PIB Headquarters

கொரோனா வீரர்களாக செயல்படும் மக்கள் மருந்தகங்கள்

Posted On: 23 APR 2020 6:31PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டத்தின் கீழ், பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்களின் (PMBJAK) மருந்தாளுநர்கள் அத்தியாவசிய சேவைகளையும் மருந்துகளையும் நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று வழங்குகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசின் சமூக இடைவெளி முயற்சியை சிறப்பாக அமல்படுத்தும் விதத்தில், தரமான பொது மருந்துகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கு சென்று அளித்து அத்தியாவசிய சேவையை வழங்குகின்றனர்.

தேவையுள்ள அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த விலையிலான மருத்துவ சேவையை அளிக்கும் நோக்கில், இந்திய அரசின் மருந்துகள் துறையின் கீழ் இயங்கும், இந்திய மருந்துகள் பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலகத்தால் (BPPI) பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள் (PMBJAK) நடத்தப்படுகின்றன. நாட்டின் 726 மாவட்டங்களை சென்றடையும் விதமாக, 6300 பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள் நாடு முழுவதும் தற்போது செயல்படுகின்றன. தரமான மருந்துகளை குறைவான விலையில் அனைவருக்கும் கிடைக்க செய்யும் நோக்கோடு பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 2014இல் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத விதத்தில், சுகாதார சேவையை குறைவான விலையில் சாதாரண குடிமகன் பெற இந்த மையங்கள் உதவுவதாக, கோயமுத்தூர் சித்தாபுதூரில் உள்ள மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர், திரு. . வி. ஷிரில் கூறுகிறார்.

மோடி கிளினிக் என்னும் மருத்துவ மையத்தை ஆரம்பித்த திரு. ஷிரில், மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர், திரு. கங்காபுரம் கிஷன் ரெட்டி முன்னிலையில், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் உரையாடியதற்காக மகிழ்ச்சியுடன் உள்ளார்.

ஒட்டுமொத்த கோயமுத்தூரிலேயே இப்படி ஒரு மையத்தை 2017இல் பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்களின் கீழ் அமைத்தது ஒரு முன்மாதிரியான முயற்சி என்று கூறுகிறார், கண்ணம்பாளையத்தில் உள்ள பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகத்தின் தலைவர், திருமதி. பாக்கியலட்சுமி. 75 சதவீதம் வரையிலான தள்ளுபடியை ஏழைகளுக்கும் ஓய்வுபெற்ற மக்களுக்கும் அளிக்கும் இந்த மையங்கள், தேவையுள்ளோருக்கு சேவை செய்யும் ஒரே நோக்கத்தோடு செயல்படுவதாக அவர் மேலும் கூறினார். பொது முடக்க சமயத்தில் தேவையான கையிருப்பு மையத்தில் உள்ளதை அவர்கள் உறுதி செய்து கொள்வதாகவும், ஒரு நாளைக்கு 100 முதல் 150 பயனாளிகள் மருந்துகள் வாங்க இந்த மையத்திற்கு வருகை புரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

சூலூரில் உள்ள இன்னொரு மையத்தின் பயனாளியான, திரு. சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, அனைத்து மருந்துகளும் தள்ளுபடி விலையில் கிடைப்பதால், பொது முடக்க சமயத்தில் இந்த மையம் ர் ஆறுதல் என தெரிவித்தார். இந்த மையம், மருத்துவத் துறையில் மத்திய அரசின் மிக சிறப்பான முயற்சி என மேலும் அவர் கூறினார்.

பொது முடக்க சமயத்தில், மக்கள் தங்களை கொரோனா வைரசிடம் இருந்து காத்துக் கொள்ள உதவுவதற்காக, தங்களுடையசமூக ஊடக தளங்களில் பயனுள்ள பதிவுகள் மூலம் பிரதமரின் இந்திய மக்கள் மருந்தகங்கள் ஆன்லைனிலும் விழிப்புணர்வை உண்டாக்குகின்றன. @pmbjpbppi முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்வதன் மூலம் தொடர் தகவல்களை ஒருவர் பெறலாம்.

***



(Release ID: 1617539) Visitor Counter : 150


Read this release in: English