PIB Headquarters

வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த நவீனப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன விவசாயத் திட்டம்

Posted On: 15 MAY 2020 7:07PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நாட்டில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க அதிகம் உழைக்க வேண்டும் என்பதற்காக நமது விவசாயிகளின் முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வந்து விட்டது. எனவே, உழவர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்காக, மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை அறிவித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மூன்று கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரூ.30,000 கோடி கூடுதல் மறுக்கடனை நபார்டு வழங்கும். நவீன தொழில்நுட்பமும், சிறந்த வேளாண் முறைகளும் பயிர் மகசூலையும், விவசாயிகளின் வருவாயையும்  அதிகரிக்க உதவும்.

 

66 துணை-ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் உள்ள 4778 குளங்களின் செப்பனிடுதலை செய்து முடிக்கும் வகையில், உலக வங்கி நிதி உதவியோடு நவீனப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன விவசாயத் திட்டம் தமிழ் நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. 5 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கும், 5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கும் இது நன்மை பயக்கும். இந்தத் திட்டத்தின் மதிப்பு    ரூ 2962 கோடி என்றும், இது 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

 

தமிழ்நாடு நவீனப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன விவசாயத் திட்டம் இரண்டு கட்டங்களாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. உலக வங்கியின் நிதி உதவி பெற்ற இந்தத் திட்டம், மாவட்டத்தின் 12 வட்டாரங்களில் உள்ள காவிரி, பொன்னையாறு, நந்தியாறு, குலையாறு, அய்யாறு மற்றும் கரைப்பொட்டனாறு ஆற்றுப் பள்ளத்தாக்குகளை சீரமைக்கும். ஒவ்வொருத் துளி நீரையும்   சிறப்பாகப் பயன்படுத்தி விவசாயியின் லாபத்தைப் பெருக்குவதே இந்த திட்டத்தின் தலையாய நோக்கமாகும். நீர்நிலைகளை வலுப்படுத்துவதன் மூலம் பயிர்களின் தீவிரத்தை 300 சதவீதம் வரை அதிகரிக்க இது இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக திருச்சிராப்பள்ளிக்கு 2020-21ஆம் ஆண்டுக்காக ரூ 82.98 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் வருவாயை அதிகப்படுத்த வேளாண் துறை உதவுகிறது. மேலும், தரமான சான்றளிக்கப்பட்ட விதைகளையும், உயிரி கட்டுப்பாட்டு ஊக்கிகளையும் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. பருப்புகள், எண்ணெய் வித்துகள் மற்றும் தினைக்கு ஒரு செயல் விளக்கத்துக்கு ரூ 5000மும், பசுமை உர பருப்புகள் வரிசை செயல் விளக்கத்துக்கு ரூ 10,000மும் வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளியில் நந்தியாறூ-குலையாறு ஆற்றுப் பள்ளத்தாக்கின் கீழ், நெல், சோளம் மற்றும் பசுமை உர பயிர்களுக்காக ரூ 11.5 லட்சம் மதிப்பில் 175 வேளாண் செயல் முறைகள் நடத்தப்பட்டன. எடங்கிமங்கலம் கிராமத்தில் 20 முற்போக்கு விவசாயிகளுடன் பருப்புகள் மற்றும் பசுமை உரத்துக்காக இரண்டு விதை கிராம குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரமான விதை உற்பத்திக்காக ரூ 50,000 சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

 

சொட்டு நீர் பாசனத்துக்காக தனக்கு 100 சதவீதம் மானியம் கிடைத்ததாக திருச்சிராப்பள்ளி கனகயிலாய நல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான தனபால் கூறுகிறார். நிலக்கடலை மற்றும் உளுந்துக்கு அது மிகவும் உதவியாக இருந்ததாக அவர் கூறுகிறார். அந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால், ஒரு ஏக்கருக்குக் கூட அவரால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆனால், சொட்டு நீர் பாசனம் மூலமாக அவரால் தற்போது இரண்டரை ஏக்கர்களுக்கு விவசாயம் செய்ய முடிகிறது.

 

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் தரமான விதைகள் விதை, மாற்று விகிதத்தை அதிகரிக்கவும், உழவர்கள் சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும் உதவுவதாக வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர். உற்பத்தித் திறனை அதிகரிக்க இது உதவுகிறது. பயிர் உற்பத்தித் திறனையும் சிறந்த மேலாண்மை முறைகளையும் அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறைகள் அழுத்தம் கொடுக்கின்றன. பசுமை உர பயிர்கள், அரிசி தீவிரத்துக்கான முறை, அரிசி தரிசு நில பருப்புகள், சோளம், ராகி, கம்பு, சிறு தானியங்கள், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகள் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப செயல்முறை கையாள்கிறது. அரிசி அறுவடைக்கு பிறகு அந்த நிலத்தை மீதமுள்ள ஈரப்பதத்துடன் பருப்புகளை விளைவிக்கப் பயன்படுத்துவதே அரிசி தரிசு நில பருப்புகள் ஆகும். இப்படி, நமது விவசாயிகளின் கடுமையான உழைப்புக்கு பல்வேறுத் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் துணை நின்று, விவசாயத்தை நிலையானதாக ஆக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

 

<புகைப்பட விளக்கங்கள்>

 

மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப விவசாயத்தின் மூலம் திருச்சி கிராமத்தில் மக்காச்சோளம்.

திருச்சி கிராமத்தில் களையெடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்தும் விவசாயி.

 

எடங்கிமங்கலம் கிராமத்தில் மண்டல ஆய்வில் ஈடுபட்டிருகும் வேளாண் அலுவலர்கள்.

 

திருச்சி நந்தியாறு-சுலையாறு ஆற்றுப் பள்ளத்தாக்கில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்ப விவசாயத்தின் மூலம் முறையான அரிசித் தீவிரப்படுத்துதல்

 

***



(Release ID: 1624137) Visitor Counter : 178