PIB Backgrounder
173வது தியாகராஜர் ஆராதனை விழா
प्रविष्टि तिथि:
11 JAN 2020 5:32PM by PIB Chennai
சென்னை, ஜனவரி 11, 2020
காவிரி ஆற்றங்கரையில் புனிதமான திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் 173வது ஆராதனை விழாவில் பங்கேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாரம்பரியம் 173 ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதையும், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆராதனை விழாவில் கலந்து கொண்டு தியாகராஜ சுவாமிகளுக்கு மரியாதை செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதையும் அறிந்து நெகிழ்ச்சி அடைந்தேன்.
நவீன கால இந்தியாவில் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளுக்கு நாம் மரியாதை செலுத்தும் சமயத்தில், அவருடைய வாழ்க்கை, அவருடைய பாடல்கள் மற்றும் இணையற்ற அவருடைய மரபைக் கொண்டாடுகிறோம்.
இசை உலகில் உயர்ந்த இடத்தைப் பிடித்த, ஆளுமை மிக்கவராக தியாகராஜ சுவாமிகள் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நமது கலாச்சார பாரம்பரியத்தை செம்மைப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புகளை அளவிடவோ, மதிப்பிடவோ முடியாது.
அது எல்லையில்லாத அளவுக்கு இருக்கிறது.
நூற்றாண்டுகளாக பெருமைக்குரியதாக இருக்கும் அவருடைய பாடல்கள், வருங்காலத்திலும் இளைஞர்கள் மற்றும் மூத்தவர்களால் பொக்கிஷமாகக் கருதப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடத்தி வரும் தியாகராஜ மகோத்சவ சபா வின் சேவையை நான் பாராட்டுகிறேன்.
இந்தியாவில் சாஸ்திரிய சங்கீதத்தின் வரலாற்றில் உச்சபட்ச நிலையைக் குறிப்பிடும் காலக்கட்டமாக அவருடைய காலம் இருந்தது என்பதை இந்த விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவூட்டுவதாக இந்த ஆராதனை விழா இருக்கும் என்று நம்புகிறேன்.
என் அன்பு சகோதர சகோதரிகளே,
நாம் வாழும் கொந்தளிப்பான சூழ்நிலையில், சற்று ஒதுங்கி நின்று நமது விசேஷமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் செயலில் ஈடுபடுவது, அமைதி மற்றும் உற்சாகத்தைத் தருவதாக உள்ளது.
உலகின் மிகவும் பழமையான நாகரிக வளர்ச்சி கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பன்முக கலாச்சாரத்தின் தாயகமாக உள்ளது. இந்தியக் கலாச்சாரம், பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணிக்கப்படும் இந்தக் கலாச்சாரம், இந்திய துணைக் கண்டம் முழுக்க பரவியுள்ளது, பல லட்சம் ஆண்டு கால வரலாற்றின் தாக்கத்தால் இது உருவாகியுள்ளது.
இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்தின் மதங்கள், தத்துவங்கள், உணவு வகைகள், மொழிகள், நடனம், இசை, யோகா, திரைப்படங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உலகெங்கும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
`இதயங்களை கலை இணைக்கிறது' என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நமது கலாச்சாரத்தில் மக்களை இணைக்கும் வல்லமை கொண்ட அம்சங்களில் ஒன்றாக இசை உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அது உதவுகிறது.
குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டில் தொடங்கி, வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது. நமது பணி, நமது உறவுமுறைகள், கடவுளை வணங்குவதிலும் கூட நம்முடன் இசை கலந்தே இருக்கிறது.
தூய்மையான இசை என்பது, நமது ஆன்மாக்களை செம்மைப்படுத்தக் கூடியது.
நமது கலாச்சாரம் மற்றும் காலம் காலமான பாரம்பர்யத்தின் மையமான விஷயம் அதுதான்.
வேத காலங்களில் தொடங்கிய, நமது சாஸ்திரிய சங்கீதம், இறைவனின் கொடையாகவே கருதப்படுகிறது; இறைவனின் ஒலி `நாதபிரம்மம்' எனப்படுகிறது. பிரபஞ்சத்தின் இசையாக அது பரவி நிற்கிறது.
