நிதி அமைச்சகம்

பிராந்திய ஊரக வங்கிகளின் போதுமான முதலீட்டு விகிதத்தை மேம்படுத்த மறு மூலதனமாக்கலுக்கு ஒப்புதல் அளித்தது அமைச்சரவை

Posted On: 25 MAR 2020 3:46PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பிராந்திய ஊரக வங்கிகளின் மறு மூலதனமாக்கல் செயல்முறை தொடர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களின் படி போதுமான முதலீட்டு விகிதமான‌ 9 சதவீதத்தை பராமரிக்கமுடியாத பிராந்திய ஊரக வங்கிகளுக்கு, குறைந்தபட்ச ஒழுங்குமுறை முதலீடு 2019-20க்கு பிறகும் இன்னொரு வருடத்துக்கு அளிக்கப்படும்.

மத்திய அரசின் பங்குக்கு ஏற்பஸ்பான்சர் வங்கிகளும் பங்குத் தொகையை அளிக்கும் பட்சத்தில், மத்திய அரசின் பங்கான ரூ 670 கோடியை (அதாவது, மொத்த மறு மூலதனமாக்கல் ஆதரவு நிதியான ரூ 1,340 கோடியின் 50 சதவீதம்) பிராந்திய ஊரக வங்கிகளின் மறு மூலதனமாக்கலுக்காக பயன்படுத்திக் கொள்ளலாமென்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நன்மைகள்

வலுவான நிதி நிலைமையும் மேம்படுத்தப்பட்ட போதுமான முதலீட்டு விகிதமும், ஊரகப் பகுதிகளில் உள்ள கடன் தேவையை பிராந்திய ஊரக வங்கிகள் பூர்த்தி செய்ய உதவி செய்யும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, பிராந்திய ஊரக வங்கிகள் தங்கள் மொத்த கடனில் 75 சதவீதத்தை முன்னுரிமை துறைகளுக்கான கடனாக வழங்க வேண்டும். விவசாயத் துறை மற்றும் ஊரகப் பகுதிகளில், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், கிராமப்புற கலைஞர்கள் மற்றும் சமூகத்தில் வலுவிழந்த பிரிவுகளை சேர்ந்தவர்களின் கடன் மற்றும் வங்கி தேவைகளை பூர்த்தி செய்வதே பிராந்திய ஊரக வங்கிகளின் முக்கிய கடமையாகும். கூடுதலாக, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு கடன்களையும் பிராந்திய ஊரக வங்கிகள் அளிக்கும். போதுமான முதலீட்டு விகிதத்தை மேம்படுத்த மறு மூலதன ஆதரவு அளிப்பதன் மூலம், பிராந்திய ஊரக வங்கிகள் மேற்கண்ட பிரிவினருக்கு, முன்னுரிமை துறைகளுக்கான கடன்கள் இலக்கின் கீழ் தொடர்ந்து நிதியை வழங்க முடியும். இதனால், கிராமப்புற வாழ்வாதாரத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியும்.

 

பின்னணி:

பிராந்திய ஊரக வங்கிகளின் போதுமான முதலீட்டு விகிதத்தை வெளிப்படுத்தும் விதிகளை மார்ச் 2008ல் இருந்து  அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த முடிவைத் தொடர்ந்து, டாக்டர் கே சி சக்ரபர்த்தி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரைகளின் படி, பிராந்திய ஊரக வங்கிகளின் மறு மூலதனமாக்கல் ஆதரவுக்காக ரூ 2,200 கோடியும், பலவீனமான பிராந்திய ஊரக வங்கிகளின் (குறிப்பாக வட கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில்) தேவைகளுக்காக தற்செயல் நிதியாக ரூ 700 கோடியும், பிராந்திய ஊரக வங்கிகளின் மறு மூலதனமாக்கல் திட்டத்தின் படி 10 பிப்ரவரி, 2011 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் படி, பிராந்திய ஊரக வங்கிகளின் போதுமான முதலீட்டு விகிதத்திதை கருத்தில் கொண்டு, 9 சதவீதம் போதுமான முதலீட்டு விகிதத்துக்கான மறு மூலதனமாக்கல் ஆதரவு தேவைப்படும் பிராந்திய ஊரக வங்கிகளை நபார்டு வங்கி தேர்வு செய்யும்.

2011க்கு பிறகு, இந்திய அரசின் 50 சதவீத பங்கானரூ 1,450 கோடியுடன், ரூ 2,900 கோடி நிதி உதவி, 2019-20 வரை பிராந்திய ஊரக வங்கிகள் மறு மூலதனமாக்கல் திட்டதின் கீழ் படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. மறு மூலதனமாக்கலுக்காக, இந்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ 1,450 கோடியில், ரூ 1,395.64 கோடி 2019-20 வரை பிராந்திய ஊரக வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், பிராந்திய ஊரக வங்கிகள் பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பிராந்திய ஊரக வங்கிகள் தங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ளவும், தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவும், முதலீடு, செயல்படும் இடம் மற்றும் வெளிப்பாட்டை மேம்படுத்தவும், பிராந்திய ஊரக வங்கிகளின் ஒருங்கிணைப்பை மூன்று கட்டங்களில் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் மூலம், 2005ல் 196 ஆக இருந்தபிராந்திய ஊரக வங்கிகளின் எண்ணிக்கை, தற்போது 45 ஆக உள்ளது.

 

***


(Release ID: 1608156) Visitor Counter : 187


Read this release in: English , Hindi