PIB Headquarters

கோவிட்—19 சமூகப் பரவலைத் தடுத்துள்ளது அரசின் உறுதியான நடவடிக்கைகள்.

Posted On: 29 APR 2020 4:05PM by PIB Chennai

கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய,, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றி, கோயம்புத்தூர்  மாவட்ட நிர்வாகம் மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுறுத்தல்கள், அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளிலும் சமூகப்பரவல் ஏற்படாமல் தடுக்க, அடிமட்ட அளவில் பல்வேறு கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மாவட்டத்தில் சுற்றுப்புறத் தூய்மையை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல் துறை, கோவை மாநகராட்சி, பொது நலத்துறை, வருவாய்த்துறை, நகரப்பஞ்சாயத்து, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. ஸ்பெயினிலிருந்து வந்தவருக்கு மார்ச் 19, 2020-இல் முதலாவதாக கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 23, 2020-இல் கடைசியாக ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் மூலம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 141-ஆக கட்டுப்படுத்தப்பட்டது. அவர்களில் இதுவரை சிகிச்சை முடிந்து 128 பேர், வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,548. இந்தப் புள்ளி விவரங்களை கோவையில் உள்ள கள விளம்பரப் பிரிவின் உதவி இயக்குநரிடம் தெரிவித்தனர்.  

இது குறித்து கோயம்புத்தூர் பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஜி.ரமேஷ்குமார் கூறும்போது, “சமூகப்பரவல் ஏற்படாமல் தடுப்பதற்காக, ஆரம்ப நிலையிலேயே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாமணி உறுதிப்படுத்தினார். சர்வதேச விமான நிலையம் தூய்மைப்படுத்தப்பட்டது. வெளியிடங்களிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களது வீடுகளில் பொது அறிவிப்புகள் ஒட்டப்பட்டன,” என்றார்.

களத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், பிற ஊழியர்கள் என அனைவரும் முதல் நாளிலிருந்தே முகக்கவசம் அணிவது, கிருமிநாசினிகள் மூலம் கைகளைத் தூய்மைப்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கோவிட்-19 வைரஸ் நமது மாநிலத்துக்குள் பரவுவதைத் தடுக்கும் வகையில், கேரள எல்லையை மாவட்ட நிர்வாகம் மூடியது. பல்வேறுபட்ட இடங்கள்/ பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டன. கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்ட நாளிலேயே தொடர்புடைய நபர்கள் கண்டறியப்பட்டதுடன், RT pcr சோதனைக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டன.

வீடுவீடாக கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களிடம் சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று கேட்கப்பட்டது. இவை அனைத்தையும் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் ஆவணங்களில் பதிவு செய்தனர். நோய்த்தொற்று தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்குமாறு தனியார் மருத்துவமனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதே போல, யாருக்காவது வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தால், சுகாதாரத்துறைக்குத் தெரிவிக்குமாறு தனியார் மருத்துவமனைகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு வீடுகளை விட்டு வெளியே வரும் போது, முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த உத்தரவை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உழவர் சந்தையில் விற்பனை அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றவும், கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

மிகவும் பாதிக்கப்பட்ட ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, அன்னூர் உள்ளிட்ட 14 பகுதிகள் மக்கள் வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு கூட வெளியே செல்வதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பகுதிகளுக்கான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் விநியோகிக்க மாவட்ட நிர்வாகமே ஏற்பாடு செய்தது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1077 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பொது முடக்கத்தால், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதால், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுரைப்படி, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுமார் 43,000 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய உணவு வழங்கப்பட்டது. இதன்மூலம், பசியால் அவர்கள் அவதிப்படுவது தடுக்கப்பட்டது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 141 என்ற அளவிலேயே மாவட்ட நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடிந்தது. ஏப்ரல் 24, 2020 முதல் கடந்த 5 நாட்களில் புதிதாக யாருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளின் வலுவான அறிவுரைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றியது போல செயல்பட்டால், எந்தவொரு மாவட்ட நிர்வாகமும் நோய்ப்பரவலைத் தடுக்கமுடியும். உயிர்க்கொல்லி நோய்த்தொற்றை சமூகப்பரவல் அளவுக்கு செல்லாமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி. மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை அரசு அமைப்புகள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்காக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள்

கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள மக்களுக்கு இலவச உதவி

தனிமைப்படுத்துதல் மையத்தில் கோவையில் உள்ள சுகாதார சேவைகள் பிரிவு துணை இயக்குநர் ஆய்வுசெய்கிறார்

இடம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு உதவி

=================================



(Release ID: 1619347) Visitor Counter : 176


Read this release in: English