PIB Headquarters
தவித்துக் கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மகிழ்ச்சி அளித்துள்ளது
இந்திய ரயில்வே 350-க்கும் அதிகமான ரயில்களை இயக்கி 3.5 இலட்சம் தொழிலாளர்களை அவர்களது வீடுகளுக்குக் கொண்டு சென்றது
Posted On:
11 MAY 2020 5:11PM by PIB Chennai
முன் எப்போதும் கண்டிராத உலக சுகாதாரச் சவாலான கொவிட்-19 தொற்றால், தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, அதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தினக்கூலிக்கு வேலை செய்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ஊரடங்கால், அனைத்து விதமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால், தங்கள் வீட்டுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இருப்பினும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்கி முறையாகக் கவனிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, கோவை நகர காவல்துறை ஆணையர் திரு. சுமித்சரண், கோவையில் தங்கியிருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க ஐந்து சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளார். தொழிலாளர்களுக்குத் தற்போது நிலவும் சூழல் பற்றி தெரிவித்து, அவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவுவதுடன், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆகியோர் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர பிரிவினரை, மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த விதிமுறைகளுக்கு ஏற்ப, தொழிலாளர் தினத்திலிருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.
சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களை, சொந்த மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி, முனையத்திலிருந்து முனையம் வரை என்னும் விதிமுறைகளின்படி, இந்தச்சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களை சுமுகமாக இயக்குவதற்கு உரிய அதிகாரிகளாக ரயில்வேயும், மாநில அரசுகளும் மூத்த அதிகாரிகளை நியமித்துள்ளன.
பயணிகள் அனைவரும், அனுப்புகின்ற மாநிலங்களால் பரிசோதிக்கப்பட்டு, நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கான பயணச்செலவை அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்திலிருந்து முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில், மாவட்டத்திலிருந்த 1140 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பீகாருக்குக் கிளம்பியது.
ஷ்ராமிக் ரயில்களில் ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கும், இளைஞர்கள் முதல் முதியோர் வரை அவர்களது குடும்பத்தினருக்கும் இது பெரும் நிம்மதியை அளித்தது.
மாநில அரசு வலைதளத்தில் (www.nonresidenttamil.org) பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வரும் நாட்களில் மற்றொரு சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் திரு. கே.ராஜாமணி தெரிவித்துள்ளார். இதில் ஜார்க்கண்ட், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்.
ரயில்வே அதிகாரிகளின் தகவலின்படி, இதுவரை இரண்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் (எண். 06103 & 06104) உத்தரப்பிரதேசம் அக்பர்பூர், ஜாவுன்பூர் ஆகிய இடங்களுக்கு 08.05 மணிக்கும், இரண்டு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் (எண். 06107 & 06107) பீகார் மாநிலம் சஹர்சா, தானாப்பூர் ஆகிய இடங்களுக்கு 09.05 மணிக்கும் கோவை ரயில் நிலையத்திலிருந்து பறப்பட்டன. ஒவ்வொரு ரயிலிலும் 1140 பயணிகள் இருந்தனர்.
சுகாதாரத்துறை சுகாதாரப் பரிசோதனையும், வெப்பமானி சோதனையும் மேற்கொண்டு வருகிறது. இதே போல, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பாக அவர்களது ஊர்களுக்கு கொண்டு செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்திய ரயில்வே இதுவரை 350-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கி 3.5 இலட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டு சேர்த்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலை வழியனுப்புகின்றனர்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர்

சுகாதாரப் பணியாளர்கள் தொற்று அறிகுறி உள்ளதா எனத் தொழிலாளர்களைப் பரிசோதிக்கின்றனர்
(Release ID: 1622997)
Visitor Counter : 154