PIB Headquarters

ஊரடங்கு காலத்தில் கால்நடைகளின் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பேணுவது மிகவும் அவசியம் கால்நடை நோய்கள் அறவே இல்லை என்ற நிலையை எட்ட அரசு கால்நடை மருத்துவமனைகள் முழுவீச்சில் இயங்குகின்றன

Posted On: 05 MAY 2020 7:01PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றால் தூண்டப்பட்ட ஊரடங்கால் பாலைவனம் போன்ற அரவம் இல்லாத நிலையில், ரத்தப்போக்குடன் வெள்ளாடு ஒன்று ஆட்டோவில் சென்னை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு அவசர நிலை என்பதை உணர்ந்த டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் சிகிச்சை மேஜையை தயார் செய்தார். அந்த ஆட்டுக்கு இது முதல் பிரசவம் என்பதுடன் குறைப் பிரசவமாகவும் காணப்பட்டதால், மிகவும் சிக்கலாக இருந்தது என மருத்துவர் நினைவு கூர்ந்தார். குறைமாதக் குட்டியின் தலையும், கழுத்தும் பக்கவாட்டில் விலகி இருந்ததால் ஈணுதல் சிரமம் எனக் கண்டறியப்பட்டது. தாய் ஆடு காப்பாற்றப்படுவதற்காக நிலையான மகப்பேறியல் திருத்த நடைமுறை பின்பற்றப்பட்டதால், துர்ப்பாக்கியவசமாக குறைமாதக் குட்டி இறக்க நேர்ந்தது.

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு மற்றும் தெரு விலங்குகளின் உயிரைக் காக்கும் பாதுகாவலர்களாக கால்நடை மருத்துவர்கள் திகழ்கின்றனர். அவர்களது சேவை கேட்கப்படாத மெல்லிசை போல பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாமல் போகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை கால்நடை கல்லூரியின் மருந்தக இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியன், அனைத்து பேராசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் முகக்கவசங்களை அணிந்து, பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிப்பதாகத் தெரிவித்தார். வழக்கமான தடுப்பூசி போடுதல், செயற்கை கருவூட்டல் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைகள் மட்டும் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொது ஊரடங்கு மே 17-ந்தேதி வரை தொடரும் நிலையில், மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள அமைச்சகம், கால்நடை சிகிச்சை சேவைகளை அத்தியாவசிய சேவையாகக் கருத வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்ற வழக்கமான முறையில் இயங்கவேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், அரசு கால்நடை மருத்துவமனைகள் பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்து வழக்கம் போல இயங்கி வருகின்றன.

டாக்டர் பாலசுப்பிரமணியனும், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியின் அறுவைச்சிகிச்சை பேராசிரியர் டாக்டர் மாலா ஷம்மியும், பெண்மணி ஒருவர் கொண்டுவந்த வளர்ப்பு லாப்ரடார் நாய்க்கு சிகிச்சை அளித்தனர். ஊரடங்கின் போது, மருந்தக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி. ஜெயந்தி குதிரை ஒன்றுக்கு சிகிச்சை அளித்தார். கால்நடை அறுவைச் சிகிச்சை உதவி பேராசிரியர் டாக்டர் ஆர். சிவசங்கர் பசுமாட்டுக்கு சிகிச்சை அளித்ததுடன் அதன் பால் மடிகளைப் பரிசோதித்தார். மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் நோய் பாதித்த விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஒரத்தநாடு கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டி.சிவகுமார், தங்கள் மருத்துவக் கல்லூரியில் தினசரி 40 விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நோயால் பாதிக்கப்படும் வளர்ப்பு பிராணிகளுக்கு, எந்த நேரமும், ஊரடங்கின் போதும், வழக்கமாகச் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சிகிச்சை அளித்து வருகிறது. மேலும், கல்லூரி கால்நடை வளாகத்தில் இருக்கும் பசுக்களில் இருந்து பெறப்படும் பால் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் விவசாயிகளுக்கு கால்நடை மற்றும் கோழித் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த ஹாரிபாட்டரை எவ்வாறு தஞ்சை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் என்பதை விவரித்தார். கோடை வெயிலைச் சமாளிக்க முடியாமல் நாய் சோர்ந்து போனதாக அவர் கூறினார். சில மருந்துகள் கொடுக்கப்பட்டதுடன், அதிக அளவுக்கு தண்ணீர் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. வெளிநாட்டு வகை நாய்கள் இந்தியாவின் கோடை வெயிலுக்கு தாக்குப்பிடிப்பது சிரமமாகும். ஆனால், உரிமையாளர்களின் பரிவான கவனிப்பு மூலம் அவை இந்த காலநிலைக்கு பழகி விடுவதுண்டு.

இத்தகைய பெருந்தொற்று பரவல் காலத்தில், மனிதர்கள் சாதாரணமாக, விலங்குகளைப் புறக்கணித்து விடுவதுண்டு. ஆனால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்துக்கு பசுக்களையும், ஆடுகளையும் நம்பி உள்ளனர். பால் ஒரு பாதுகாப்பான, ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய பானம் என்பதால், ஊரடங்கின் போது அதன் விநியோகம் தடையின்றி நடக்க உறுதி செய்யப்பட வேண்டும். நோய்களால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவர்களின் ஆலோசனையை விவசாயிகள் கேட்டு வருகின்றனர். கடினமான நேரங்களில் கூட, கிராமப்புற விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் நன்றாக கவனித்து வருகின்றனர். தங்களை நன்கு கவனித்து வரும் உரிமையாளர்களுக்கு நாய்களும், பசுக்களும் தங்கள் வாலை ஆட்டி நன்றியைத் தெரிவிக்கின்றன. உரிமையாளர்களோ, தங்களது பிராணிகளின் நலனைக் காக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருந்தகத்துறை இயக்குநர் டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் வெள்ளாடு ஒன்றுக்கு நிலையான மகப்பேறியல் திருத்த நடைமுறையைப் பின்பற்றி பிரசவம் பார்க்கிறார்

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டி. சிவகுமார்

 

தாம் சிகிச்சை அளித்த வளர்ப்பு லாப்ரடார் நாயுடன் டாக்டர் மாலா ஷம்மி

 

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருந்தக மருந்து துறை உதவி பேராசிரியர் டாக்டர் சி. ஜெயந்தி ஒரு குதிரைக்கு சிகிச்சை அளிக்கிறார்

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஆர். சிவசங்கர் பசுவின் மடியைப் பரிசோதிக்கிறார்.

வளர்ப்பு நாய் ஹாரி பாட்டருடன் அரவிந்த்



(Release ID: 1621249) Visitor Counter : 255