PIB Headquarters

09-05-2020 அன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீட்பு விமானங்களுக்கு சென்னை சுங்கத்துறையின் உதவி

Posted On: 09 MAY 2020 7:00PM by PIB Chennai

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதல் இரண்டு மீட்பு விமானங்களின் பயணிகள் சிரமம் ஏதும் இல்லாமல் வெளியில் செல்வதற்கான சுங்க அனுமதியை சென்னை சுங்கத்துறை வழங்கியது.  துபாயில் இருந்து வந்த இந்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கின.

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX612 இன்று அதிகாலை 1.00 மணிக்குத் தரை இறங்கியது.  இந்த விமானத்தில் 151 ஆண்கள், 28 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தமாக 182 பயணிகள் வந்தனர்.  அவர்களுள் ஒரு பயணி சக்கர நாற்காலியில் வந்தார்.  மொத்தமாக செக்இன் செய்யப்பட்ட 202 பயணப்பைகளுக்கும் பரிசோதனைக்குப் பிறகே சுங்க அனுமதி கிடைத்தது.

 

அடுத்த விமானம் IX540 அதிகாலை 01.50 மணி அளவில் தரை இறங்கியது.  இந்த விமானத்தில் 138 ஆண்கள் மற்றும் 39 பெண்கள் என மொத்தம் 177 பயணிகள் வந்தனர்.  செக்இன் செய்யப்பட்ட 177 பயணப்பைகளுக்கும் பரிசோதனைக்குப் பிறகே சுங்க அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்த இரண்டு விமானங்களிலும் 289 ஆண்கள், 67 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தமாக 359 பயணிகள் வந்தனர்.

 

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே வந்த பிறகு விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத் துறையின் மருத்துவக்குழுவினர் நோய்த்தொற்று இருக்கிறதா என அவர்களைப்  பரிசோதித்தனர்.  குடிபெயர்வு அனுமதிக்குப் பிறகு பயணிகள் சுங்கத்துறைப் பிரிவுக்கு வந்தனர்.  வருகை அரங்கில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பரிசோதித்து சுங்க அனுமதி வழங்கினர்.  பிறகு பயணிகள் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

மார்ச் 22ஆம் தேதியில் இருந்து அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே நின்றிருந்தன.  கோவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள முடியாமல் சிக்கித் தவித்த இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இந்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை மே 7ஆம் தேதி தொடங்கியது. மே 13ஆம் தேதி வரை தொடரும் இந்த மிஷனின் கீழ் சென்னைக்கு 11 விமானங்கள் வந்து சேர உள்ளன.

 

வந்தே பாரத் மிஷனின் கீழ் சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அடுத்த சில தினங்களில் வங்கதேசம், அமெரிக்கா,  இங்கிலாந்து, ஓமன், கோலாலம்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வர இருக்கின்றன.  இந்தத் தகவலை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை ஆணையர் திரு.ராஜன் சௌத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


(Release ID: 1622561) Visitor Counter : 233


Read this release in: English