PIB Headquarters

வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது அதீத முன்னெச்சரிக்கையே நம்மைக் காக்கும்

கொவிட்-19ஐக் கட்டுப்படுத்த ஏடிஎம்களில் கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினி கட்டாயம்

Posted On: 04 MAY 2020 6:02PM by PIB Chennai

வங்கிகள் இயங்குவது நமது பொருளாதாரத்துக்கு மிகவும் அவசியம் என்பதால், இந்தப் பொது ஊரடங்கின் போது, வங்கிகளும், ஏடிஎம்களும் எந்தவித இடையூறும் இன்றி இயங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏடிஎம்களுக்கு மக்கள்  பணம் எடுக்க வருவதால், கொவிட்-19 பரவுவதைத் தடுக்க நகராட்சி  மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் கொவிட்-19 நோய் பரவுவதைத் தடுக்க கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினிகளை வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட வங்கிகள் குழு தலைமை மேலாளர் திரு. ஜி. சத்தியநாராயணன், திருச்சியில் பல்வேறு ஏடிஎம்களை ஆய்வு செய்து, பணம் எடுக்க வரும் மக்களின் பயன்பாட்டுக்கு கை சுத்தம் செய்யும் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார். திருச்சி கள விளம்பரத்துறை அதிகாரியிடம் பேசிய அவர், ஏடிஎம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த உடனே, தாம் அனைத்து வங்கிகளுக்கும் தகவல் அனுப்பியதாகத் தெரிவித்தார். நகரிலும், ஊரகப் பகுதி கிளைகளிலும்  வங்கி வளாகம் மற்றும் ஏடிஎம்களை கிருமிநாசினி மூலம் தினசரி சுத்தப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் அவற்றை இயக்குவதற்கு முன்பாக கைகளைச் சுத்தப்படுத்தும் வகையில், கட்டாயமாக கிருமிநாசினிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். திருச்சியில் உள்ள அனைத்து 445 கிளைகளுக்கும் இந்தத் தகவல் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 19 நகர்ப்புற கிளைகள், 11 பேரூர் கிளைகள், 33 ஊரகப் பகுதி கிளைகள் என 63 கிளைகளுடன் முதன்மை வங்கியாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் 45 கிளைகளும், இந்தியன் வங்கியின் 35 கிளைகளும், கனரா வங்கியின் 34 கிளைகளும், இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 93 கிளைகளும் திருச்சி மாவட்டத்தில் இயங்குகின்றன. மாவட்டத்தில், தனியார் வங்கிகளின் 134 கிளைகளும், 32 திருச்சி மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன.   

திருச்சி மாவட்டத்தில் 211 பல்வேறு வங்கி கிளைகளுக்குச் சொந்தமான  430 ஏடிஎம்கள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் முன்னணி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது அனைத்து ஏடிஎம்களிலும் கை சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளை வைத்து ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தி வருகிறது. திருச்சி மாவட்ட வங்கிகள் குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, மாவட்ட தலைமை மேலாளர் திரு. சத்தியநாராயணன் அனைத்து ஏடிஎம்களையும் இந்த விஷயத்தில் மேற்பார்வையிடுமாறு ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். கொவிட்-19 ஊரடங்கின் போது, இடையூறு இல்லாத சேவைகளை வழங்கி வரும் வங்கிகளின் முயற்சியை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளதாக திரு. சத்தியநாராயணன் கூறினார். வங்கிகளுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்ற தகவலை அவர் வங்கிகளிடம் தெரிவித்தார். அவர்களது கைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வங்கி வளாகங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் தடுக்க  3 அடி என்னும் பாதுகாப்பான இடைவெளி விதிகளைக் கட்டாயம் பராமரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வங்கிப் பணியாளர்களுக்கும் முகக்கவசங்களும், கிருமிநாசினிகளும் வழங்கவேண்டும். ஐஓபி, எஸ்பிஐ மற்றும் பல்வேறு வங்கிகளின் முதன்மை மேலாளர்களுடன், மாவட்ட வங்கிக் குழு தலைமை மேலாளர், நகரில் பல்வேறு ஏடிஎம்களுக்கு சென்று ஆய்வு நடத்தியதில், கிருமிநாசினி வைக்கப்பட்டிருப்பது  உறுதி செய்யப்பட்டது.

மாவட்ட சுகாதார அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக, தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளில், திருச்சியில் 51 என்ற அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தின் போது, பொருளாதாரத்தை உயிரோட்டமாக வைத்திருப்பதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், முன்னெப்போதும் இல்லாத ஊரடங்கைச் சந்தித்து வரும் மக்களுக்கும் அவை சேவை புரிகின்றன. ஏடிஎம் இல்லாத பகுதிகளில் மக்களின் நலனுக்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடமாடும் ஏடிஎம்களை இயக்கி வருகிறது. வங்கிகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கும் வகையில் வங்கிப் பிரதிநிதிகள் நேரடியாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உதவி வருகின்றனர். சந்தைகள் மற்றும் வங்கிகள் போன்ற கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் நோய் பரவலையும், நேரடி பணப்பரிவர்த்தனையையும் தவிர்க்க ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்துமாறு திருச்சியைச் சேர்ந்த பெண்மணி திருமதி. மஞ்சு அறிவுரை வழங்குகிறார். கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அடிக்கடி கிருமிநாசினிகள் மற்றும் சோப்பால் கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஏடிஎம் போன்ற பொது இடங்களுக்கு தொற்று அறிகுறி இல்லாத நோயாளிகள் பணம் எடுக்க வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏடிஎம்களில் கிருமிநாசினிகள் இல்லாவிட்டாலோ அல்லது தீர்ந்து விட்டாலோ, ஏடிஎம் விசைப் பலகையைத் தொட்ட பின்னர், சுத்தமான தாளைக் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தி, அந்தத்தாளை பத்திரமாக அப்புறுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதீதமான தனிநபர் எச்சரிக்கை மட்டுமே, தொற்றை நாம் தொடாதவாறு காக்க உதவும் பாதுகாவலன். நாம் இதனை உணராதவரை, அரசு எவ்வளவு முயற்சிகளை எடுத்தாலும், அவை எந்த விதத்திலும் நமக்கு பயனளிக்காது. எனவே, நாம் வீட்டிலேயே இருப்போம், பத்திரமாக இருப்போம், அதீதமான தனிநபர் சுகாதாரத்தைப் பேணுவோம்.  

திருச்சியில் ஏடிஎம்மில் கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது

தலைமை வங்கி மேலாளர் திரு. சத்தியநாராயணன் ,திருச்சி ஏடிஎம் ஒன்றில் கிருமிநாசினி உள்ளதா என ஆய்வு செய்கிறார்

திருச்சியில் ஐஓபியின் நடமாடும் ஏடிஎம்

ஆன்லைன் வங்கி சேவையைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் திருச்சியைச் சேர்ந்த திருமதி. மஞ்சு

 



(Release ID: 1620957) Visitor Counter : 200