PIB Headquarters

ஆரோக்கிய சேது செயலி- கொவிட்-19க்கு எதிரான போரில் நம்மை காக்கும் உண்மையான சக்திமான்.

10 கோடி இந்தியர்கள் இந்தச் செயலியை ஒரே மாதத்தில் பதிவிறக்கம் செய்தனர்

Posted On: 08 MAY 2020 7:31PM by PIB Chennai

கொவிட்-19க்கு எதிரான நமது போரில் ஆரோக்கிய சேது செயலி ஒரு முக்கியமான அடியெடுப்பு என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அது முக்கிய தகவல்களை அளிப்பதாகவும், அதிக மக்கள் அதைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் செயல்திறன் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். நமது பிரதமரின் இந்த அறைகூவலை நன்றாகவும் தெளிவாகும் கேட்டதின் விளைவாக, இதுவரை 9.4 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்ததில் வியப்பேதும் இல்லை

கொவிட்-19 தொடர்பான சுகாதாரத் தகவல்களை முறையாகப் பயன்படுத்துவதற்காக இந்திய அரசால் ஏப்ரல் 2, 2020 அன்று ஆரோக்கிய சேது செயலி தொடங்கப்பட்டது. பயன்படுத்துவோரின் அறிகுறிகள் தொடர்பான எளிதான கேள்வி - பதில் பகுப்பாய்வின் மூலம், கொவிட்-19 தாக்கும் அபாயம் உள்ளதா என்பதை உபயோகிப்பாளர்களே மதிப்பீடு செய்து கொள்ள இது உதவுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களில் ஆரோக்கிய சேது செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 'யுவர் ஸ்டேட்டஸ்' பகுதியில் 'தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்/ சுய மதிப்பீட்டுச் சோதனை / புதிய தகவல்களுக்கு தொடர்ந்து செயலியை உபயோகிக்கவும்' ஆகிய மூன்று தகவல்கள் இருக்கும். கை குலுக்குவதற்குப் பதிலாக வணக்கம் சொல்லி ஒருவரை மற்றொருவர் வாழ்த்துவது, சமூக நிகழ்வுகளைத் தவிர்த்தல் மற்றும் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவை பற்றிய அறிவுரைகள் படங்களாக இந்தச் செயலியில் விவரிக்கப்பட்டிருக்கும். கொவிட்-19ஐப் பற்றி இன்னும் தெரிந்து கொள்வதற்கும், கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சுவரொட்டிகள் இடம் பெற்றிருக்கும். மிகவும் முக்கியமாக, உபயோகிப்பாளரின் இடத்தில் இருந்து 500 மீட்டர், 1 கி.மீ., 2 கி.மீ., 5 கி.மீ., மற்றும் 10 கி.மீ. சுற்றளவு வரை கடந்த 28 நாட்களில் இந்த செயலியை பயன்படுத்துவோரில் எத்தனை பேர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒருவர் தெரிந்துக் கொள்ளலாம். கூடுதலாக, தங்கள் பகுதியில் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 24 மணி நேரத்தில் சுய மதிப்பீடு செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை, 24 மணி நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் உபயோகிப்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தகவல்களை அறிந்து வைத்திருப்பதன் மூலம், சமூக இடைவெளியையும் சுய சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கும் போது உபயோகிப்பாளர் கூடுதல் கவனத்துடன் இருக்கலாம்.

சமீபத்திய கொவிட்-19 தகவல்கள் பற்றிய காணொளிகளை ஊடகப்பிரிவில் 'டிரெண்டிங்க் நௌவ்' (Trending Now) வின் கீழ் காணலாம். 'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி', 'மருத்துவர்களின் ஆலோசனை', 'கற்றல் மையம்', 'நம்மால் முடியும்' மற்றும் 'செயலி என்ன செய்யும்' ஆகிய பகுதிகள் உபயோகிப்பாளர் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கான பயனுள்ள, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். கொவிட்-19 சமீபத்திய தகவல்கள் பகுதியில், கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில் பதிவேற்றப்படும் இந்தியாவில் உள்ள கொவிட்-19 பற்றிய மாநிலவாரியான நோயாளிகள், பாதிக்கப்பட்டோர், குணமானோர், இறந்தோர் பற்றிய தகவல்களைக் காணலாம். மாநில அரசுகளால் மின்னணு பயண அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டால், அது குறித்த தகவலும் ஆரோக்கிய சேது செயலியில் காட்டப்படும்.

ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்பவர் பாதுகாப்பாகவும், தனது சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வுடனும் இருக்கலாம் என்று திருச்சி களத் தொடர்பு அலுவலகத்திடம் கூறுகிறார், கரூர் தோகைமலை காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர் ஆர்.முகிலன். ஆர்வத்தின் காரணமாகவும், விழிப்புணர்ச்சியின் காரணமாகவும் இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறுகிறார்.

போட்டித் தேர்வுக்கான வகுப்புகளில் கலந்து கொள்ளும் திருச்சியை சேர்ந்த பட்டதாரியான நர்மதா, கொவிட்-19 பெருந்தொற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு தொடங்கி இருப்பதாகக் கூறுகிறார். கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு அருகில் சென்றால் உபயோகிப்பாளரை எச்சரிப்பதால் இந்தச் செயலி மிகவும் உதவியாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். கொவிட்-19 அறிகுறிகளுக்காக சுய மதிப்பீடு செய்து கொள்ளவும், அறிவுரைக்காக உதவி எண் மூலம் அரசை அணுகவும் இது உதவுகிறது. கொவிட்-19 நோயாளி அருகில் வந்தால் எச்சரிக்கை செய்வதால் இந்தச் செயலி ஒரு நல்ல நண்பனைப் போல என்று புகழ்கிறார் பெரம்பலூரை சேர்ந்த இளநிலை அறிவியல் மாணவியான பிரியதர்ஷினி. தொழில் நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் பெருந்தொற்றின் பரவுதலைத் தடுப்பதால் இந்தச் செயலி ஒரு நல்ல முயற்சி என்று அவர் மேலும் கூறுகிறார். சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி தன்னை எச்சரிப்பதால், ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்த பின்னர் தான் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார், திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான். பெரம்பலூரைச் சேர்ந்த இளநிலை செவிலியர் படிப்பு மாணவியான பவானி, கொவிட்-19 நோயாளி யாராவது அருகில் இருந்தால் இந்தச் செயலி எச்சரிப்பதாகக் கூறுகிறார்.

தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பரப்புவதில் ஆரோக்கிய சேது செயலி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆரோக்கிய சேது என்கிற பெயருக்கேற்ப, ஒவ்வொருவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, தேவையான விழிப்புணர்வு மற்றும் சுய சுகாதாரம் பற்றிய தகவல்களுக்கான இடைவெளியைப் பூர்த்தி செய்து, முழு நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்து கொவிட்-19 மேலும் பரவாமல் செயல்திறனுடன் தடுக்கலாம்.

திருச்சி கே. கே. நகரைச் சேர்ந்த சல்மான்

 

 திருச்சியைச் சேர்ந்த நர்மதா.

 

காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆர்.முகிலன் .

 

பெரம்பலூரைச் சேர்ந்த இளநிலை செவிலியர் படிப்பு மாணவி பவானி

 

 



(Release ID: 1622214) Visitor Counter : 198