நிதி அமைச்சகம்

நன்கு வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நீடித்த மற்றும் பொருளாதார மேம்பாட்டினை எட்ட இந்தியா முயற்சிக்கிறது: பொருளாதார ஆய்வறிக்கை 2019-20


நீடித்த வளர்ச்சி தொடர்பான சர்வதேச அளவிலான திட்டம் நிறைவேற வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் தங்களது உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், குறிப்பிடத்தக்க அளவுக்கு வனப்பகுதி மற்றும் மரங்களின் எண்ணிக்கையை, புவியியல் அளவில் 24.56 சதவீதம் அளவுக்கு உயர்த்தி உள்ளன. விவசாயக் கழிவுகளை எரிப்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளபோதும், இன்னமும் அது கவலைக்குரிய ஒரு விஷயமாகவே உள்ளது.

Posted On: 31 JAN 2020 1:16PM by PIB Chennai

வளத்தை உருவாக்குவதில் எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தடுப்புக்கான பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கை, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (எஸ்டிஜி.க்கள்), நீடித்த எதிர்க்காலம், சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதாகவும், எதிர்க்கால சந்ததியினருக்கு பசுமையான மற்றும் சுகாதாரமான பூமியை உருவாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதிகளை ஏற்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் என்பது, இந்தியா தனது நீடித்த பொருளாதார வளர்ச்சியை நன்கு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மேம்பாட்டின் மூலமும், கிராமப்புற வீடுகளுக்கு மின்வசதி, புத்தாக்க ஆதாரங்கள் பயன்பாட்டை அதிகரித்தல், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குதல், வறுமையை ஒழித்தல், அனைத்து சிறுமிகளுக்கும் ஆரம்பக்கல்வி கிடைப்பதை அதிகரிக்கச் செய்தல், அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி வழங்குதல், சர்வதேச தொழிலாளர் சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்கும் வகையில், இளைஞர்களை திறன்பெற்றவர்களாக ஆக்குதல், நிதி மற்றும் நிதி சேவைகள் கிடைக்கச் செய்தல் ஆகிய கொள்கைகள் மூலமும் எட்டுவதாகும்.

 

இந்தியா மற்றும் எஸ்டிஜி.க்கள்

எஸ்டிஜி இந்தியா புள்ளிவிவரப்பட்டியல் 2019ன் மூலம் இந்தியா எஸ்டிஜி.க்கள் பிரிவில் குறிப்பிடத்தக்க அளவு சாதனையை படைத்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எஸ்டிஜி புள்ளிவிவரப்பட்டியலின்படி, கேரளா, இமா்சலப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கோவா, சிக்கிம், சண்டிகர் மற்றும் புதுச்சேரி ஆகியவை முன்னணியில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், எந்த மாநிலமோ, யூனியன் பிரதேசமோ 2019 பட்டியலில் வீழ்ச்சி அடையவில்லை என்பதுதான். ஒட்டுமொத்த அளவில், இந்தியாவின் கூட்டு மதிப்பீடு, இந்த புள்ளிவிவரப்பட்டியலின் 2018ல் இருந்த 57 என்ற அளவில் இருந்து 2019ல் 60 என்ற அளவுக்கு முன்னேறி உள்ளது. இது எஸ்டிஜியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தான் உணர்த்துகிறது.

 

எஸ்டிஜி பற்று உறவு: ஒரு புதிய முன்னுதாரண அணுகுமுறை.

இந்த ஆய்வறிக்கையானது, பல்வேறு எஸ்டிஜி.க்கள் இடையேயான இணைப்புகள், கொள்கைகள் மறுஅமலாக்கத்தில் அதன் வலுவான தாக்கங்கள் ஆகியவற்றை பற்றியும் எடுத்துக்காட்டுகிறது. துறைகள் மற்றும் அளவீடுகளில் ஒருங்கிணைந்த நிர்வாகம் மற்றும் அரசாட்சி கொள்கைகள் ஆகியவற்றில் ஒரு இசைவு அணுகுமுறையை அவசியமாக்குகிறது. குறுகியகால தனிப்பட்ட கூறுகள் அல்லது தனிநபர் வெளிப்பாடுகளை மட்டும் நோக்காமல், மற்ற துறைகளுக்கிடையே தொடர்புடைய பின்னுாட்டங்களைப் பார்ப்பதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்கிறது. மேலும், பற்றாக்குறை வளங்களுக்கான போட்டியை குறைக்கும் அதே நேரத்தில், துறைகளுக்கு இடையே கூட்டு நடவடிக்கைளை ஊக்குவித்தலையும் இது உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற ஒரு இசைவு நடவடிக்கைக்கான முன்னுதாரணம், கல்வி மற்றும் மின்துறை இணைப்பாகும். இதில், அடிப்படைத் தேவையான மின்சாரம், சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனி கழிவறைகள் ஆகியவை பள்ளிகளில் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலை ஏற்படுத்துகின்றன. இதற்கு மற்றொரு உதாரணம், சுகாதாரம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் இசைவு. அதாவது சுகாதார மையங்களில் மின்சாரம் கிடைப்பதால், பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன என்பதை இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

