PIB Headquarters

வந்தே பாரத் இயக்கம்- இந்தியர்களின் கவலை படர்ந்த முகங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவித்துக்கொண்டிருக்கும் 15000 இந்தியர்களை தாயகம் கொண்டுவர ஏர் இந்தியா விமானங்கள் பறக்கின்றன.

Posted On: 09 MAY 2020 3:58PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக பல நாடுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இந்தியர்களைத் தாயகத்துக்கு திரும்ப அழைத்து வருவதை வந்தே பாரத் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும், தாய்நாட்டில் உள்ள அவர்களது உற்றார், உறவினருக்கும் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. அபுதாபி மற்றும் துபாயிலிருந்து இரண்டு விமானங்கள் மே 7-ஆம் தேதி  கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் வந்து இறங்கியது முதல்,  வந்தே பாரத் இயக்கம் தொடங்கியுள்ளது. இயக்கத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை, 152 பயணிகள், 25 குழந்தைகள், 5 பச்சிளம் குழந்தைகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கொச்சி சர்வதேச விமானநிலயத்தில் வந்திறங்கியது. வந்தே பாரத் இயக்கம் மிகவும் விரிவான அதே நேரம் சிக்கலான வெளியேற்றத் திட்டமாகும் என சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். இந்த இயக்கம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருவதுடன் நில்லாமல், அவர்களைப் பரிசோதனை செய்து ,தனிமைப்படுத்தி, இதர ஏற்பாடுகளைச் செய்வது வரை நீடிக்கிறது. இதனை குடிமக்களுக்காக அரசு மேற்கொள்கிறது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, 10 நாடுகளில் உள்ள 15000 இந்தியர்களை மே 7 முதல் 13-ஆம்தேதி வரை, 64 விமானங்கள் மூலம் கொண்டு வருவதற்காக வந்தே பாரத் இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர், ரியாத், லண்டன், டாக்கா, கோலாலம்பூர் போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் இருந்து, சென்னை, திருச்சி, மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களுக்கு இந்தியர்களைக் கொண்டு வருவதற்காக, 41 ஏர் இந்தியா விமானங்கள், 27 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ஒரு வார காலத்துக்கு இயக்கப்படுகின்றன. பிலிப்பைன்சின் மணிலாவில் தவிக்கும் இந்தியப் பயணிகளை மே 14-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஏற்றிக் கொண்டு மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு சென்னை வந்து சேரும். பங்களாதேசின் டாக்காவிலிருந்து மற்றொரு விமானம் அதே நாளில் சென்னை வந்து சேரத் திட்டமிடப்பட்டுள்ளது.  கொச்சியிலிருந்து சென்னைக்கு மே 12-ஆம் தேதியும், மே 13-ஆம் தேதி மும்பையிலிருந்து சென்னைக்கும், பின் திரும்பவும் விமானங்கள் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து விமானங்களும் கடைசி நேர மாற்றத்துக்கு உட்பட்டவை என அதிகாரிகள் கூறியுள்ளனர். 23 விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்திய நகரங்களுக்கு சேவையை மேற்கொள்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அட்டவணை தெரிவிக்கிறது. கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு மே 9-ஆம் தேதி சனிக்கிழமை ஒரு விமானம் வரவிருக்கிறது. மற்றொரு விமானம் சிங்கப்பூரிலிருந்து மே 10-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.35 மணிக்கு திருச்சி வந்தடையத் திட்டமிட்டுள்ளது. மே 10-ஆம் தேதி, துபாயிலிருந்து இரண்டு விமானங்களும், குவைத்திலிருந்து ஒரு விமானமும், மே 11-ஆம் தேதி  கோலாலம்பூரிலிருந்து ஒரு விமானமும், மே 12-ஆம் தேதி மஸ்கட்டிலிருந்து ஒரு விமானமும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சென்னைக்கு இயக்கத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் 177 குறைந்த கட்டண இருக்கைகள் உள்ளன.

வந்தே பாரத் இயக்கம் வழக்கமான வெறும் வெளியேற்றத் திட்டம் அல்ல. அது வெளிநாடுகளில் அவதிக்குள்ளாகியிருக்கும் உறவினர்கள் பற்றி குடும்பத்தினரின் கவலை தோய்ந்த உணர்வுடன் கூடிய நடவடிக்கையாகும். மத்திய தமிழகத்தைச் சேர்ந்த திருமதி உஷா சுபராஜன், தனது இரண்டு மகன்களில் ஒருவர் பெல்ஜியத்திலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் உள்ளதாகத் தெரவிக்கிறார். விடுமுறையில் ஊருக்கு வரவேண்டிய அவர்கள், கொவிட்-19 பிரச்சினையால் விமானங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகக் கவலை தெரிவிக்கிறார். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை நமது அரசு வந்தே பாரத் இயக்கம் மூலம் தாயகம் அழைத்து வருவதைப் போல, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களையும் கொண்டு வந்து அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

சிறப்பு விமானங்களில் வருவோருக்கு கொவிட்-19 அறிகுறிகள் இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்த திருச்சியில் நான்கு இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கரூரில், வந்தே பாரத் இயக்கம் மூலம் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்படுபவர்களுக்காக ஏற்பாடுகள் செய்வது பற்றி மாவட்ட  ஆட்சியர் அன்பழகன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளளார். திருச்சி விமான நிலையத்திலிருந்து  இந்தப் பயணிகளை அழைத்து வர சிறப்புப்பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை உள்ளதா எனப் பரிசோதிக்கப்படும். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஊரடங்குக்கு முன்பு வளைகுடா நாட்டிலிருந்து வந்த திரு. சுரேஷ் என்பவர், ஊர் திரும்ப வேண்டும் என்று விரும்பியவர்களின் பிரார்த்தனைக்கு கிடைத்த விடை தான் ‘வந்தே பாரத் இயக்கம்’ என்று கூறினார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற பெரிய எழுத்துக்கள் தாங்கிய விமானம் ஓடுபாதையில் தரை இறங்குவதை, விமான நிலையத்தில் இருந்தவாறு பார்ப்பவர்களுக்கு அது எளிதில் மறக்கமுடியாத ஒரு காட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தாயகத்துக்குத் திரும்ப வேண்டும் என்று தவித்தவர்களை ஏர் இந்தியா கொண்டு வந்து சேர்த்திருப்பது பெரிய நிம்மதியை நிச்சயம் அளிக்கும். 

வெளிநாடுகளில் கடின உழைப்பை மேற்கொண்டுள்ள இந்தியர்கள், தாங்கள் ஈட்டும் பணத்தை தங்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்காக அனுப்பி வைப்பதுடன் , நாட்டுக்கும் பல வழிகளில் உதவுகின்றனர். இப்போது அவர்களைப் பத்திரமாகத் தாயகத்துக்கு கொண்டு வந்து, அதற்கு நன்றி செலுத்தும் நேரம் இது. இந்த நெருக்கடியான நேரத்தில், ஏர் இந்தியா மகாராஜா தனது கவர்ச்சி மற்றும் கம்பீரம் மூலம் உயர்ந்து நிற்கிறார்.

வெளிநாடுகளில் இருக்கும் தனது குழந்தைகள் பற்றிக் கவலைப்படும் தாயார் திருமதி. உஷா சுபராஜன்

 திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

 

பஹ்ரைனிலிருந்து வந்தே பாரத் இயக்கம் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் வந்த பயணிகள் கொச்சி விமான நிலையத்தில் இறங்குகின்றனர்


(Release ID: 1622654) Visitor Counter : 315


Read this release in: English