PIB Headquarters

தொழில் திறன்மிக்க இந்தியா திட்டம் பொது முடக்க நிலை காலத்தில் இளைஞர்களுக்கான வரப்பிரசாதம்

கற்றுக் கொண்ட திறன்களை வைத்து வீடுகளில் இருந்தே பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள்

Posted On: 09 MAY 2020 3:37PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பொது முடக்க நிலை காலத்தில் பணிப் பயிற்சியில் இருப்பவர்களுக்கான, பயிற்சிக்கால உதவித் தொகை முழுவதையும்  அனைத்துத் தொழில் நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்று மத்திய தொழில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (எம்.எஸ்.எம்.இ.) துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நெருக்கடியான சமயத்தில் மக்கள் நலனைக் கருத்தில்  கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசிய பணிப் பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் (நேப்ஸ்) கீழ், பயிற்சிக் கால உதவித் தொகையை முடக்கநிலை காலத்தில் அரசு வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காலத்தில், நாடு முழுக்க உள்ள தேசிய தொழில் திறன் பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதிகளை தனிமைப்படுத்தல் பகுதிகளாகப் பயன்படுத்தலாம் என்று அமைச்சகம் முடிவு செய்தது.

தொழில் திறன்மிக்க இந்தியா என்ற லட்சியத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் பல்வேறு  தொழில்களில் பயிற்சி பெற்ற சுமார் ஒரு லட்சம் பேரின் பட்டியலை இந்த அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு அளித்துள்ளது.

கோவிட்-19 தொற்று தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவசர சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் பணிகளில் உதவியாக இருக்கும் இந்த சுமார் ஒரு லட்சம் பேரும் பின்வரும் வேலைகளில் பயிற்சி பெற்றுள்ளனர்:

பிரதமர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சுகாதார பயிற்சியாளர் (92,040 பேர்)

அவசர கால மருத்துவ டெக்னீசியன் (அடிப்படை) - (989 பேர்)

ரேடியாலஜி: (373 பேர்)

ஹோம் ஹெல்த் உதவியாளர்: (1644 பேர்)

எக்ஸ்-ரே டெக்னீசியன்: (299 பேர்)

பொதுப் பணி நேர உதவியாளர் : 10,172 பேர்

முன் கள சுகாதார ஊழியர்: 530 பேர்

ஃப்ளிபாட்டமி டெக்னீசியன்கள் : 334 பேர்

வேலை தேடுபவர்கள் புதிய தொழில் திறன்களை கற்றுக் கொண்டு, பல்வேறு துறைகளில் வேலை தேடிக் கொள்வதற்கு தேசிய தொழில் திறன் மேம்பாட்டுக் கார்ப்பரேசன் (என்.எஸ்.டி.சி.) ஊக்குவிக்கிறது. என்.எஸ்.டி.சி.யின் இணையவழி கற்றல் தொகுப்பு, இணையவழி தொழில் திறன் இந்தியா இணையதளங்களில், 400க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கற்பித்தலுக்கான அறிவை வழங்கும் நிபுணர்களால் இந்த பாடப் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இணையவழி தொழில் திறன் இந்தியா இணையதளத்தில், உலகின் முன்னணி நிறுவனங்களின் இணையவழி கற்றல் திட்டங்களின் ஒத்துழைப்புடன் பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு பல வகையான பயிற்சிகள் அளிக்கும்படி இவை அமைந்துள்ளன. பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மதிப்பீட்டுடன் இணைந்து, இந்திய இளைஞர்களுக்கு உலக தரத்திலான ஆங்கில மொழி வளத்தை அளிக்க என்.எஸ்.டி.சி. முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்கு இலவச ஆப் வசதி அளிப்பது மட்டுமின்றி, ஒரு லட்சம் பேருக்கு சான்றிதழ்கள் வழங்கவும் இதில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தொழில் நிபுணத்துவ பயிற்சித் திட்டங்கள் மற்றும் சான்றிதழுக்கு, வீட்டில் இருந்தே பணிபுரிபவர்களும், கார்ப்பரேட் ஊழியர்களும் இந்த நேரத்தில் பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

தொழில் திறன் பயிற்சித் திட்டத்தில் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப் பட்டிருப்பதாக, தொழில் பயிற்சித் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் கோவை பகுதி இயக்குநர் திரு சகாதேவன் தெரிவித்தார். தையல் தொழிலில் பயிற்சி பெற்றவர்கள், கோவிட் தொற்று நெருக்கடி காலத்தில் முகக்கவச உறைகள் தைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமுடக்கநிலை காலத்தில் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் என்.எஸ்.டி.சி. கோவை அலுவலகம் மூலம் 400க்கும் மேற்பட்ட ஆன்லைன் பயிற்சிகள் அளிப்பது, தங்கள் தொழில் திறன்களை வளர்த்துக் கொண்டு, இந்த நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள இளைஞர்களுக்கு அற்புதமான ஒரு வாய்ப்பு என்று கோவை களப் பணி குழுவுடன் பேசிய பேராசிரியர் ஜூலியன் கூறினார். இறுதியாண்டு படிப்பில் இருக்கும் மாணவர்கள், பொருத்தமான வேலைகளைத் தேடுவதற்கு முன்னதாக திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு இது உதவிகரமாக இருக்கிறது என்றார் அவர்.

தொழில் திறன்மிக்க இந்தியா திட்டத்தின் கீழ் வயரிங் செய்வதில் தாம் பயிற்சி பெற்றதால், தனக்கு வேலை கிடைத்திருப்பதாக கோவையைச் சேர்ந்த திரு சதீஷ்குமார் தெரிவித்தார்.

இளைஞர்களுக்குத் தொழில் திறன்களைக் கற்பித்து தங்களை தொழில்முனைவோராக ஆக்கியதில், புதுமை சிந்தனையுடன் கூடிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று பிளஸ் டூ மாணவர் திரு கோகுல் கூறினார். இளைஞர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவியாக இருப்பதுடன், வறுமையை ஒழிப்பதில் இது துணிச்சலான ஒரு நடவடிக்கையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பொது முடக்கநிலை காலத்தில் வீட்டில் இருந்தபடியே தாங்கள் தொழில் திறன்களை கற்றுக் கொண்டதால், தொழில் திறன்மிக்க இந்தியா திட்டம், இளைஞர்களின் வாழ்வை மாற்றிய ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்று அவர் கூறினார்.

என்.எஸ்.டி.சி.யின் ஆன்லைன் வகுப்புகள் அற்புதமான ஒரு வாய்ப்பு என்று பேராசிரியர் ஜூலியன் கூறுகிறார்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க வகை செய்வதாக தொழில் திறன்மிக்க இந்தியா திட்டம் உள்ளது என்கிறார் திரு சகாதேவன்

தொழில் திறன்மிக்க இந்தியா திட்டத்தில் பெற்ற பயிற்சியால், தனக்கு வேலை கிடைத்துள்ளதாக திரு சதீஷ்குமார் கூறுகிறார்.

இந்தத் திட்டம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது என்று புகழ்கிறார் திரு கோகுல்

 



(Release ID: 1622651) Visitor Counter : 208


Read this release in: English