PIB Headquarters

கோவிட் 19 நோய் வராமல் தடுக்க நம்பிக்கையான பாதுகாவலன் ஆரோக்கிய சேது செயலி

Posted On: 27 APR 2020 5:04PM by PIB Chennai

கோவிட் 19 நோய்க்கு எதிரான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இவை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடுமுழுவதும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு வருகின்றன. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து வைரஸ் தொற்றி விடாமல் பாதுகாப்பான தொலைவில் இருக்க உதவும் வகையிலான ஆரோக்கிய சேது என்ற செயலியையும் மத்திய அரசு ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்துத் துறை ஊழியர்களும் ஆரோக்கிய சேது அலைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு அனைத்து துறைகளையும் அறிவுறுத்தியுள்ளது.

தாங்கள் எந்த அளவிற்கு கோவிட் 19 (கொரோனா வைரஸ்) நோயால் பாதிக்கப்படலாம் என்பதை குடிமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையிலான, இந்த ஆரோக்கிய சேது என்ற அலைபேசி செயலி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தச் செயலியைப் பயன்படுத்தும் ஒருவர், தான் தொடர்பில் இருந்தவர்களில் யாரேனும், கோவிட் 19 இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தார்களா என்பதை அறிந்து கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்தச் செயலி. ப்ளூடூத் மற்றும் இடங்களை அடிப்படையாகக் கொண்ட சமூக கிராஃப் மூலம் டிராக் செய்யப்படும் தகவல்கள் மூலம், நோய் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நாம் தொடர்பில் இருந்திருக்கிறோமா என்பது தெரியவரும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்த பின்னர், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கான விடைகளின் அடிப்படையில், கோவிட் 19 நோய் அறிகுறிகள் உள்ளதாகத் தெரிய வந்தால், அது குறித்த தகவல்கள் அரசு சர்வரு-க்கு அனுப்பப்படும். இந்த விவரங்களின் அடிப்படையில், அரசு தகுந்த காலத்தில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும். நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் எவரேனும் இருந்தால், அது குறித்தும் இந்த செயலி எச்சரிக்கை செய்யும். கூகுள் பிளே (ஆண்ட்ராய்டு அலைபேசிகளுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் (போன்களுக்கு) என இரண்டிலுமே இந்தச் செயலி கிடைக்கும். இந்தச் செயலி 10 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் கிடைக்கிறது.

மக்களின் நலனுக்காகவே இந்திய அரசு ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று சமூகப் பணிக் கல்வி பயிலும் கல்லூரி மாணவி சினேகா கூறியுள்ளார். இந்தச் செயலியை பயன்படுத்துபவர் தாங்கள் பாதுகாப்பான வளையத்துக்குள் தான் இருக்கிறோமா என்பதைக் கண்டறிய மக்களுக்கு உதவும். தொற்று பரவும் இந்த காலகட்டத்தில், இதன் பயன்பாடு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களுக்கும் இது மிகவும் உதவியாக உள்ளது என்றும் கோவிட் 19 பற்றிய முக்கியமான தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு கோயம்புத்தூர்  பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இல்லத்தரசி பிரேமா, நன்றி தெரிவித்தார். இதனால் கோவிட் 19 நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும், வைரஸ் பற்றிய பல பயனுள்ள தகவல்களை இதன் மூலம் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியதற்கு மாண்புமிகு பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான மிகப் பெரிய முயற்சி இது என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த எபனேசர் பால்ராஜன் கூறியுள்ளார்.

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து, அதைப் பயன்படுத்தி வைரஸ் பரவாமல் தடுப்பதற்கா அரசின் முயற்சிகளுக்கு உதவுவது பொறுப்புள்ள குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்த செயலி மிகவும் பயனுள்ளது’, சினேகா, கல்லூரி மாணவி

இந்த செயலி நல்லதொரு வழிகாட்டி என்று பாராட்டுகிறார் பிரேமா இல்லத்தரசி

இந்த செயலி கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நல்ல முயற்சி என்று பாராட்டுகிறார் எபனேசர்

 


(Release ID: 1618744) Visitor Counter : 1592


Read this release in: English