இந்தியா மற்றும் அதன் வனங்கள்

ஒருபொறுப்பான தேசமாக இந்தியா, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அதேசமயம் நீடித்த வளர்ச்சி என்பதை நினைவில் கொண்டு இந்தியா நகர்கிறது என்பதை இந்த பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆய்வறிக்கை மற்றொரு விஷயத்தையும் மேற்கோள் காட்டுகிறது. அதாவது, வனம் மற்றும் மரங்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. வனம் மற்றும் மரங்கள் சூழ்ந்த பகுதிகளின் அளவு 80.73 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. அதாவது நாட்டின் மொத்த நிலப்பரப்பளவில் இது 24.56 சதவீதம் ஆகும். இது தவிர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வனப்பரப்பு உயர்ந்துள்ளதையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கர்நாடகாவில் 1,025 சதுர கி.மீ, ஆந்திராவில் 990 சதுர கி.மீ., ஜம்மு காஷ்மீரில் 371 சதுர கி.மீ. அளவுக்கு வனப்பரப்பு உயர்ந்துள்ளது. அதேசமயம் மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகியவற்றில் வனப்பரப்பு குறைந்துள்ளது, 2019ம் ஆண்டு வன அறிக்கையில் தெரியவந்துள்ளது. வனங்களால் மொத்த கார்பன் குறைப்பு 7124.6 மில்லியன் டன்களாகும். இது 2017ம் ஆண்டு இருந்த அளவைக் காட்டிலும் 42.6 மில்லியன் டன் அதிகமாகும்.

 

விவசாய கழிவுகள் எரிப்பு – ஒரு முக்கிய கவலை

விவசாய நிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பது ஒரு முக்கிய பிரச்னையாக உருமாறி வருகிறது என்பதை இந்த பொருளாதார ஆய்வறிக்கை அங்கீகரிக்கிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பயிர் அறுவடை இருப்பதால், பெரிய அளவில் பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட விவசாயக் கழிவுகள் உருவாகின்றன. தேவைக்கு அதிகமான பயிர்க்கழிவுகள் வடமாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் தீவைத்து எரிக்கப்படுகின்றன. நாட்டில் சுமார் 178 மில்லியன் டன் அளவுக்கு உபரி பயிர்க்கழிவுகள் உருவாவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவற்றை எரிப்பதால், மாசு அளவு அதிகரித்து காற்றின் தரம் குறைகிறது.

பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்றில் 2.5 அளவிலான நுண்துகள் அதிகரிப்பதை ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. காரீப் பருவ அறுவடைக்காலத்தில் இதுபோன்ற பயிர்க்கழிவுகள் எரிப்பால், டெல்லியில் சுற்றுச்சூழல் மிக மோசமாக மாறுகிறது. இப்பிராந்தியத்தில் காற்று மாசு அளவு மிக மோசமாகிறது.

இப்பிரச்னையை தீர்க்க பல்வேறு வழிமுறைகளை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. அதாவது எரியும்போது குறைந்த அளவு புகையை வெளியிடும் தன்மை கொண்ட பயிர்க்கழிவுகள் ஏற்படும் அரிசி, கோதுமை, சோளம் போன்ற பயிர்களை பயிரிடலாம். விவசாயிகளுக்கு அடுத்த நடவுக்காலத்தில் விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்த ஊக்குவித்தல், பயிர்க்கழிவுகள் அடிப்படையிலான கட்டிகளை உருவாக்குபவர்களுக்கான சந்தையை ஏற்படுத்துதல், அருகில் உள்ள அனல் மின்நிலையங்கள் நிலக்கரியுடன் பயிர்க்கழிவுகளை எரிப்பதைக் கட்டாயமாக்குதல், பண்ணைக் கருவிகளை உருவாக்குபவர்களுக்கு சிறப்பு நிதியுதவித் திட்டம், மாசுவை குறைக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல் ஆகியவற்றை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது.

மேலும், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் ஆகியவற்றில் நேரடி பயிர்க்கழிவு மேலாண்மை தொடர்பான மத்திய அரசுத்துறை திட்டங்களையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இத்திட்டத்தின் கீழ், கூட்டாக அறுவடை செய்பவர்கள் ஒட்டுமொத்தமாக வைக்கோல்களை நிர்வகிக்கும் முறை, நடவுப்பணியை மகிழ்ச்சி ஆக்குதல், வைக்கோல்களை துண்டு, துண்டுகளாக நறுக்குதல், பயிர்க்கழிவுகளை வெட்டுதல் ஆகியவற்றுக்கு, விவசாய இயந்திரங்கள், கருவிகளை பயன்படுத்துவதற்கு, தனி விவசாயி என்றால், 50 சதவீத மானியமும், அமைப்புகளுக்கு 80 சதவீத மானியமும் அளித்ததை ஊக்குவிக்கிறது.

 

முன்னோக்கிய பாதை

பொருளாதார ஆய்வறிக்கை, நீடித்த தன்மையின் மீது அதிக கவனம் செலுத்துவதற்கு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதை வலியுறுத்துகிறது. அதாவது, தனிநபர் மற்றும் நிறுவன திறனை வளர்ப்பது, அறிவாற்றலை விரைவுபடுத்துதல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்துதல், நிதித்துறை தொழில்நுட்பங்களைத் தருவித்தல், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் அமைப்புகளை நிறுவுதல், இடர் மேலாண்மையை மேற்கொள்ளுதல், திட்டங்கள் அமலில் உள்ள இடைவெளியை நீக்குதல், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான ஆத்மார்த்தமான கூட்டு நடவடிக்கை மற்றும் அதை மேம்படுத்துதல் ஆகியவை தேவை என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இறுதியாக, வளர்ந்த நாடுகள் பலதரப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தங்களுடைய நிதிக் கடமைகளையும், உத்தரவாதங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

 

**************



(Release ID: 1601397) Visitor Counter : 174


Read this release in: English , Hindi