PIB Headquarters

கபசுர ஆரோக்கிய பானம்- சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு சித்த மருத்துவ வ

Posted On: 30 APR 2020 1:32PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றை முறியடிக்கும் வகையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர நீர் உள்பட பல்வேறு பாரம்பரிய ஆரோக்கிய பானங்களை உட்கொள்ளுமாறு மத்திய ஆயுஷ் அமைச்சகம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்று ஊரடங்குக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடிய தொற்று புதிய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் கட்டுப்படுத்த, அரசு சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஹோமியோபதி, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை ,மாற்று சிகிச்சை வழிமுறைகளாக மேற்கொள்ளவது பற்றி பரிசீலிக்கப்பட்டு  வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நோய்களைத் தடுக்கும் துளசி, வேம்பு, இஞ்சி, மஞ்சள், புதினா ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கிராம பாட்டி வைத்தியம் பிரபலமானதாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நிலவேம்பு குடிநீரைப் பருகுமாறு பரிந்துரைத்துள்ளது. இது குருதித் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான சிகிச்சையாகும்.

திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ், திருச்சி கள விளம்பரத்துறை அதிகாரியிடம் பேசுகையில், மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், 1500-க்கும் அதிகமானோருக்கு சித்த கபசுர ஆரோக்கிய பானம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். முதலமைச்சர் திரு .எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஆரோக்கியம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கபசுர குடிநீர் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்படுவதாக அவர் கூறினார். வீடுகளுக்கும் இது தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருச்சியைச் சேர்ந்த திருமதி. மும்தாஜ் பேகம், அரசு மருத்துவ மனையில் தான் கபசுர குடிநீரை அருந்தியதாகத் தெரிவித்தார். பல நோய்களை எதிர்க்கும் ஆற்றலை இது வழங்கும் என தான் உணருவதாக அவர் கூறினார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. கபசுர குடிநீர் கோவிட்-19 நோயைக் குணப்படுத்தும் மருந்து அல்ல என்றும், ஆனால், இது நோய்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில், தற்காலிக சந்தைகள் மற்றும் காய்கறி சந்தைகள் உள்பட பல இடங்களில் பொது மக்களுக்கு கபசுர பவுடர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, கபசுர பாக்கெட்டுகளை மக்களுக்கு வழங்கி, ஆரோக்கியம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்ட நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை அருந்துமாறு ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று நோய்களைப் பாரம்பரிய மருந்துகள் விரட்டி அடித்து, அவற்றின் ஆற்றலை மீண்டும், மீண்டும்   நிரூபித்துள்ளன. கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சில மாதங்கள் ஆகும் என்ற போதிலும், தற்போதைக்கு அதனைத் தடுக்க, ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையுடன் பாதுகாப்பான இடைவெளி, மக்களிடையே சிறந்த விழிப்புணர்வு  ஆகியவற்றால் நிச்சயமாக முடியும் என்பது திண்ணம்.  

 



(Release ID: 1619952) Visitor Counter : 788