PIB Headquarters

கிசான் ரத் செயலி: பண்ணை விளை பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு உதவிக் கரம்

Posted On: 29 APR 2020 1:57PM by PIB Chennai

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ள மத்திய வேளாண் அமைச்சகம், அவர்களது விளை பொருட்களை எடுத்துச் செல்ல வழிகாட்டியுள்ளது. வேளாண் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இம்மாதம் 17-ம் தேதி விவசாயிகளுக்கான கிசான் ரத் எனப்படும் போக்குவரத்து ஒருங்கிணைப்பு கைபேசி செயலி தொடங்கப்பட்டது. கட்டுப்பாடு இல்லாமல் பரவி வரும் கொடிய கோவிட்-19 தொற்றை முறியடிப்பதற்கான நீட்டிக்கப்பட்ட பொது முடக்கத்தின் மத்தியில் நமது நாடு உள்ளது. தமிழக அரசு போன்ற சில மாநிலங்கள், மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை ரேசன் கடைகள் மூலம் வழங்கி வருகின்றன. உயிர் வாழ்வதற்கு உணவு எப்படி மிகவும் முக்கியமானதோ, அதேபோல, உணவு தானியங்களை போதிய கையிருப்பில் வைத்திருக்க நமக்கு உதவும் விவசாயிகளின் பங்கும் மிக முக்கியமானது. பொது முடக்கம் விவசாயிகளையும் விடவில்லை. அவர்கள் விளைவித்த பொருட்களைச் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாததால், பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி இல்லாததால், ஏராளமான பொருட்கள் அழுகி வீணாவதாகப் புகார்கள் குவிந்தன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு உதவ, கிசான் ரத் செயலி தொடங்கப்பட்டது. கிடைக்கும் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கு உதவும் வகையில் இது தொடங்கப்பட்டது.

கிசான் ரத் செயலியை, ஆன்ட்ராய்டுடன் கூடிய ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டோர் அல்லது கூகுளில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பதிவு செய்ய முதலில், தமிழ், இந்தி, ஆங்கிலம், மராத்தி, பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அடுத்த பக்கத்தில், பிரதமர் கிசான் விவசாயப் பயனாளிகள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யலாம்.  தொலைபேசி எண்ணைப் பூர்த்தி செய்த பின்னர், குறுந்தகவல் மூலம் ஓடிபி எனப்படும் கடவுச்சொல் தொலைபேசியில் வரும். அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர், ஊரகப் பகுதி, நகர்ப்புறப் பகுதிகள், மாவட்டம், மாநிலம், கிராம விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும். வர்த்தகர்களும், தனிப்பட்ட முறையிலோ, அல்லது நிறுவனப் பெயரிலோ தங்களைப் பதிவு செய்யலாம். விவசாயி செயலியில் உள்நுழைந்த பின்பு, தேவைப்படும் போக்குவரத்து வாகனத்தைத் தெரிவு செய்து, கொண்டு செல்ல வேண்டிய இடம் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், எந்த வகைப் பொருள் , குவிண்டாலில் எடை, எப்போது கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றிய தேதி உள்ளிட்ட கால அளவு, எந்த வகை வாகனம் தேவை ஆகிய விவரங்களை செயலியில்  தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர், விவசாயிகளின் கோரிக்கைக்கு பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ள பதில்களை, வாகனங்கள் விவரத்துடன் செயலியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தச் செயலி, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் டிராக்டர்களை விவசாயிகளுடன் இணைக்கிறது.

திருச்சி கள விளம்பர அதிகாரியுடன் பேசிய புள்ளம்பாடி வேளாண் உதவி இயக்குநர் மோகன், திருச்சியில் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல கிசான் ரத் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமது துறை கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறினார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்கு முறைச் சந்தைகள், விவசாய உற்பத்தி அமைப்பு மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், மொத்த விற்பனை, சில்லரை விற்பனை சந்தைகள், பதப்படுத்தும் தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு எடுத்துச் செல்ல இந்தச் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

லால்குடியைச் சேர்ந்த வாழைப்பழ விவசாயி சரவணன், தனக்கு 5 ஏக்கர் வாழைத் தோட்டம் உள்ளதாகக் கூறினார். பொது முடக்கம் காரணமாக, தனது தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்களை சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் தான் சிரமப்பட்டதாக அவர் தெரிவித்தார். வாகனங்களை இயக்கினால் காவல்துறை தடுத்து விடும் எனக் கூறி, ஓட்டுநர்கள் பழங்களை ஏற்றிச் செல்ல மறுத்தனர். இந்த நிலையில், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்ல வசதியாக மத்திய அரசு கிசான் ராத் செயலியைத் தொடங்கியது தன்னைப் போன்ற விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்திருப்பதாக அவர் கூறினார்.

 அதே லால்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், தான் 15 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளதாகவும், கொரோனா பொது முடக்கத்தால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கிசான் ரத் செயலியை அறிமுகம் செய்த மத்திய அரசுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும், அதன் மூலம் வாழைப்பழங்களை சந்தைப்படுத்த வாகன வசதியைத் தன்னால் கண்டறிய முடிந்தது என்றும் அவர் கூறினார்.

இத்தகைய நெருக்கடியான, சிக்கலான காலங்களில் விவசாயிகளுக்கு உதவுவதே தொழில்நுட்பத்தின் இறுதி நோக்கமாகும். கோவிட்-19 பொது முடக்கச் சவாலை எதிர்கொள்ள உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமாகும். நம் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால்,  அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மூலம், விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

Tiruchirapalli Pullambady Assistant Director Agriculture Shri R Mohan

Banana farmer Saravanan from Lalgudi with labourers

Truck laden plantains

Kisan rath app

 



(Release ID: 1619208) Visitor Counter : 269


Read this release in: English