PIB Headquarters
கூட்டு விவசாயம்: தொடர் விவசாயத்திற்கு நம்பிக்கையையும், தன்னிறைவையும் அளிக்கும் வழி.
விவசாய இயந்திரங்கள் வாங்குவதற்காக திருச்சியைச் சேர்ந்த
231 விவசாய உற்பத்தியாளர் குழுவினருக்கு 7.5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது.
Posted On:
12 MAY 2020 6:24PM by PIB Chennai
கோவிட்-19 தொடர்பான சமீபத்திய பரிசீலனைக் கூட்டமொன்றில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து நாட்டில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளின் பங்கை மேலும் வலுப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. கோவிட்-19 பொது முடக்கம் விவசாயிகளைப் பாதித்துள்ளது. எனவே விவசாயிகளுடன் ஒன்றிணைந்திருக்கிறோம் என்பதும், ஒற்றுமையாக உள்ளோம் என்கிற செய்தியும் அவர்களுக்குச் சென்றடைய வேண்டிய தேவை உள்ளது. கூட்டு விவசாயம், விவசாயிகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. நேரிடக்கூடிய அபாயங்கள், உரங்கள் வாங்குவது; டிராக்டர்கள், டில்லர்கள் போன்ற விவசாயக் கருவிகள் வாங்குவது ஆகியவற்றுக்கான செலவினங்களைப் பங்கிட்டுக் கொள்வதால் இந்தப் பாதுகாப்பு உணர்வு விவசாயிகளுக்குக் கிடைக்கிறது.
நம் நாட்டில் உள்ள விவசாய நிலங்கள், பரவிக்கிடக்கின்றன. இதில் 85 சதவிகிதம் நிலங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொந்தமானவை. எனவே விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் கூட்டாகப் பணியாற்ற உதவி, வயல் நிலங்களை அதிகபட்சம் பயன்படுத்தும் வகையில், அவர்களுக்கு உதவி செய்கின்றன. மொத்தம் பத்தாயிரம் புதிய விவசாய உற்பத்தி அமைப்புகளை வளர்த்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 2000 குழுக்களை இந்த நடப்பாண்டில் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2017-18ஆம் ஆண்டில் 2000 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு குழுவிற்கும் ஐந்து இலட்சம் ரூபாய் கார்ப்பஸ் நிதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 171 வேளாண் விவசாயிகள் - விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளன. தோட்டக்கலை விவசாய உற்பத்திக் குழுக்கள் 60 இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை உதவி இயக்குநர் திரு.மோகன் தெரிவித்துள்ளார். டிராக்டர்கள் மற்றும் டில்லர்கள் உட்பட விவசாயக் கருவிகள் வாங்குவதற்காக 7.65கோடி ரூபாய் விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020- 21 நிதியாண்டில், 78 விவசாய உற்பத்திக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் மானியமாக 3.75 இலட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. முதலில் விவசாய ஊக்குவிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும், 20 விவசாயிகள் இருப்பார்கள். இதுபோன்ற 5 குழுக்கள் ஒன்றிணைந்து, 100 உறுப்பினர்களுடன் விவசாய உற்பத்தி அமைப்பாக ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார். திருச்சியில் புள்ளம்பாடி வட்டத்தில் (பிளாக்), 7 டிராக்டர்கள், 9 பவர் டில்லர்கள், 9 மின் களையெடுப்பான்கள் (பவர் வீடர்கள்), 2 பல் கொண்ட பயிர் அடிப்பான்கள் (மல்டி க்ராப் த்ராஷெர்கள்) ஆகியவை 15 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
2017- 18 ஆம் ஆண்டில் விவசாயத்துறை, ஐந்து விவசாயக் குழுக்களை ஏற்படுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொண்டதாக திருச்சி ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் கூறுகிறார். அதன்படி, அவர்கள் குழுக்களை ஏற்படுத்தினர். அதன்பின் 15 உறுப்பினர் கொண்ட விவசாய உற்பத்திக் குழுவை ஏற்படுத்தினர். அதன் பிறகு விவசாயத்துறையிடமிருந்து டிராக்டர் வாங்குவதற்காக, அவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது என்று அவர் கூறினார். இந்த டிராக்டர் குறைந்த விலையில் வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் டிப்பர் ஒன்று வாங்கப்பட்டது. அந்த டிப்பரும் சலுகை விலையில் வாடகைக்கு விடப்பட்டு, குழுவின் கார்ப்பஸ் தொகை அதிகரித்தது. கூட்டு விவசாயத்தின் மூலம் கூட்டு விவசாயம் - கூட்டு பணயம் வைப்பது என்பது விவசாயக் கருவிகள் வாங்குவதற்கு மிகவும் நம்பத்தகுந்த தன்னிறைவை அளிப்பதாக உள்ளது. இவ்வாறாக விவசாய சேவைகளுக்கான ஒட்டுமொத்த செலவு குறைகிறது.
கூட்டு விவசாயம் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளின் நோக்கம், சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலாபகரமான வகையில் வாழ்வாதாரம் கிடைப்பதற்கு உதவி செய்வதேயாகும். இரண்டு இலட்சம் சிறு விவசாயிகள் பயனடையும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 2000 விவசாய உற்பத்தியாளர் குழுக்களை அமைப்பதே இலக்கு.
திருச்சியிலுள்ள மருங்காபுரி வேம்பனூர் விவசாய உற்பத்தியாளர் குழு
விவசாய உற்பத்தியாளர் குழுவினருடன் விவசாயத்துறை அதிகாரிகள்
திருச்சி தாத்தையங்கார்பேட்டை விவசாய உற்பத்தியாளர் குழுவினர், வேர்க்கடலை அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்
திருச்சி மருங்காபுரி வேம்பானூரில் உள்ள விவசாய உற்பத்தியாளர் குழு
(Release ID: 1623322)
Visitor Counter : 542