PIB Headquarters

சீல் வைக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அஞ்சல் துறை ரூ.22 லட்சம் பட்டுவாடா

Posted On: 22 APR 2020 3:15PM by PIB Chennai

புதுச்சேரி கோட்ட அஞ்சல்துறையின் சார்பில் புதுச்சேரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட ஐந்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அஞ்சல்துறை ரூ.22 லட்சம் பட்டுவாடா செய்து உள்ளது. 

ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதியும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளும் கட்டுப்பாட்டு மண்டலமாக (Containment Zone)  அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.  அங்கிருக்கும் மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்படும்.  இந்தத் தடை காலத்தில் குடியிருப்புவாசிகள் அஞ்சலகம், வங்கி மற்றும் ஏ.டி.எம்-களுக்கு நேரில் சென்று பணம் எடுப்பது முடியாத செயலாக மாறிவிடுகிறது.  இந்தச் சூழலில்தான் ஆதார் மூலமான பட்டுவாடா சேவை உதவியாக அமைகிறது.  அஞ்சலக ஊழியர்கள் பணம் எடுக்கத் தேவைப்படுவோர் வீட்டிற்கே சென்று பணம் வழங்குகின்றனர். எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அஞ்சல் ஊழியர் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பணம் எடுத்துக் கொள்ளலாம்.  ரூ.500 முதல் ரூ.10,000 வரை அஞ்சல்துறை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும்.  இந்தச் சேவையில் ஈடுபடும் அஞ்சல்துறை ஊழியர் தனது செல்போனில் உள்ள மைக்ரோ ஏ.டி.எம் செயலி மூலமும் பயோ மெட்ரிக் கருவி மூலமும் பணம் தேவைப்படுபவர் குறித்த விவரங்களை சரி பார்த்து தேவையான பணத்தை வழங்குவார். பணம் எடுக்க நினைப்பவர் ஆதார் எண்ணும் மொபைல் ஃபோனும் வைத்திருக்க வேண்டும். ஓ.டி.பி.(OTP)ஐச் சொல்லவேண்டும். இந்த முறையில் பணம் எடுக்க வங்கியின் கணக்கு எண் தேவையில்லை.

புதுச்சேரி கோட்ட அஞ்சலகம் சார்பில் இந்தச் சேவை புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தரப்படுகிறது. இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தச் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  வில்லியனூர் தெற்கு சார்ஆட்சியர் திரு.ஷஷாவத் செளரப் கேட்டுக் கொண்டதற்கிணங்க அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் திரு.அகில்ஆர்.நாயர் சிறப்பு குழுக்களை உருவாக்கி இந்தப் பிராந்தியத்தில் உள்ள சீல் வைக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு வங்கிப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.  அதற்கேற்ப உதவி அஞ்சல் உட்கோட்ட கண்காணிப்பாளர் திருமிகு.ஆ.ம.முத்துமாரி நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுக்களுடன் திருவண்டார்கோயில், திருபுவனை, திருக்கனூர், காட்டேரிகுப்பம் மற்றும் மூலகுளம் ஆகிய சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வார காலமாக இந்தச் சேவையின்கீழ் பணம் வழங்கி வருகின்றனர். 

சீல் வைக்கப்பட்டப் பகுதி   பயனாளிகளின் எண்ணிக்கை பட்டுவாடா தொகை (மதிப்பு ரூபாயில்)

திருவண்டார்கோயில்  312         ரூ.7,95,000

திருபுவனை     126         ரூ.3,39,000

திருக்கனூர் 41           ரூ.1,01,700

காட்டேரிக்குப்பம் 69           ரூ.2,20,000

மூலகுளம் 325         ரூ.7,59,700

மொத்தம்  873         ரூ.22,15,400

 

ஒவ்வொரு பகுதிக்கும் சுமார் 15 பேர் கொண்ட அஞ்சலக ஊழியர்கள் வருவாய் துறையினருடன் சேர்ந்து 873 பயனாளிகளுக்கு 22,15,400 ரூபாய் பட்டுவாடா செய்துள்ளனர்.

அஞ்சல் உதவி உட்கோட்ட கண்காணிப்பாளர்(தெற்கு) ஆ.ம.மாரிமுத்து, மெயில் ஓவர்சியர்கள் கே.தியாகராஜன் மற்றும் எஸ்.சுரேஷ், பல்வேறு கிளை அஞ்சலகங்களின் அதிகாரிகளான செல்வம், மகேஷ்வரி, ஜீவா, முருகன், திருமடந்தை மற்றும் கிளை அஞ்சலக துணை அலுவலர்கள், தபால் சேவகர்கள், அஞ்சல் ஊழியர்கள் என்று 40 பேர் கொண்ட குழுவினர் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பணப்பட்டுவாடா செய்துள்ளனர்.

சீல் வைக்கப்பட்ட பகுதியில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் இந்த அஞ்சல் ஊழியர்கள் பணம் தேவைப்படுவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக சந்தித்து பணம் பட்டுவாடா செய்த செயலை பலரும் பாராட்டுகின்றனர்.

இந்தச் சேவையின் மூலம் வங்கிப் பணத்தை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் 996287517 மற்றும் 9994488568 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

 

 



(Release ID: 1617037) Visitor Counter : 292