்போடு தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் அவருக்கு இது உதவியாக இருக்கிறது.  திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் எஸ்.சிவரத்தினவேல் அவரது பள்ளி நிர்வாகம் கூறியவாறு மீட் செயலியை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களுடன் சாட்பாக்ஸ் மூலம் கலந்துரையாட முடிவதால் வகுப்பறையில் இருப்பது போன்ற உணர்வு கிடைப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். கூகுள் கிளாஸ் ரூம் செயலியின் கலந்துரையாடல் உதவிகரமாக இருப்பதோடு ஆக்கப்பூர்வமாகன வகுப்புகளால் பொதுத்தேர்வு குறித்த பயம் இல்லாமல் போய்விட்டது என்கிறார். 

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எழுத விரும்புபவர்களுக்காக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்த தனிப்பயிற்சி வகுப்புகளும் கோவிட்-19 ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு உள்ளன.  வேலைவாய்ப்புக்காக தேர்வு எழுத முயற்சி செய்யும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்  கற்றுக் கொள்ள விரும்பும் நபர்கள் வீட்டில் இருந்தபடியே வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.  போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஊரகப் பகுதி நபர்களுக்கும்  பயிற்சி அளிப்பதும் முக்கிய நோக்கம் ஆகும்.  வேலை தேடுவோர் https://tamilnaducareerservices.tn.gov. என்ற வலைத்தளத்தில் லாக்-ஆன் செய்யலாம்.

தொழில்நுட்பம் மூலமாக கல்வி என்பதுதான் புதிய தாரக மந்திரம் ஆகும்.  ஏனெனில் கற்பதற்கும் அறிவைப் பெறுவதற்கும் எதுவும் தடையாக இருக்க முடியாது. கல்வித் துறையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதில் ஒரு மைல்கல்லாக பிஎம் இ-வித்யா என்றென்றும் நினைவில் நிற்கும்.

அமிர்தா – பத்தாம் வகுப்பு மாணவி

கிருத்திகா – பொறியியல் மாணவி, திருச்சிராப்பள்ளி

கரூர் ஆட்சியர் அன்பழகன் – கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பை ஆய்வு செய்கிறார்.

சிவரத்தினவேல் – பத்தாம் வகுப்பு மாணவர்



(Release ID: 1624892) Visitor Counter : 219