PIB Headquarters

நெருக்கடியான காலகட்டத்தில் சிறப்புப்பிரிவு மக்கள் குறித்தும் சிந்தித்தல்!

காது கேட்காதவர்கள் குறிப்புமொழி மூலம் உணர்ந்து தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையிலான சிறப்பு முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.

Posted On: 11 MAY 2020 5:14PM by PIB Chennai

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்று உள்ளவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகமும் கோவிட்-19 தொற்றைத் தடுப்பதற்கு சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதும் தன்சுத்தத்தைப் பராமரிப்பதும் முக்கியமான நடவடிக்கைகள் என்று ஆலோசனை கூறியுள்ளது. தன்சுத்தத்தைப் பராமரிப்பதற்கு முகக்கவசம், அதிலும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் முகக்கவசங்களே போதுமானவை ஆகும்.  திருச்சி மாவட்ட ஆட்சியர் உட்பட பல மாவட்ட ஆட்சியர்களும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  மே17ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில் அரசு அறிவித்துள்ள சில குறிப்பிட்ட கட்டுப்பாட்டுத் தளர்வுகளானது பொது மக்கள் அடிக்கடி வெளியில் வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது.  எந்தக் காரணமாக இருந்தாலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு தீவிரமாக அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சூழலில் காது கேட்காத நபர்கள் குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் குறிப்பு மொழி மூலமும், உச்சரிக்கும் உதடுகளைக் கவனிப்பதன் மூலமும் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர்.  எனவே இவர்களுக்கு உதவ வேண்டும் என்றால், அதாவது காது கேட்காத நபர் நாம் சொல்வதை நமது உதடுகள் உச்சரிப்பின் மூலம் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், நாம் அவர்களால் எளிதில் பார்க்க முடிகின்ற முகக்கவசத்தை அணிந்தாக வேண்டும்.

டாக்டர் ஏ. மொகம்மத் ஹக்கீம் திருச்சி களவிளம்பர அதிகாரியிடம் பேசும் போது, காது கேளாத நபர்களுக்கு உதவும் வகையில் நாம் எல்லோரும் அணிந்து கொள்ளும் ஒரு சிறப்பு முகக்கவசத்தை தான் உருவாக்கி உள்ளதாகக் கூறினார்.  திருச்சிராப்பள்ளியின் துவரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் மருத்துவரும் அவசரநிலை மருத்துவருமான இவர் காதுகேளாத நபர்கள் மற்றவர்கள் பேசுவதை உதடுகளின் அசைவுகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து அவர்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு அதற்கு எதிர்வினை ஆற்றுவார்கள்.  வழக்கமான முகக்கவசம் என்பது மூக்கு மற்றும் உதடுகளை மூடும் வகையிலும் கண்கள் மட்டும் மூடாமலும் தயாரிக்கப்பட்டிருக்கும்.  இது காது கேளாதவர்கள் தகவல் பரிமாற்றச் செயலைப் புரிந்து கொள்வதற்குத் தடை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வாய்ப்பகுதி வெளியில் தெரிவது போன்ற முகக்கவசங்களானது காது கேளாதோர் உதடு அசைவைப் படித்து குறிப்பு மொழியை எளிதில் புரிந்து கொள்ள உதவும். காதுகேளாதோர் தொடர்பியலில் புதுவிதமான தடைகளைச் சந்தித்து வருவதாக அவர் கூறுகிறார். இவர்களால் காணொளிக் காட்சி மூலமான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமுடியாது.  ஏனெனில், இதில் பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் மூக்கை மட்டும் இன்றி வாயையும் முழுவதுமாக மூடும் முகக்கவசத்தையே அணிந்து இருப்பார்கள். ஆனால் தான் உருவாக்கியுள்ள முகக்கவசங்கள் என்95 தரநிலை முகக்கவசங்கள் தரும் பாதுகாப்பைத் தரும் அதாவது 95 சதவிகிதம் பாக்டீரியா மற்றும் நுண்துகள் பொருள்களை வடிகட்டும் திறன் இந்த முகக்கவசங்களுக்கு உண்டு என்று டாக்டர் தெரிவிக்கிறார்.  காதுகளில் மாட்டிக்கொள்ளக்கூடிய சுருங்கி நீளும் எலாஸ்டிக் கயிறுகளுடன், பயன்படுத்துவதற்கு எளிதான பொருள்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கவசத்தின் மூக்குப்பிடிப்புப் பகுதியின் வடிவமைப்பு அணிபவரின் வசதிக்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளும் வகையில் உள்ளது. ரப்பர் பொருளால் தயாரிக்கப்படாத இந்த முகக்கவசம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, ஒளி ஊடுறுவும் தாளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகக்கவசத்தின் வடிவமைப்புக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக டாக்டர். மொகம்மத் ஹக்கீம் தெரிவிக்கிறார். ஒரு முகக்கவசத்துக்கான தயாரிப்பு செலவு 100 ரூபாய் ஆக இருந்தாலும், இதனை இலவசமாக வழங்குவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.  இத்தகைய 1000 முகக்கவசங்களைத் தயாரித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக விநியோகிக்க இருப்பதாக டாக்டர் கூறியுள்ளார். முகக்கவசங்களை தொண்டு நிறுவனங்கள் மூலமும், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கான நல்வாழ்வு ஆணையரகம் மூலமும் விநியோகிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைத் தொகுப்பின்படி பார்த்தால் கோவிட்-19 தொற்று மேலும் சில மாதங்களுக்கு நீடித்து இருக்கும் என்ற சூழலில் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தான் யதார்த்தம் என்ற நிலைக்கு உலகம் வந்திருக்கிறது.  நம்மை வைரஸ் தாக்குவதில் இருந்து தடுத்துக் கொள்ளவதற்கான சிறந்த கேடயமாக முகக்கவசம் இருக்கும் அதே சமயத்தில், இதை அணிவதால் மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்குத் தடையாகவும் இருந்துவிடக் கூடாது.  தனிப்பட்ட வகையான தேவைகள் உடைய மக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களால் வெளிப்படையாக பார்க்க முடிகின்ற முகக்கவசங்கள் போன்ற சிறப்புப் பொருள்களை வடிவமைப்பது என்பது ஒரு தொடக்கநிலையே ஆகும்.  நமது தேசம் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியான காலகட்டத்தில் அனைவருக்கும் பொதுவான மற்றும் பலன் தரும் சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கிய ஒரு நடவடிக்கையாக இது இருக்கிறது. 



(Release ID: 1623000) Visitor Counter : 131