PIB Headquarters
பிரதமரின் கிருஷி சின்சாயி திட்டம் – சொட்டுநீர்ப்பாசனம், இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக மாறி வருகிறது.
Posted On:
06 MAY 2020 5:05PM by PIB Chennai
விவசாயிகள் நிலங்களில் வேலை செய்யலாம், விவசாயத்துக்கான பொருள்களைக் கொள்முதல் செய்யலாம் என விவசாய நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் கோடையின் உச்சம் அதிக அளவில் உள்ளது. அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் தொடங்கிவிட்டது. கோவிட்-19 ஊரடங்கானது விவசாயிகளின் பொறுப்பை தற்போது அதிகரித்துள்ளது. இந்தக் கடினமான காலகட்டத்தில் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் அவர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயத்துக்கு நல்ல மண்வளம், உரம் மற்றும் மிக முக்கியமாக போதுமான அளவு தண்ணீர் ஆகியவை தேவை.
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டமானது சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீரைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்பதாகும். இந்திய விவசாயம் பெரும்பாலும் பருவமழையை நம்பியே இருக்கிறது. பருவமழை சில சமயங்களில் பொய்த்துப் போகும் தருணங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் இணைநீர் மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி திட்டமானது மிக முக்கியமானது என்று வேளாண் உதவி இயக்குநர் திரு.மோகன் கூறுகிறார். ஏனெனில் காவேரி தண்ணீருக்காக கர்நாடகம் போன்ற மாநிலங்களை தமிழ்நாடு சார்ந்திருக்கிறது. தண்ணீரைச் சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியமானதாக இருப்பதாலும், பயிர்களை வெள்ளம் அவ்வப்போது அழித்து விடுவதாலும் சொட்டு நீர்ப்பாசனத்துக்கான தெளிப்பான்கள் மற்றும் நீரை வேகமாகப் பீய்ச்சும் குழாய்கள் (ரெயின் கன்) விவசாயிகளுக்கு பாதுகாப்பான கருவிகளாக உள்ளன. இந்தக் கருவிகளை அரசும் பிரபலப்படுத்துகிறது.
இந்த தண்ணீர பாய்ச்சும் கருவிகளை வாங்குவதற்காக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 100 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. சொட்டுநீர்ப் பாசனத்தை ஒவ்வொரு கிராமத்திலும் நிறுவுவதற்கு இப்போது மாநில அரசானது தனது முன்னுரிமைகளை மறுநிர்ணயம் செய்து வருகிறது. கோடையின் உச்சத்தில் இத்தகைய நீர் பாய்ச்சும் முறைகளோடு விவசாயிகளுக்கு ஒற்றைப் பயிர் விளைச்சலைத் தாண்டியும் பலவகையான பயிர்களைப் பயிரிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடலாம் அல்லது தனிப்பயிர்களாக எள், பருப்புகள் முதலானவற்றை விளைவிக்கலாம். இந்த வகையான நீர்ப்பாசன முறை மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் போது விளைச்சலானது குறைந்தபட்சம் 30 சதவீத அளவிற்கு அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். விவசாயிகள் இந்த சொட்டு நீர்ப்பாசனத் தெளிப்பான்கள் மற்றும் ரெயின் கன் ஆகியவற்றுக்காக அரசின் இணைய முகப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு 8794 விண்ணப்பங்கள் சொட்டுநீர்ப் பாசனத்திற்காகப் பதிவு செய்யப்பட்டு, அதில் 7821 விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளிக்கு அதிர்ஷ்டவசமாக காவேரி ஆறு உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீரை தேவையான அளவில் பெறும் நல்ல வாய்ப்பும் உள்ளது. எனினும் இந்த மாவட்டத்தில் 60 சதவிகித விவசாய நிலம் வறண்ட நிலமாகவே உள்ளது. இவர்களின் ஒரே நம்பிக்கை சொட்டுநீர்ப் பாசனமே ஆகும். கடந்த ஆண்டு பிரதமரின் கிருஷி சிஞ்சாயி திட்டமான சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் 124 ஆழ்துளைக் கிணறுகள், 350 டீசல் பம்ப்புகள், 240 பைப்புகள் மற்றும் 146 நீர்சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. திருச்சியில் பிப்ரவரி மாதம் வரை 8086 ஹெக்டேர் நிலம் சொட்டுநீர்ப் பாசன வசதிக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தநல்லூரில் 139 ஹெக்டேர், லால்குடியில் 357 ஹெக்டேர், மணப்பாறையில் 481 ஹெக்டேர், புல்லம்பாடியில் 1061 ஹெக்டேர் மற்றும் மருங்காபுரியில் 760 ஹெக்டேர் என இந்த நிலங்கள் 14 ஒன்றியங்களில் விரிந்துள்ளன.
