PIB Headquarters

துயரத்தில் இருக்கும் பெண்களுக்கான ஒரு நிறுத்த மையமாக மகளிர் உதவி மையம் உருவெடுக்கிறது

ஊரடங்கின் போது குடும்ப வன்முறை குறித்து புகார் செய்ய தேசிய மகளிர் ஆணையம் சிறப்பு வாட்ஸ்அப் செயலியைத் தொடங்கியது

Posted On: 07 MAY 2020 3:20PM by PIB Chennai

கொவிட்-19 பரவல், அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் சந்தித்து வரும் பாதிப்புகளை அகற்ற மத்திய அரசும், அதன் நிர்வாகமும் அதிக கவனம் எடுத்து செயல்பட்டு வருகின்றன. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி, அண்மையில் தமது அமைச்சகம் தொடர்பான நிறுவனங்களுடன் கலந்துரையாடினார். துயரத்தில் சிக்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு உறுதுணையாக உள்ளோம் என்ற தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்கு தீர்வு காணும் வகையில் அவர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக உதவி மையங்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பாலின உரிமை ஆர்வலர்கள் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, மத்திய ,மாநில அரசுகள் பெண்களின் அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணும் ஒரே இடமாக, 181 என்ற பிரத்யேக உதவி மைய எண்ணை உருவாக்கியுள்ளன. பெண்களும், குழந்தைகளும் வீடுகளுக்குள் தங்கியிருக்கும் கட்டாயச் சூழலில், அவர்கள் துன்புறும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கின் முதல் வாரத்தில், குடும்ப வன்முறைகள் திடீரென அதிகரித்ததை, தேசிய மகளிர் ஆணையமும்  கருத்தில் கொண்டு, அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. மாற்று நடவடிக்கையாக, தேசிய மகளிர் ஆணையம் 2020 ஏப்ரல் மாதத்தில், 7217735372 என்ற சிறப்பு வாட்ஸ்அப் எச்சரிக்கை உதவி மைய எண்ணை அறிமுகம் செய்தது. குடும்ப வன்முறைச் சம்பவங்கள் குறித்து உடனடியாக யார் வேண்டுமானாலும் இதில் புகார் செய்யலாம். தேசிய மகளிர் ஆணையத்தின் வலைதளப்படி, இந்த நிதியாண்டில் மொத்தம் 5187 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து 35 புகார்கள், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சிறப்புப்பிரிவுக்குத் தலைமை வகிக்கும் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் திரு. எம். ரவி, கோவை கள விளம்பரத்துறைக்கு அளித்த தகவலில், மாநில காவல்துறை மக்களுக்கு 24 மணி நேரமும் இடைவிடாமல் சேவை புரிந்து வருவதாகவும், பெண்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

கோவையில், துன்பத்தில் சிக்கியுள்ள பெண்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. துன்பத்தை அனுபவித்து வரும் பெண்களுக்கு  நிவாரணம் அளிக்கும் ஒரே இடமாக உதவிமைய எண் 181 உருவெடுத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி கூறியுள்ளார். உதவி பெறுவதற்கு முன்பு போல பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை என்பதை இது உறுதி செய்திருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு தங்குமிடமும், சட்ட மருத்துவ உதவியும், ஆலோசனையும் வழங்கப்படுகிறது. ஆலோசனைக்காக சமூக நலத்துறையை பெண்கள் அணுகி வருகின்றனர். அத்தகைய பெண்கள் பற்றிய அனைத்து விவரங்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சிகளைப் பாராட்டியுள்ள டாக்டர் ஏ. அழகர்சாமி, பெண்களுக்கு எதிரான அநீதி குறித்த வழக்குகளை தீவிரமாகக் கையாண்டு வரும் தேசிய மகளிர் ஆணையத்தின் பங்கையும் புகழ்ந்துரைத்தார்.

பாலின வேறுபாடு மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிரான வாட்ஸ்அப் உதவி மையத்தை உருவாக்கியிருப்பது மிகப்பெரிய முன்முயற்சி என தேசிய மகளிர் ஆணையத்தை, கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரீஷ் குமார் பாராட்டியுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் 7217735372 என்ற உதவி மைய எண் குறித்து விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். துன்பத்தில் சிக்கியுள்ள பெண்கள், உதவி மைய எண்களை நன்றாகப் பயன்படுத்தி தங்கள் குறைபாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில், 181 மற்றும் வாட்ஸ்அப் எண்களை கல்வி நிறுவனங்களும் சமூக நல அமைப்புகளும் விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி புகார்களின் நிலை குறித்து ஆய்வு செய்கிறார்

 

பெண்களிடம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூடுதல் டிஜிபி திரு. ரவி கூறினார்

 

என்சிடபிள்யூ-வின் வாட்ஸ்அப் முன்முயற்சியை வழக்கறிஞர் ஹரீஷ் குமார் பாராட்டினார்

மகளிர் உதவி மைய எண்கள் குறித்து விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என டாக்டர் அழகர்சாமி வலியுறுத்தினார்

 

ஆலோசனை அமர்வு நடைபெறுகிறது

 

 

 


(Release ID: 1621777) Visitor Counter : 8361


Read this release in: English