PIB Headquarters

கொவிட்-19 ஊரடங்கின் போது அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை தமிழக அஞ்சல் வட்டம் அளித்து வருகிறது

Posted On: 03 APR 2020 4:17PM by PIB Chennai

கொவிட்-19 முடக்கத்தின் போதும், தமிழக அஞ்சல் வட்டம், பொது மக்களுக்கு அடிப்படை அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை அளித்து வருகிறது. அஞ்சல் சேவை, முடக்க காலத்தின் போது அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகும். பொது மக்களுக்கும்,ங்களது வாடிக்கையாளர்களுக்கும், அடிப்படை சேவைகளை வழங்குவதற்காக, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்கள், தெரிந்தெடுக்கப்பட்ட உபஅஞ்சல் அலுவலகங்கள், மாநிலங்களில் உள்ள கிராமப்புற கிளை அஞ்சல் அலுவலகங்கள், ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த அஞ்சலகங்களை, பொதுமக்களும் வாடிக்கையாளர்களும், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (மணியார்டர் அனுப்புதல்) மற்றும் இதர நிதி பரிவர்த்தனை சேவைகளுக்கு, பயன்படுத்திக் கொள்ளலாம்.

அஞ்சலகங்கள் அமைந்துள்ள இடங்களில் உள்ள இந்தியா போஸ்ட் ஏடிஎம்கள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்களது அஞ்சலக வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள, இந்த ஏடிஎம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றின் ஏடிஎம் அட்டைதாரர்களும், தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க, இந்தியா போஸ்ட் ஏடிஎம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அஞ்சல் ஊழியர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தவாறே, பெறுநரின் இல்லத்திற்கே சென்று, முதியோர் ஓய்வூதியம் உட்பட மணியார்டர் மூலம் அனுப்பப்படும் பணத்தையும் பட்டுவாடா செய்கின்றனர்.

இந்தியா போஸ்ட் ஏடிஎம் மூலமாக மட்டுமல்லாமல், ஏ இ பி எஸ் எனப்படும் (AEPS –Aadhar Enabled Payment System) ஆதார் உதவியுடனான பணப்பட்டுவாடா முறையைப் பயன்படுத்தியும், அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது தங்கள் வீடுகளில் இருந்தபடியே அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவோ, தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பொதுமக்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம். இது இந்தியா போஸ்ட் வழங்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு சேவையாகும்.

பொதுமக்கள்; மருத்துவ, மருந்தாளுமை நிறுவனங்கள்; மின்னணு வணிக நிறுவனங்கள் போன்றவை,  தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர மருத்துவ, மருந்துகள் தொடர்பான அத்தியாவசியமான மற்றும் உயிர் காக்கும் பொருட்களையும், அஞ்சலகங்கள் மூலமாக அனுப்பலாம்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் பெட்டகங்களை அனுப்புவதற்கான போக்குவரத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மைய அதிகாரி: திரு கே எஸ் தேவராஜ், உதவி போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் (வணிக மேம்பாடு).வரை 79755 45990 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேவைப்படும் இதர சேவைக்காகவும், இதே எண்ணில் வாட்ஸ்அப் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

இந்தத் தகவலை தமிழ்நாடு வட்ட சீஃப் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு பி செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



(Release ID: 1610687) Visitor Counter : 121