PIB Headquarters
சுகன்யா சம்ரிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவிக்கரம்
Posted On:
20 APR 2020 3:27PM by PIB Chennai
சுகன்யா சம்ரிதி கணக்கு (எஸ்.எஸ்.ஏ.), பி.பி.எப்., தொடர் வைப்பு நிதி கணக்குகளில் பணம் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் தரப்படும் என மத்திய நிதி அமைச்சகம் எடுத்துள்ள முடிவுக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. கோவிட்-19-ன் தொடர்ச்சியாக முடக்கநிலை அமல் செய்யப்பட்டிருப்பதால், சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதால், தாங்கள் செலுத்த வேண்டிய தொகைகளை இயல்பு நிலை திரும்பிய பிறகு செலுத்தினால் போதும் என்ற முடிவு நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைய பெண் குழந்தைகள் பயன்பெற்று, தேவையான காலத்தில் அது உதவிகரமாக அமைந்துள்ளது. குழந்தைகள் பிறப்பில் பாலின விகிதம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக ”பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2015 ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக சுகன்யா சம்ரிதி திட்டம் செயல்படுகிறது.
பாதுகாவலர்கள் பலரும் வருமான வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக நிதியாண்டின் இறுதியில் பணம் செலுத்துவதற்கு காத்திருந்தனர் என்று ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த லட்சுமி தெரிவித்தார். முடக்கநிலை அமலுக்கு வந்ததால் வருமானம் தடைபட்டுவிட்டது. 2019-20 ஆம் ஆண்டுக்கு சுகன்யா சம்ரிதி கணக்கில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை செலுத்துவதற்கான காலத்தை ஜூன் 30 வரை மூன்று மாத காலத்திற்கு நீட்டித்த மத்திய அரசுக்கு நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார். குறைந்தபட்ச தொகையை செலுத்த முடியாமல் போனால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் அல்லது கணக்கையே முடித்து வைத்திருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கும் என்றார் அவர்.
திருச்சியைச் சேர்ந்த மகாலட்சுமி தனது மகள் பெயரில் சுகன்யா சம்ரிதி கணக்கைத் தொடங்கினார். வேலைக்குச் செல்லும் அவர், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருந்தது என்கிறார். முன்பு இதற்கு தரப்பட்ட வட்டி விகிதம் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்கிறார். சிறுசேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை அரசு உயர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். யாரையும் சார்ந்திராமல், சொந்தக் காலில் நிற்கும் அவர், தனது மகள் நன்றாகப் படித்து, புதிய உச்சங்களைத் தொட வேண்டும் என்று விரும்புகிறார். பெண் குழந்தைகளுக்கு - போதும் பெண் - என்றும், வேண்டாம் பெண் என்றும் பெயரிடக் கூடிய சமூகத்தில் இது உத்வேகத்தை ஊட்டுவதாக உள்ளது.
10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தையின் பெயரில் ரூ.250 குறைந்தபட்ச டெபாசிட் செலுத்தி, பாதுகாவலர் கூட செல்வ மகள் திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும் என்று திருச்சியைச் சேர்ந்த தபால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிறகு நூறின் மடங்குகளாக அவர்கள் பணம் செலுத்தலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரையில், பெண் குழந்தைக்கு 15 வயதாகும் வரையில் செலுத்தலாம். அந்தப் பெண் 18 வயதை எட்டும்போது, கல்விச் செலவுக்காக இதில் 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பெண் 21 வயதாகும் போது இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும். திருச்சி தபால் கோட்டத்தில் இதில் 56,578 கணக்குகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் செல்மகள் சேமிப்புத் திட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் கணக்குகள் இருக்கின்றன. திருச்சி அஞ்சல் கோட்டம், பீமன் நகர் மாநகராட்சிப் பள்ளியில் கடந்த மாதம் மாணவிகளுக்காக சிறப்பு முகாம் நடத்தியது. அதில் 50 செல்மகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டன. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பெற்றோர்களிடம் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குவதில் தபால் துறையின் தமிழக பிரிவு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
*****
(Release ID: 1616350)
Visitor Counter : 205