PIB Headquarters
பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம்: ஏழைகள், தேவை இருப்போர்கள் மீது அக்கறை செலுத்துகிறது
Posted On:
01 MAY 2020 3:33PM by PIB Chennai
கோவிட்-19 பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் இன்னல்களை குறைக்க பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நிவாரண தொகுப்புகளை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. நிவாரணத் தொகுப்பின் மதிப்பு ரூ.1.70 கோடியாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நாட்டுக்கு உணவளிக்க பாடுபடும் விவசாயிகள், நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான தன்னலமற்ற சேவையை செய்யும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுகாதார பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வீடில்லா ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரை பொது முடக்கம் பெரிதும் பாதித்துள்ளது. பொது முடக்கம் ஏற்படுத்தியுள்ள திடீர் அதிர்ச்சியை போக்க, மேற்கண்ட அனைத்து குழுக்களுக்கும் நிதி ஆதரவு அளிக்க பல்வேறு திட்டங்களின் மூலம் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பின் படி, 8.27 கோடி விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதமாக பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் கீழ் ரூ. 2,000/- முன்பணமாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில், வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக பொது முடக்கத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இந்த உதவியை வரவேற்றுள்ளனர். பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் கீழ் ரூ. 2,000/- முன்பணமாக வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி கூறுகிறார் புதுக்கோட்டை ஆலங்குடி கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயியான திரு.வீரய்யா. பொது முடக்க சமயத்தில் அது தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
வேறு எந்த வருமானமும் இல்லாததால், பொது முடக்கத்தின் போது அளித்த இந்த உதவிக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார் தென்காசி பனையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியான திரு. பாலு. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6000/- அளிப்பதற்கும் மத்திய அரசுக்கு அவர் நன்றி கூறினார்.
மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பான இடைவெளி போன்ற கடும் கட்டுப்பாடுகளோடு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலைகளை மீண்டும் தொடங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. கூடுதலாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலைகளுக்கான கூலி உயர்வு 13.62 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு உண்மையிலேயே ஆறுதல் அளித்தது. திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகள் கடந்த சனிக்கிழமை மறுபடி ஆரம்பித்தன. தூத்துக்குடி உமரிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமதி. ஹேமலதா, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைகளை மறுபடி தொடங்க அனுமதித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறார். கோவிட்-19 பொது முடக்கதின் காரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டதாகக் கூறிய அவர், தற்போது உயர்த்தப்பட்ட கூலியான ரூ. 282 உடன் வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது ஒரு வெகுமதி போன்றது என்கிறார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மரங்களை நடுதல் மற்றும் செடிகளுக்கு நீரூற்றுதல் போன்றவற்றை தங்களது கிராமத்தில் அவர்கள் செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நிவாரண நிதியை பயன்படுத்தி கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. பொது முடக்கத்தின் காரணமாக கட்டுமான பணிகள் நின்று விட்டதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1,000/- நிதி உதவியுடன், இலவச அரிசி, பருப்புகள் மற்றும் சமையல் எண்ணை ஆகியவை வழங்கப்பட்டன. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள் வழங்கப்படும்.
செங்கல் சூளை, துணி நெய்தல், மண்பாண்டங்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற சிறு மற்றும் பாரம்பரிய தொழில்களை வாழ்வாதாரத்துக்காக நம்பி பலர் உள்ளனர். அவர்களின் வருமானத்திற்கான வழிகளை பொது முடக்கம் பெரிதும் பாதித்துள்ளது. சில சிறு தொழில்களை மீண்டும் செயல்பட அனுமதிக்கும் அரசின் முடிவை அவற்றை சார்ந்துள்ள மக்கள் வரவேற்கின்றனர். வேலூர் களந்தோப்பு கிராமத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளரான திரு. ராஜகோபால், செங்கல் சூளை வேலைகளை அரசு அனுமதித்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார். ஒன்றரை மாதத்துக்கும் மேலாக தங்களால் வேலை செய்ய முடியவில்லை என்றும், உணவுக்கு கூட கஷ்டம் அனுபவித்ததாகவும் அவர் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகளால், இவர்கள் தற்போது தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கி உள்ளனர். எட்டு கோடி ஏழை குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு உருளைகளையும், மகளிர் ஜன் தன் கணக்குகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாதம் ரூ.500ம் அரசு வழங்குகிறது. கோவிட்-19 பெரும்தொற்றுடன் முன்னணியில் நின்று போராடும் வீரர்களுக்கு பெரியதொரு நம்பிக்கையை அளிக்கும் விதமாக, களத்தில் உள்ள ஒவ்வொரு சுகாதார பணியாளருக்கும் ரூ. 50 லட்சம் காப்பீட்டை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. மருத்துவர்கள் உட்பட 22 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு இது உறுதியை அளிக்கும். செயல்கள் கடுமையாகும் போது, கடினமானது கடந்து போகும் என்னும் ஆங்கில பழமொழிக்கேற்ப, ஆட்கொல்லி வைரஸ் விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும் என்னும் நன்னம்பிக்கையோடு, கொரோனா பெரும்தொற்றை எதிர்த்து போரிடுவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு நாளுக்கு நாள் பிணைப்புள்ளதாகவும் வலுவானதகவும் ஆகிக்கொண்டு வருகிறது.
<புகைப்பட விளக்கங்கள்>
தென்காசியை சேர்ந்த விவசாயியான திரு. பாலு
வேலூரை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளரான திரு. ராஜகோபால்
தூத்துக்குடியை சேர்ந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளரான திருமதி. ஹேமலதா
புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயியான திரு. வீரய்யா
***
(Release ID: 1619992)
Visitor Counter : 221