பல்வேறு ராகங்களில், அழியாத எண்ணற்ற கீர்த்தனைகளைப் படைத்தவர் தியாகராஜ சுவாமிகள். இசைக்குப் பொருத்தமான மொழி என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியால் குறிப்பிடப்பட்ட, இனிமையான தெலுங்கு மொழியில் அவருடைய பெரும்பாலான கீர்த்தனைகள் உள்ளன.
1767ல் திருவாரூரில் ராமபிரமம் மற்றும் சீதம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்த தியாகராஜர், புனிதமான திருவையாறில் வாழ்ந்தார். அங்கு ஸ்ரீசோந்தி வெங்கடரமண சாஸ்திரி அவர்களிடம் இசை கற்றுக் கொண்டார்.
அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகளை உருவாக்கியுள்ள, ராம பக்தரான தியாகராஜ சுவாமிகள், ஏறத்தாழ தன் அனைத்து கீர்த்தனைகளிலும் கடவுள் ராமரைப் பற்றியே பாடியிருக்கிறார். கடவுள் ராமர் மீதான பக்தியை பொழிவதாக இருக்கும் அவருடைய பாடல்கள் முழுக்க, உங்கள் இதயத்தை உருகச் செய்பவையாக இருக்கும்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உரையாடல், மனிதகுலத்துக்கு தேவையான ஆழமான கருத்துகளாக உள்ளன.
அவருடைய தெலுங்கு பாடல்கள் பலவும், இளைய மற்றும் மூத்த இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளில் மையக் கருத்துகளாக இடம் பெற்றுள்ளன. பாடல்களின் உணர்வுகளையும், ராகத்தின் அழகையும் சேர்த்து ரசிகர்களை ஆனந்தப்பரவசத்துக்கு ஆளாக்குபவையாக உள்ளன. மோக்சமு கலடா அல்லது வந்தனமு ரகுநந்தனா போன்ற அவருடைய பாடல்களை பாடுவது, உணர்வுகளை அதிகபட்சம் வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன!
அவருடைய படைப்புகளில் ராமபக்தியும், நடோபாசனாவும் இரண்டு முதன்மையான அம்சங்களாக உள்ளன. அனைத்து வகைகளிலும் நடனக் கலையுடன் இணைந்ததாக இசை உள்ளது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
கடவுளை உணர்ந்து கொள்வதன் அடையாளமாக நடன யோகத்தின் முதன்மை நிலையை தனது பாடல்கள் மூலம் அவர் வெளிப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளில் மிக எளிதாக சங்கதிகளை பயன்படுத்தியுள்ள திறமை, தியகாரஜ சுவாமிகளின் முக்கியமான இன்னொரு பங்களிப்பாக உள்ளது. அவருடைய நடை எளிமையானது, அழகானது, ஈர்ப்பானது, கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியது.
தனது பாடல்களில் ராக உணர்ச்சி மிகுந்திருப்பது தான், மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் மத்தியில், அவருக்கு முக்கிய இடத்தைப் பெற்றுத் தருவதாக இருக்கிறது.
நெறிசார்ந்த, தத்துவ ரீதியிலான உண்மைகளை தன் பாடல்களில் வலியுறுத்தியதுடன் மட்டுமின்றி, தன் அன்றாட வாழ்விலும் தியாகராஜ சுவாமிகள் கடைபிடித்தார்.
பண வசதியை அவர் நிராகரித்து, எளிமையாக வாழ்ந்தார். பூலோக ஆசைகள் மற்றும் செல்வத்தை விரட்டுவதற்கு `நடோபாசனா' வில் நேர்மையான வாழ்வைக் கழித்தாலே போதும் என்று அவருடைய மத நம்பிக்கையுள்ள ஆன்மா கருதியது.
அவருடைய புகழ்பெற்ற `நிதி ச்சலா சுகமா'' என்ற பாடல் மூலம் அவருடைய வாழ்வின் இந்தத் ததுத்துவம் தெரிய வருகிறது.
வால்மீகி முனிவரின் மறுபிறப்பு என்று இவரை, இவருடைய சீடர்கள் நம்புகின்றனர்.
