PIB Headquarters

பிரதமரின் ஜன் தன். உஜ்வாலா திட்டங்களின் மூலம் கிடைக்கும் நிதி உதவியை பெண்கள் புகழ்கின்றனர்

Posted On: 28 APR 2020 8:36PM by PIB Chennai

ஒரு நோயின் தீவிர பரவல் என்பது, சமுகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபரையும் ஏறக்குறைய ஒரே மாதிரி பாதிக்கிறது. ஆனால், கோவிட்-19 பெரும் தொற்றை பொறுத்தவரை இது மாறுபடுகிறது. ஏனென்றால், பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் தொடர்பில் வருபவர்களையும், குறைவான எதிர்ப்பு சக்தி உள்ளவர்களையுமே இந்த ஆட்கொல்லி வைரஸ் பாதிக்கிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது எனக் கருதப்பட்டாலும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை, குறிப்பாக குடும்பத்தை எந்த சவாலும் இல்லாமல் நடத்தும் பெண்களை, இந்த பொது முடக்கம் பாதிக்காது என்பதும் அறிந்ததே. இந்த சுகாதார நெருக்கடி நிலை பலதரப்பட்ட தனி நபர்கள் மீதும் சமூகங்களின் மீதும் ஏற்படுத்தும் முதல் மற்றும் இரண்டாம் நிலை விளைவுகள் பற்றிய அடிப்படை புரிதலை அங்கீகரித்து, பயனுள்ள மற்றும் சமமான கொள்கைகளையும் இடையீடுகளையும் பொது முடக்க சமயத்தில் உருவாக்குவதே மத்திய அரசின் தலையாய நோக்கமாகும். இந்த காரணத்தினால் தான், பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு தலா ரூ. 500 வழங்கும் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பும், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கும் அறிவிப்பும், நாடெங்கிலும் உள்ள மகளிருக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாகஜன் தன் கணக்கு வைத்திருக்கும் மகளிருக்கு மாதம் ரூ. 500 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்னும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் பெண்கள் வைத்திருக்கும் கணக்குகளுக்கு நேரடியாக ரூ. 500 செலுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கம், வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமரின் ஜன் தன் திட்டம் என்பது, இந்திய அரசின் நிதி உள்ளடக்க திட்டமாகும். அனைத்து இந்திய குடிமக்களும் சேரும் வகையிலான இந்த திட்டத்தின் நோக்கம் (10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியரும் பாதுகாவலர்  கையாளும் வகையில் கணக்கை திறந்து கொள்ளலாம்), வங்கி கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகளை விரிவுபடுத்துவதும், அவை அனைவரையும் சென்றடைவதும் ஆகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியால் 28 ஆகஸ்ட், 2014, அன்று இந்த நிதி உள்ளடக்க பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் இந்த திட்டத்தை 15 ஆகஸ்ட், 2014 அன்று சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையால் நடத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், தொடக்க நாளன்றே 15 மில்லியன் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த சாதனையை அங்கீகரித்த உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகம், நிதி உள்ளடக்க திட்டத்தின் கீழ் ஒரே வாரத்தில் அதிக எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் 18,096,130 என்றும், இது இந்திய அரசால் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் இருந்து 29க்குள் சாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

இதுவரை 38.23 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்,       பயனாளிகளின் கணக்கில் ரூ.133,564.23 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. தொடக்கம் முதலே, 1.26 லட்சம் வங்கி நண்பர்கள் கிளையில்லா-வங்கி சேவைகளை துணை சேவை பகுதிகளில் வழங்கி வருகிறார்கள். கோவிட்-19 பெரும் தொற்று போன்ற நெருக்கடி நேரத்தில், நிதி உதவியை கொண்டு சேர்க்கஇந்த முயற்சி தான் அரசுக்கு கை கொடுத்தது.

கோயமுத்தூர் கள அலுவலகத்திடம் பேசிய சோமனூரை சேர்ந்த சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினரான கவிதா என்னும் தையல் கலைஞர், பிரதமரின் ஜன் தன் திட்டம் மூலமாக ரூ. 500ம், உஜ்வாலா திட்டத்தின் மூலமாக இலவச சமையல் எரிவாயு உருளையும் இந்த கடினமான நேரத்தில் ஏழைகளுக்கு உதவுவதற்காக அளிப்பதற்கு உரிய நேரத்தில் முடிவெடுத்தற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

மற்றொரு சுய உதவிக் குழுவின் பெண் உறுப்பினர்களான பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த சண்முக பிரியாவும், பீளமேட்டை சேர்ந்த சுசீலாவும் இந்த கருணையான செயலுக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, நெருக்கடியான நேரத்தில் வீட்டு செலவுகளுக்கு இந்த பணம் தங்களுக்கு உதவியதாக தெரிவித்தனர்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களை சேர்ந்த மகளிருக்கு 50 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால்  2016 ம் ஆண்டு மே மாதம் 1 ம் தேதி, அன்று பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. சர்வதேச சுகாதார அமைப்பின் அறிக்கை ஒன்றின் படி, பெண்களால் சுவாசிக்கப்படும் அசுத்தமான எரிபொருளின் புகை, ஒரு மணி நேரத்தில் 400 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமாகும். மேலும், விறகுகளை சேகரிப்பதற்காக, பெண்களும் குழந்தைகளும் அல்லல் படுகின்றனர்.

பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு ஒரு தூய்மையான சமையல் எரிபொருளை - திரவ பெட்ரோலிய வாயுதருவதன் மூலம் அவர்களின் உடல் நலனை பாதுகாப்பதே பிரதமரின் உஜ்வால் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம், அவர்கள் புகைமூட்டமான சமையல் அறைகளிலோ, அல்லது விறகை சேகரிப்பதற்காக பாதுகாப்பில்லாத பகுதிகளிலோ தங்கள் உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்கும் அவசியம் இல்லை.

கோவிட்-19  தொற்று தாக்குதல் நிலைமையின் போது, ரூ.500 நிதி உதவியும், சமையல் எரிவாயு உருளையும் பெரிய நிவாரணம் என்று கோயமுத்தூர் கள அலுவலகத்திடம் தெரிவிக்கும் போது, கோயமுத்தூர் சிறுமுகையை சேர்ந்த ஜன் தன் கணக்கு வைத்திருப்பவரான செல்வி. கௌரி செந்தில்குமார் தெரிவித்தார்.

ரூ. 1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரணத் தொகுப்பின் அங்கமான இந்த இரட்டை நன்மைகள் ஏப்ரல் முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பெரிதும் பாதிகப்பட்டுள்ள பிரிவினரின் துன்பங்களை உள்ளபடியே குறைத்துள்ளதோடு, பொது முடக்கம் முடியும் வரை ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் நல்லதொரு வாழ்வாதாரத்தை மத்திய அரசின் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகள் உறுதி செய்ய பெண்களுக்கு உதவுகின்றன.

<>புகைப்பட விளக்கங்கள்<>

நிதி உதவி ஏழைகளுக்கு ஆதரவளிப்பதாக கவிதா கூறுகிறார்.

வீட்டு செலவுகளை நிர்வகிக்க நிதி உதவியதாக சண்முக பிரியா தெரிவிக்கிறார்.

அரசின் உதவி மிகப்பெரிய நிவாரணம் என்கிறார் சுசீலா.

***
 



(Release ID: 1619076) Visitor Counter : 187