PIB Headquarters

தமிழ்நாட்டிலிருந்து பாலும், மருந்துப் பொருள்களும் வடகிழக்கிலுள்ள நாகாலாந்துக்குச் செல்கிறது

Posted On: 30 APR 2020 2:03PM by PIB Chennai

நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்வது இந்திய ரயில்வே என்பதற்கேற்ப, நாகாலாந்தில் உள்ள திமாபூருக்கு, தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்திலிருந்து, ஒரு லட்சத்து 15 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் 8 டன் மருத்துவப்பொருள்கள் கொண்ட சிறப்பு சரக்கு ரயில் ஒன்று தெற்கு ரயில்வேயின் சேலம் பிரிவிலிருந்து, இன்று (30 ஏப்ரல் 2020) காலை 8 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

 

இதுவரை செயலற்றிருந்த சரக்கு ஏற்றும் பிரிவு, தெற்கு ரயில்வே மற்றும் சேலம் பிரிவின் தீவிர மார்க்கெட்டிங் முயற்சிகளையடுத்து, இது நிகழ்ந்துள்ளது. அசாம் ரைபிள் படைப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சேலத்தில் இருந்து நாகாலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூருக்கு 115 டன் பாலும் (டெட்ரா பேக்குகளில்), மருந்துப்பொருள்களும் சிறப்பு பார்சல் ரயில் மூலமாக ஏற்றி செல்லப்பட்டது.

 

தெற்கு ரயில்வேயின் சேலம் பிரிவின் சிறப்பு முயற்சிகளின் காரணமாக, இந்த பொது முடக் காலத்தின்போது 8.3 லட்சம் ரூபாய் வருவாய் இந்திய ரயில்வேக்கு கிடைத்துள்ளது. நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கான சரக்குப்பொருள்ள் போக்குவரத்தைக் கையாளும் பொறுப்பு வகிப்பதை தெற்கு ரயில்வே பெருமையாகக் கருதுகிறது. சரக்குகளை ஏற்றுவதற்கான அனைத்து பணிகளும் மிக பாதுகாப்பான முறையில் செய்யப்படுகின்றன என்பதை ரயில்வே உறுதி செய்துள்ளது. சரக்குகளை ஏற்றும் பணியாளர்கள் அனைவரும், கைகளால் இயக்கக்கூடிய இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டு உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள எந்த நபரும் உள்ளே அனுமதிக்கப்படாத வகையில், முறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரயில்வே வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

சரக்குகளை ஏற்றுவதற்கான பல்வேறு கட்டப்பணிகளின் போதும், சமூக விலகியிருத்தல் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டது. கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வகையில்,.சரக்குகளை ஏற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள், கைகளை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

 

தனிப்பட்ட சரக்கு வேன்கள் மூலமாக நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச்செல்லும் சேவையை தொடர்ந்து 24 மணி நேரமும் இந்திய ரெயில்வே வழங்கி வருகிறது. கோவிட்-19 நோய் பரவும் இந்தக் காலத்தில், அவசியமான மருந்துப்பொருள்கள், பல்வேறு இடங்களுக்கும் கிடைக்க உதவும் வகையில், தனிப்பட்ட சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மருந்துகள், மருத்துவக் கருவிகள், முகக்கவசங்கள், உணவுப்பொருள்கள், உணவு வகைகள், எழுதுபொருள்கள், அஞ்சல் மற்றும் இதர மருத்துவத் தேவைகளின் போக்குவரத்திற்கு, இந்த சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் உதவுகின்றன.

 

மாநில அரசுகள் உட்பட பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு துரிதப் போக்குவரத்து சேவையாக சரக்கு வேன் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. தெற்கு ரயில்வேயின் இந்த விரிவுபடுத்தப்பட்ட ரயில் சேவையின் காரணமாக தொழிலகங்கள், நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் தனியார் பயனடைகின்றனர். உற்பத்தி அமைப்புகளும், வர்த்தக சங்கங்களும் தங்களது சரக்குகளை ரயில் மூலமாக அனுப்புவதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சரக்குகளுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரக்குகளை அனுப்ப விரும்புபவர்கள், தெற்கு ரயில்வேயில் உதவிக்கும், வழிகாட்டுதலுக்கும் +91-9025342449 என்ற உதவிக்கான தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சேலம் பிரிவில் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கோயம்பத்தூர் 9003956955 ; திருப்பூர் 9600956238; ஈரோடு 9600956231; சேலம் 9003956957.

 

ந்த விவரங்கள் தெற்கு ரயில்வே, சென்னை தலைமைப் பொது மக்கள் தொடர்பு அதிகாரி திரு பி.குநேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

*****



(Release ID: 1619963) Visitor Counter : 135