PIB Headquarters

ரெயில் பெட்டிகள், கோவிட்-19 தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மறுசீரமைக்கப்படுகின்றன

Posted On: 27 APR 2020 2:27PM by PIB Chennai

நமது நாட்டின் உயிர்நாடியாக இருக்கின்ற இந்திய ரெயில்வேயானது கோவிட்-19 நோயாளிகளிடம் எதிர்பாராது ஏற்படக்கூடிய எந்த ஒரு விளைவையும் எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.  மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதன் மூலம் பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பயணிகள் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.  தொற்று பாதிக்காத மாநிலங்களுக்கு கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையானது உதவி உள்ளது.  ரெயில்வே தனது தன்னலமற்ற சேவைகளை சரக்குப் பொருள் போக்குவரத்தோடு தொடர்ந்து செய்து வருகிறது.  பல இடங்களில் சாலைவழிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் சரக்கு ரெயில்கள் மூலம் இன்றியமையாத பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.  இது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவி உள்ளது.

இத்தகையச் சூழலில் பக்கவாட்டுத் தண்டவாளப் பாதைகளில் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல ரெயில்களை, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக சில பெட்டிகளை மறுகட்டமைப்பு செய்து மாற்றுவதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள முயற்சியானது, புத்திசாலித்தனமான செயலாகும். உள்ளூர் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இனியும் இடம் இல்லை என்னும் சூழல் ஏற்படும் போது கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளையும் ரெயில் பெட்டிகளையும் பயன்படுத்திக் கொள்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.  15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 5000 ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தி வைக்கும் வார்டாக மாற்ற இந்திய ரெயில்வே முடிவெடுத்தது.  ரெயில்வே வாரியம் தென்னக ரெயில்வேக்கு 573 பெட்டிகளை மாற்றும் இலக்கை நிர்ணயித்து உள்ளது. இந்தப் பெட்டிகளை வார்டாக மாற்றும் பணியானது திருச்சி பொன்மலை பணிமனை, பெரம்பூர் ரெயில்பெட்டித் தொழிற்சாலை,  பெரம்பூர் ரெயில் எஞ்சின் பணிமனை மற்றும் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆறு கோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி கோட்டத்தில், 44 ரெயில் பெட்டிகள் கோவிட்-19 தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன.  திருச்சிராப்பள்ளி ரெயில் பெட்டி பணிமனையில் 34 பெட்டிகளும் விழுப்புரம் ரெயில் பெட்டி பணிமனையில் 10 பெட்டிகளும் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று திருச்சி கோட்ட ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலர் மானசா ரஞ்சன் தலாய் தெரிவித்து உள்ளார்.  ரெயில்வே பெட்டி பணிமனையானது குழாயைத் தொடாமலேயே கைகளைக் கழுவுவதற்கு ஏற்ற வகையில் சோப்பையும் நீரையும் தருகின்ற அமைப்பு முறையை உருவாக்கி உள்ளது.  கோவிட்-19 வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என அவர் திருச்சி களவிளம்பர அதிகாரியிடம் தெரிவித்தார்.  தனிமைப்படுத்தி வைக்கும் இந்தப் பெட்டிகளில் குளியலறை இணைக்கப்பட்டு உள்ளதோடு பெட்டியின் நுழைவாயிலில் திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டு உள்ளன.  இது நோயாளிகளைத் தனித்து வைக்க உதவியாக இருக்கும்.  ஒவ்வொரு பெட்டியிலும் காலால் மூடியைத் திறந்து மூடும் வகையில் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் மூன்று குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன.  ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தொங்க விடுவதற்கு கிளாம்புகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தண்ணீர் பைப்புகளும் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ள கழிவறைகள் சோப் டிஸ்பன்சருடன் கூடிய குளியல் அறைகளாக மாற்றப்பட்டு உள்ளன.

ரெயில் பெட்டிகள் அவசரநிலை தனிமைப்படுத்தும் சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வகையில் தயாராக உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் திருச்சி கோட்டத்துக்குள் மருத்துவ வசதி கிடைக்காத கிராமங்களை ஒட்டியுள்ள நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.  தற்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9 நோயாளிகள் உள்ளிட்டு மொத்தமாக 17 நோயாளிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டிற்கும் நாட்டின் குடிமக்களுக்கும் சேவை ஆற்றுவதில் இந்திய ரெயில்வே எப்போதும் முன்னணியில் இருக்கிறது.  தொலைதூரப் பகுதிகளிலும் பெருந்தொற்றுப் பரவல் ஏற்பட்டால் அப்பொழுது எழும் நெருக்கடியைச் சமாளிக்க சுகாதாரத் துறைக்கு இந்த தனிமைப்படுத்தி வைக்கும் வார்டு பெட்டிகள் நிச்சயம் உதவியாக இருக்கும்.  வரும் முன் காப்பதே நல்லது என்ற பழமொழிக்கு ஏற்ப, மத்திய அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் பெருந்தொற்றுக்கு எதிராக எடுத்து வருகிறது.  இந்திய ரெயில்வேயும் பெருமித உணர்வோடு தனது பங்கினைச் செய்து வருகிறது.

திருச்சி ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி மானசா ரஞ்சன் தலாய்

திருச்சி கோட்டத்தில் கோவிட்-19 தனிமைப்படுத்தல் ரெயில்பெட்டி

திருச்சி கோட்டத்தில் ரெயில்பெட்டிகள் தனிமைப்படுத்தி வைக்கும் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன

தனிமைப்படுத்தி வைக்கும் ரெயில்பெட்டிகளில் கழிப்பறை குளியலறையாக மாற்றப்பட்டுள்ளது



(Release ID: 1618687) Visitor Counter : 136


Read this release in: English