PIB Headquarters

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம்: அல்லல்படும் விவாயிகளுக்கு ஆறுதலான உதவி

Posted On: 22 APR 2020 6:12PM by PIB Chennai

விளைநிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முதலாவது தவணை ரூ.2000 தொகையை முன்கூட்டியே வழங்குவதற்கு மத்திய அரசு எடுத்த முடிவு, அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. கொரோனா முடக்கநிலை அமல் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளுக்கு இது உரிய காலத்தில் கிடைத்த உதவியாக அமைந்துள்ளது. `உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்' என்று பழமொழியே இருக்கிறது. இதுபோன்ற விளிம்புநிலை விவசாயிகளின் துன்பங்களைக் குறைக்கும் வகையில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமரின் கிசான் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்படும். அரசின் பதிவேடுகளின்படி நாடு முழுக்க 8.89 கோடி விவசாயிகளுக்கு ரூ.17,793 கோடி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் விளிம்புநிலை விவசாயிகள், கொரோனா முடக்கநிலையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கோடை பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் இப்போது தொழிலாளர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காத காரணத்தால் நெல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். விளைச்சல் நன்றாக இருந்தாலும், விலைகள் குறையும் என்பதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பது தான் உண்மை நிலையாக உள்ளது. பற்றாக்குறை இருந்தாலும், இடைத்தரகர்கள் தான் சம்பாதிப்பார்கள் என்று விவசாயிகள் கூறுகின்றனர். முடக்கநிலையால் துன்புறும் விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கைகள் பயன் தருவதாக அமைந்துள்ளன.

வேளாண்மைத் துறை சார்பில் வேன்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுவதாகவும், பிரதமரின் கிசான் உதவித் தொகை வழங்குவது உறுதி செய்யப்படுவதாகவும் புல்லம்பாடி உதவி இயக்குநர் (வேளாண்மை) திரு. மோகன் தெரிவித்தார். திருச்சி மற்றும் புல்லம்பாடி ஒன்றியங்களில் 1,41,070 பயனாளிகள் இருப்பதாகத் தெரிவித்தார். இதில் 13,298 பேர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு புதிய காய்கறிகள் தேவைப்படும் நிலையில், வேளாண்மைத் துறை உதவிக்கரம் நீட்டியுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்முதல் செய்து, மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதற்கு விவசாயிகள் ஆர்வக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமரின் மந்தன் திட்டத்தின் கீழ், வயதைப் பொருத்து மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை சந்தா செலுத்தும் விவசாயிகளுக்கு ரூ.3000 மாத ஓய்வூதியம்  வழங்கும் திட்டம் மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது.

முடக்கநிலை காலத்தில், வங்கியில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், தன் சேமிப்புக் கணக்கில் இருந்த பணம் உதவிகரமாக இருந்தது என்று லால்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் சமுத்திரம் தெரிவித்தார். கடினமான சூழ்நிலைகளில் நிதியுதவி அளித்தமைக்காக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தங்களால் வாங்கிக் கொள்ள முடியும் என்றார் அவர்.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முடக்கநிலை அமல் காலத்தில் ரூ.2000 வழங்கி இருப்பது, உரிய காலத்தில் அரசு அளித்த உதவியாக உள்ளது என்று மண்ணச்சநல்லூர் பகுதி திருவரங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீதர் கூறினார்.

முடக்கநிலை அமல் காலத்திலும்கூட, பசுமையான கீரைகள் உள்ளிட்ட, பசுமையான காய்கறிகள் தங்களுக்குக் கிடைப்பதாக திருச்சியைச் சேர்ந்த கலா என்ற இல்லத்தரசி தெரிவித்தார். தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 விலையிலும், வெண்டைக்காய் கிலோ ரூ.30 விலையிலும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 விலையிலும் கிடைப்பதாக அவர் கூறினார். நெருக்கடியான காலக்கட்டத்திலும், விவசாயிகள் கடுமையாக உழைத்து, உணவுப் பொருட்களை விளைவித்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2000 வழங்கும் முடிவை வரவேற்பதாக அவர் கூறினார்.

முடக்கநிலையின் நெருக்கடியான காலக்கட்டத்தை சமாளிக்க உதவிய விவசாயிகளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாக இது உள்ளது. உரிய காலத்தில் அரசின் தலையீடுகள் இருப்பதால், அத்தியாவசிப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாம் சாப்பிட ஆரோக்கியமான உணவு அளித்து, கோவிட்-19 பாதிப்பில் இருந்து மக்களைப் பதுகாக்க உதவிய விவசாயிகளின் முகங்களில் நாம் புன்னகையைப் பார்க்க வேண்டும்.

                            வேளாண்மை உதவி இயக்குநர் மோகன்



(Release ID: 1617192) Visitor Counter : 1488


Read this release in: English