PIB Headquarters

ஜவுளித் துறைக்கு சமர்த் மற்றும் திறன் இந்தியா திட்டம் ஊக்கம் அளிக்கிறது



அரசு உதவியுடன் அனைத்து வலிமையோடும் மீண்டெழலாம் என்று ஜவுளித்தொழில் நம்புகிறது.

Posted On: 14 MAY 2020 7:02PM by PIB Chennai

கோவிட் நெருக்கடி காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, ஜவுளித் துறையையும், ஜவுளித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு பல்வேறு தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கைப் பாதுகாப்புடன் மீண்டும் செயல்படத் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியுள்ளது.  முன்னெச்சரிக்கை மற்றும் கோவிட்-19 முன்தடுப்பு நடவடிக்கைகளைக் கையாண்டு தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவது எப்படி என்பது குறித்த விரிவான நெறிமுறைகளை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NDMA) வெளியிட்டுள்ளது. 

ஒரு தொழிற்சாலையை மீண்டும் இயக்கும் போது அனைத்து பாதுகாப்பு செயல்திட்டங்களையும் உறுதிபடுத்திய பிறகு முதல் வாரமானது முன்னோட்ட அல்லது முன்பரிசோதனைக் காலமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய பேரிடர் ஆணையத்தின் (National Disaster Management Authority - NDMA) வழிகாட்டி நெறிமுறைகள் குறிப்பிடுகின்றன. இந்த காலகட்டத்தில் நிறுவனங்கள் அதிக உற்பத்தி இலக்குகளை அடைய வேண்டும் என்று முயற்சி செய்யக் கூடாது.  தொழிற்சாலை வளாகங்களை 24 மணி நேரமும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளைக் கடைபிடித்து ஜவுளித் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கி உள்ளன என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. கே.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.  ஜவுளித் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி கடைபிடிக்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு.ராஜா சண்முகம் கோயம்புத்தூர் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தோடு பேசும் போது கோவிட்-19 ஊரடங்கு, ஜவுளித் தொழிலின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.  உலகச் சந்தையே மூடப்பட்டு இருக்கும் இந்தச்சூழல் ஜவுளித்தொழிலை பாதித்துள்ளது, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலனையும், தொழிற்சாலைகளின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் செலுத்த வேண்டிய தொழிலாளர் ஈட்டுறுதி மாதாந்திர பங்குத் தொகைக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். தற்போதை சமச்சீரின்மையை முடித்து வைக்க தொழிற்சாலைகளுக்கு நிதி உதவியும் தேவை என்று அவர் தெரிவித்தார்.  திருப்பூரில் உள்ள நெசவாளர் சமுதாயத்தினருக்கு மத்திய அரசின் சமர்த் திட்டம் மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மகளிர்கள் ஊக்கமுடன் உள்ளனர்.

2017இல் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகம் (MOT) சமர்த் என்று அழைக்கப்படும் “ஜவுளித் துறையில் திறன் கட்டமைப்புத் திட்டம் (SCBTS) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  ஆடை தைத்தல், பதப்படுத்துதல், செயற்கை இழைகள் போன்ற பல்வேறு ஜவுளிப் பிரிவுகளிலும் மற்றும் சணல், சில்க், கைத்தறி, கைவினை போன்ற பாரம்பரியத் தொழில் பிரிவுகளை உள்ளடக்கிய ஏனைய அமைப்புசாரா ஜவுளிப் பிரிவுகளிலும் ஈடுபட்டுள்ள தொழில் திறன் குறைவான தொழிலாளர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் சமர்த் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த ஜவுளி பிரிவுகளின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்படும்.

திருப்பூரில் உள்ள மகிழம் ட்ரஸ்டைச் சேர்ந்த திரு நடராஜ், மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்துடன் இணைந்து மகளிர் சுய வேலைவாய்ப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திறன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும் தாங்கள் கைத்தறிப் பிரிவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளைக்கோவிலைச் சேர்ந்த திருமிகு சத்யா, திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நெசவாளர் பயிற்சியை தான் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.  இந்தப் பயிற்சி தனக்கு நம்பிக்கையை அளித்து உள்ளதாகவும் தங்களது பகுதியில் உள்ள பலருக்கும் இந்தப் பயிற்சி குறித்து தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  மேலும் அவர் இந்தப் பயிற்சிக்காக மத்திய அரசுக்கு நன்றியும் தெரிவித்தார்.

திருப்பூர் வெள்ளைக்கோவிலைச் சேர்ந்த திருமிகு கிரேசி ஏஞ்சல் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் நெசவாளர் பயிற்சி பெற்றதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.  தனது பெற்றோர் ஈடுபட்டுள்ள நெசவுத் தொழிலைப் பார்த்து தானும் அதில் ஈடுபட வேண்டும் என்ற ஆசையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற்றதாகவும் அதனால் இப்போது பெற்றோர்களுக்கு உதவியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த திருமிகு ஜெயலஷ்மி கைத்தறி நெசவாளர் பயிற்சி குறித்து தான் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அந்தப் பயிற்சியை பெற்று விட்டதாகவும் தெரிவித்தார். 

ஜவுளி நகரமான திருப்பூர் மக்களின் வாழ்க்கையில் கோவிட்-19 ஊரடங்கு பலவித சிரமங்களை ஏற்படுத்தி இருந்தாலும், இந்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. இதன் மூலம் நெருப்பில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை மீண்டெழுந்தது போன்று, தாங்களும் எழ முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

 

 


(Release ID: 1623861) Visitor Counter : 91


Read this release in: English