சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோவல் கொரோனாவைரஸ் பாதிப்பை ஆய்வு செய்ய பிரதமர் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர்கள் அளவிலான உயர்மட்டக் குழு அமைப்பு - இன்று முதல் கூட்டம் நடைபெற்றது
Posted On:
03 FEB 2020 6:18PM by PIB Chennai
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் எழுந்துள்ள நிலைமை மற்றும் சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட சுமார் 600 பேருக்கான கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா இன்று ஆய்வு செய்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், பிரதமரின் முதன்மை ஆலோசகர் திரு பி கே சின்ஹா, அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் மற்றும் சம்பந்தப்பட்ட பிற துறைகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாட்டில் நோவல் கொரோனாவைரஸ் பாதிப்பை ஆய்வு செய்து, கண்காணிப்பதுடன், இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆயத்த நிலை குறித்து மதிப்பிடவும், பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், உள்துறை இணையமைச்சர் திரு.ஜி. கிஷன் ரெட்டி, சுகாதாரம் & குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, கப்பல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் லால் மண்டாவியா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள் அளவிலான இந்தக் குழுவின் முதல் கூட்டம் புதுதில்லி நிர்மாண் பவனில் இன்று (03.02.2020) நடைபெற்றது. மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுகாதாரம், கப்பல்துறை, வெளியுறவு, விமானப் போக்குவரத்து மற்றும் உள்துறை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கேரளாவில் இந்நோய் அறிகுறி தென்பட்ட மூன்று பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் இந்நோய் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பயண முன்னெச்சரிக்கைகள் நேற்று புதிதாக வெளியிடப்பட்டிருப்பதுடன், இ-விசா திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், 15 ஜனவரி 2020 முதல் சீனாவிலிருந்து திரும்பியவர்களை தற்போது தனிமையில் வைத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சீனாவிலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தியாவிற்கு வரவிரும்புவோர், பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்ச்சோ நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வூகானிலிருந்து அழைத்துவரப்பட்ட 645 பேருக்காக இரண்டு தனிமை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், இங்கு தங்கியிருப்போருக்கு தினந்தோறும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுவரை 593 விமானங்கள் மூலம் வந்த 72,353 பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட்டிருப்பதுடன், நாட்டிலுள்ள 21 விமான நிலையங்கள், சர்வதேச துறைமுகங்கள் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடனான எல்லைப்பகுதி வழியாக வரும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுதவிர, 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 2,815 நபர்களை சமுதாயக் கண்காணிப்பில் வைத்திருப்பதுடன், பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 338 ரத்த மாதிரிகளில் 335 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை என்பதும், 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 70 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு நிறுவனம் நோவல் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான முக்கிய மையமாக செயல்படுவதுடன், 12 மண்டல ஆய்வகங்களும், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உடல் கவசங்கள், முகக்கவசம் போன்றவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதுடன், அனைத்து மாநிலங்களிலும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தில்லியில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஒன்று செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
(Release ID: 1601799)
Visitor Counter : 243