PIB Headquarters

மிகவும் குறைவான அறிகுறிகள்/அறிகுறிகள் இல்லாத கொவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டல்கள் - பகுதி-2.

Posted On: 15 MAY 2020 3:45PM by PIB Chennai

இணைப்பு II

 

பராமரிப்பு அளிப்பவர்களுக்கான விதிமுறைகள்

 

* முகக்கவசம்: பாதிக்கப்பட்ட நபருடன் ஒரே அறையில் இருக்கும் போது மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தை, பராமரிப்பு அளிப்பவர்கள் சரியாக அணிய வேண்டும். முகக்கவசத்தின் முன் பகுதியைப் பயன்படுத்தும் போது தொடவோ, கையாளவோக் கூடாது. திரவச் சுரப்பின் காரணமாக முகக்கவசம் ஈரமானாலோ அல்லது அழுக்கானாலோ, அதை உடனடியாக மாற்ற வேண்டும். பயன்படுத்திய பின் முகக்கவசத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவும். அதன் பிறகு கையை சுத்தப்படுத்தவும்.

 

* உங்களின் முகம், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

 

* பாதிக்கப்பட்ட நபருடனோ அல்லது அவரது உடனடி சுற்றுப்புறத்துடனோ தொடர்பு ஏற்பட்டால் கையை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

 

* உணவு தயாரிப்பதற்கு முன்பும், பின்பும், சாப்பிடுவதற்கு முன், கழிப்பறையைப் பயன்படுத்தியதற்கு பின், மற்றும் எப்போதெல்லாம் கைகள் அழுக்காகத் தென்படுகிறதோ, அப்போதெல்லாம் கைகளைச் சுத்தப்படுத்துதல் வேண்டும். கைகளில் வெளிப்படையாக அழுக்கு இல்லையென்றால், கைகளில் தடவக்கூடிய ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தலாம்.

 

* சோப் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்திய பின்னர், கைகளைத் துடைப்பதற்கு தூக்கி எறியக் கூடிய காகிதத் துண்டுகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. அவை கிடைக்கவில்லை என்றால், இதற்காகவே ஒதுக்கப்பட்ட சுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி, அவை ஈரமான பின்பு அவற்றை மாற்றி விடவும்.

 

* நோயாளியுடன் இருக்கும் போது: நோயாளியின் உடம்பில் சுரக்கும் திரவங்களுடன், குறிப்பாக வாய் மற்றும் சுவாச திரவங்களில் இருந்து, நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும். நோயாளியைக் கையாளும் போது தூக்கி எறியக்கூடிய கையுறைகளைப் பயன்படுத்தவும். கையுறைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் கைகளைச் சுத்தப்படுத்தவும்.

 

* தொற்று பரவக் கூடிய வாய்ப்புள்ள பொருள்களை அவரது உடனடி சுற்றுப்புறத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் (உதாரணம்: சிகரெட்டுகள், உணவுப் பாத்திரங்கள், உணவு வகைகள், பானங்கள், உபயோகப்படுத்திய துண்டுகள் அல்லது மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல்).

 

* நோயாளிக்கு அவரது அறையிலேயே உணவு வழங்கப்பட வேண்டும்.

 

* நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை கையுறை அணிந்து கொண்டு சோப்/டிடர்ஜெண்ட் உபயோகப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள், தட்டுகள் ஆகியவற்றை மறுபடியும் பயன்படுத்தலாம் கையுறையை அப்புறப்படுத்திய பின்னரும், பயன்படுத்திய பொருள்களைக் கையாண்ட பின்னரும் கைகளைச் சுத்தப்படுத்துங்கள்.

 

* வெளிப்பரப்புகளைச் சுத்தப்படுத்தும் போதும், நோயாளி பயன்படுத்திய துணிகள் அல்லது மெத்தை விரிப்பைத் துவைக்கும் போதும், மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தையும், தூக்கி எறியக்கூடிய கையுறைகளையும் பயன்படுத்தவும். கையுறைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்னரும் பின்னரும் கைகளைச் சுத்தப்படுத்துவும்.

 

* பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சையை நோயாளி பின்பற்றுவதை பராமரிப்பு அளிப்பவர் உறுதி செய்ய வேண்டும்.

 

* தங்களுடைய தினசரி உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம் பராமரிப்பு அளிப்பவரும், நோயாளியின் நெருங்கிய தொடர்பில் இருப்பவரும் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து, கொவிட்-19 தொடர்பான அறிகுறி (காய்ச்சல்/இருமல்/மூச்சு விட சிரமம்) ஏதாவது இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

 

நோயாளிக்கான விதிமுறைகள்

 

* அனைத்து நேரங்களிலும் மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசத்தை நோயாளி அணிய வேண்டும். எட்டு மணி நேர பயன்பாட்டுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன் முகக்கவசம் ஈரம் அல்லது வெளியில் தெரியும் படி அழுக்கானாலோ அதை அப்புறப்படுத்த வேண்டும்.

 

* ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ-குளோரைட்டில் கிருமி விலக்கல் செய்த பின்பே முகக்கவசத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

 

* தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறையில் மட்டுமே நோயாளி தங்க வேண்டும், வீட்டிலுள்ளவர்களிடம் இருந்து, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறு நீரக நோய் போன்ற இணை நோய்கள் உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

 

* நோயாளிகள் நன்றாக ஓய்வெடுத்து, உடலில் நீர்ச் சத்தைப் பராமரிக்க நிறைய திரவங்களைப் பருக வேண்டும்.

 

* சுவாச ஒழுங்குமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

 

* குறைந்தது 40 நொடிகளுக்கு சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை  அடிக்கடி கழுவ வேண்டும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்

 

* உங்களது சொந்த உபயோகப் பொருள்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

 

* அறையில் உள்ள அடிக்கடித் தொடக்கூடிய இடங்களை (மேஜையின் மேற்புறங்கள், கதவுக் குமிழ், கைப்பிடிகள் இன்னும் பல) ஒரு சதவீதம் ஹைப்போ-க்ளோரைட் திரவத்தால் சுத்தப்படுத்தவும்.

 

* மருத்துவரின் அறிவுறுத்தல்களையும் மருத்துவ அறிவுரையையும் நோயாளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

* தங்களுடைய தினசரி உடல் வெப்பத்தை சோதிப்பதன் மூலம், நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே கண்காணித்து, கொவிட்-19 தொடர்பான அறிகுறி ஏதாவது இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

***



(Release ID: 1624062) Visitor Counter : 271