PIB Headquarters

Swachhata -MOHUA செயலி- நகர மேலாண்மைக்கு மக்களுக்கு உதவும் சாதனம்

கொரோனா வைரஸ் பரவுதலை செம்மையாகத் தடுப்பதில் எந்த உள்ளாட்சி அமைப்புக்கும் கழிவுகள் அகற்றுதல் மற்றும் தூய்மைப் பணிகள் தான் முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன.

Posted On: 04 MAY 2020 1:07PM by PIB Chennai

கோவிட்-19 நெருக்கடி காலத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கழிவுகள் அகற்றுதல், அதைச் சார்ந்த பணிகளை நல்ல முறையில் திட்டமிடுதல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு Swachhata MOHUA செயலிஉதவியாக இருக்கின்றன.  Swachhata MOHUA செயலியின் உதவியால் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களின் குறைகளை விரைவில் தீர்த்து வருகின்றன. தூய்மையான பாரதம் (நகர்ப்புறம்) திட்டத்தின் வரம்புக்கு உள்பட்ட விஷயங்களில் பொது மக்களின் குறைதீர்வுக்கு ஏற்றவகையில் பிரபலமானதாக இந்தச் செயலி உள்ளது. நாடு முழுக்க 1.7 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். கோவிட் -19 தொடர்பான புகார்களைத் தெரிவித்து, தங்களுடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் வகையில், இப்போது இந்தச் செயலி மாற்றி அமைக்கப்பட்டு, பலப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயலி  இப்போது மேம்படுத்தப்பட்டும் உள்ளது. முன்னர் இந்தச் செயலி ஒரு சில மாநிலங்கள் மற்றும் குடிமக்களுக்கு மட்டும் அளிக்கப் பட்டிருந்தது. மக்களின் கருத்துகளின் அடிப்படையில், இப்போது இந்தச் செயலி நாடு முழுக்க அளிக்கப் பட்டுள்ளது.

    Swachhata MOUHA செயலியைப் பயன்படுத்துவதில் கோவை மாநகராட்சி முன்னிலையில் இருக்கிறது. குறைகள் தீர்வு நடைமுறையை மாநகராட்சி ஆணையாளர் திரு ஜே. சரவண்குமார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மாநகராட்சி எல்லைக்குள் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், இதர பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து அவர் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்வதுடன் நேரிலும் ஆய்வு செய்து வருகிறார்.

    கோவிட்-19 தொடர்பாக வரும் புகார்கள் முக்கியமானவை என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நேரடியான செயல்பாடுகள் மூலமாகவோ அல்லது தொடர்புடைய துறைக்கு புகார்களை அனுப்பி வைப்பதன் மூலமாகவோ உடனடியாகத் தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து புகார்களையும், Swachhata செயலியில்  உள்ளதைப் போல, Swachh city - அறிவிப்புப் பகுதியில் கண்காணிக்க முடியும்.  புதிய ஒன்பது வகைப்பாடுகளில் பின்வரும் அம்சங்கள் உள்ளன.

  1. கோவிட்-19 காலத்தில் புகை பரப்புதல், கழிவு நீர் அகற்றுதல் கோரிக்கை

  2. கோவிட்-19 காலத்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறுவோர் பற்றிய தகவல்

  3. கோவிட்-19 காலத்தில் முடக்கநிலை அமலை மீறுவது பற்றிய தகவல்

  4. கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக எழும் சந்தேகம் பற்றிய கோரிக்கை

  5. கோவிட்-19 காலத்தில் உணவுக்கான கோரிக்கை

  6. கோவிட்-19 காலத்தில் தங்கும் இடத்துக்கான கோரிக்கை

  7. கோவிட்-19 காலத்தில் மருந்துக்கான கோரிக்கை

  8. கோவிட்-19 நோய் பாதித்த நோயாளியை அழைத்துச்  செல்வதற்கான வாகன வசதிக் கோரிக்கை

  9. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கான கோரிக்கை.

 

இந்த கோவிட் நெருக்கடிச் சூழ்நிலையில், swachata  செயலி புதிய பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது மக்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று கோவை மாநகராட்சி பேரூர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு கூறினார். இந்தச் செயலியை உருவாக்கியதற்காக மாண்புமிகு பிரதமர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேலாண்மைத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    மேம்படுத்தப்பட்ட swachata செயலி, கோவிட் - 19 மற்றும் முடக்கநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் நன்கு அமைந்துள்ளது என்று பொள்ளாச்சியைச் சேர்ந்த நற்குணன் தெரிவித்தார்.

 

 

 

swachata  செயலி மூலம் எந்த நபரும் எளிதாகப் புகார்களைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்பதால் இது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கூறினார்.

ஏற்கெனவே இருக்கும் பிரபலத்துவத்தின் அடிப்படையில், திருத்தப்பட்ட swachata  செயலி கோவிட் நோய்த் தொற்று சூழ்நிலையில் குடிமக்களுக்கு நல்ல சேவையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்தச் செயலியில் இப்போதுள்ள பிரிவுகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிரிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. குடிமக்கள் எந்தப் பிரிவிலும் தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம். கோவிட் நெருக்கடி காலத்தில் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் கூட்டு முயற்சியின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இப்போதைய காலகட்டத்தில் எழும் புதிய தேவைகளைக் கருத்தில் கொண்டு, Swachhata செயலியில் ஒன்பது புதிய பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளன. நோய்த் தொற்று சூழ்நிலையைக் கையாள்வதில் அனைத்து வகைகளிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவிகரமாக இருப்பதால், அமைச்சகத்தின் இந்த முயற்சி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பெரிய உந்துதலைத் தரும் முயற்சியாக அமைந்துள்ளது.

 



(Release ID: 1620846) Visitor Counter : 157


Read this release in: English