தமிழ்நாட்டில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு இணை தண்ணீர் மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ் 2664 நடுத்தர ஆழம் வரையான குழாய்க்கிணறுகள் மற்றும் ஆழ்துளைகிணறுகள் தோண்டுவதற்கு ரூ.6.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 23734 டீசல் பம்ப்செட்டுகள் மற்றும் மின்மோட்டார்கள் விநியோகத்துக்காக ரூ.35.601 கோடியும், 24648 குழாய்த் தொடர்கள் அமைக்க ரூ.24.64 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2211 நீர்சேமிப்பு அமைப்புகள் உருவாக்குவதற்கு ரூ.8.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக மானியத்துடன் குறைந்த செலவிலான சொட்டுநீர்ப் பாசனம் மூலம் புதிய வாழ்க்கையை வழங்கியதற்காக மணச்சநல்லூர், இருங்காளூர் உட்பட்ட திருச்சிராப்பள்ளி விவசாயிகள் அரசுக்கும் வேளாண் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் வயநாட்டிலும், கர்நாடகாவில் தலைக்காவேரியிலும் மழை பெய்தால் காவேரி ஆற்றங்கரை விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பும். ஏனென்றால் இந்த ஆறுதான் டெல்டா விவசாயிகளுக்கான உயிர்காப்பு ஆதாரமாக உள்ளது. நாம் விவசாயத்துக்கு மழையை மட்டுமே நம்பி இருக்க முடியாது. காலம் தப்பியும் பருவமழை பெய்யும். ஆதலால் வாழ்க்கைக்கு அதை மட்டுமே நம்பி இருக்க முடியாது. வானம் பார்த்த பூமியில் மழையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் நிவாரணமாக சொட்டு நீர்ப்பாசனம் உள்ளது. கிடைக்கும் தண்ணீரை மிகச் சரியான அளவில் பயன்படுத்த சொட்டு நீர்ப்பாசனம் மட்டுமே சரியான முறையாகும். தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாட்டில் இத்தகைய நீர்ப்பாசன முறையை அனைவரும் கடைபிடிக்கச் செய்வது தான் விவசாயிகளுக்கு நல்லது ஆகும். அப்போது தான் 130 கோடி குடிமக்களுக்கும் உணவளிக்கும் வகையில் சாதனை அளவில் உணவு தானிய உற்பத்தியை விவசாயிகள் அடுத்தடுத்து நிகழ்த்த முடியும். அத்தகைய சுயசார்பு விவசாய முறைகளைக் கடைபிடிக்கும் போது எந்த ஒரு உலகளாவிய தொற்று நோயும் சாதனை அளவில் விளைச்சலை ஏற்படுத்தும் நமது விவசாயிகளின் மன உறுதியைக் குலைத்துவிட முடியாது.
வேளாண் உதவி இயக்குநர் மோகன் மனச்சநல்லூரில் சொட்டுநீர்ப்பாசனத் திட்டத்தை ஆய்வு செய்கிறார்
இருங்காலூர் சொட்டுநீர்ப்பாசன திட்டத்தில் விவசாயியுடன் வேளாண் அதிகாரி
திருச்சியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சொட்டுநீர்ப்பாசன வசதி
இருங்காலூர் கிராமத்தில் சொட்டுநீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் குழாய் வழியாக தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
(Release ID: 1621560)
Visitor Counter : 1044