1847ல் புஷ்ய பகுல பஞ்சமி நாளில் ஸ்ரீராமரின் தாமரை பாதங்களில் அவர் சரணடைந்தபோது, அவருடைய உடல் காவிரி ஆற்றின் இடது கரையில் ஒரு சன்யாசிக்கு உரிய மரியாதை மற்றும் மதச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டில் இசை குருமார்களில் மதிக்கத்தக்கவர்களில் ஒருவராக சத்குரு தியாகராஜ சுவாமிகள் இருந்தார். ஷியாமா சாஸ்திரிகள், ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மரியாதைக்குரிய மற்றவர்களாக இருந்தனர். பெருமைக்குரிய பஞ்சரத்ன கீர்த்தனைகள் - ஐந்து ராகங்களில் ஐந்து ரத்தினங்களாக உள்ள அந்தப் பாடல்களை, இந்தியா மற்றும் உலகெங்கும் இருந்து வருடம் தோறும் ஆராதனை விழாவுக்கு வருபவர்கள் ஒன்று கூடி மிகுந்த பக்தியுடன் பாடுகின்றனர். அந்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் உருவாக்கி, வருடம்தோறும் பகுல பஞ்சமி நாளில் நினைவிடத்தில் அவருடைய சீடர்கள் ஆராதனை விழா நடத்தி வருகின்றனர்.
தியாகராஜ சுவாமிகளின் சீடர்கள் அனைவரும் அவர் மீது ஆழமான பக்தி கொண்டவர்கள். ஆனால் பெங்களூர் நாகரத்னம் அம்மாளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
அவர் தியாகராஜ சுவாமிகளின் தீவிர பக்தராக இருந்தார். அவருடைய நினைவாக உருவாக்கிய மண்டபத்தின் எதிரில் தான் இசைக் கலைஞர்கள் இப்போது ஆராதனை விழாவில் பாடுகின்றனர் என்பது அவருடைய பங்களிப்புக்குப் பொருத்தமான மரியாதை செய்வதாக உள்ளது.
தியாகராஜ சுவாமிகளின் பாடல்கள் இசை உலகிற்கு உண்மையிலேயே பெரிய பொக்கிஷம் போன்றவை. அவை நம் இதயங்களில் என்றென்றும் இடம் பெற்றிருக்கும். இவ்வளவு ஆண்டுகளாக நாம் அனைவரும் தொடர்ந்து தியாகராஜ சுவாமிகளுக்கு மரியாதை செய்ய இந்தப் புனித இடத்தில் ஒன்றுகூட முடிகிறது என்றால், அதற்கு திரு. மூப்பனார் அவர்களின் குடும்பத்தினர் ஆற்றிய அரிய சேவைகளும், தியாகராஜ சுவாமிகள் நினைவாக உள்ள சபா மற்றும் தியாகபிரம்ம மகோத்சவ சபாவின் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளும் தான் காரணம்.
திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் 1966 முதல் 36 ஆண்டு காலம் இந்த சபாவில் தலைவராக இருந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர் தலைவராக இருந்த காலத்தில் தான் இந்த சபா உச்ச நிலையை அடைந்து, சர்வதேச விழாவாக ஆராதனை விழா வளர்ந்தது.
அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய பணியை அவருடைய சகோதரர் திருவாளர் ஜி. ரங்கசாமி மூப்பனார் மேற்கொண்டு வந்தார். சபாவின் வளர்ச்சிக்காக 18 ஆண்டு காலமாக வெற்றிகரமாக அவர் சேவையாற்றினார்.
இப்போது தலைமைப் பொறுப்பு திருவாளர் ஜி.கே. வாசனிடம் வந்துள்ளது. அரசாங்கத்தில், நாடாளுமன்றத்தில், பொது வாழ்வில் திரு. வாசன் அவர்களின் செயல்பாடுகளை நான் பார்த்துள்ள நிலையில், இந்த ஆராதனை விழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அவர் ஓய்வின்றி உழைத்து வருவதைப் பார்க்கும்போது, இந்த சபா பாதுகாப்பானவர்களின் பொறுப்பில் தான் உள்ளது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
வரும் காலத்தில் இந்த ஆராதனை விழாவை இன்னும் உச்சத்துக்கு அவர் கொண்டு செல்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
என் அன்பு சகோதர, சகோதரிகளே,
நமது கலாச்சாரமும், மாண்புகளும் தான் நமது அடையாளங்கள். அதுதான் நம்மை தனித்துவமாக்கிக் காட்டுகின்றன. அவை தான் உலகெங்கும் நமக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
நமது நாகரிக வளர்ச்சியின் தத்துவம் எப்போதும் `வசுதெய்வ குடும்பகம்' என்பதாக உள்ளது. உலகம் முழுக்கவே நமது மக்கள் என நாம் எப்போதும் அரவணைத்துக் கொண்டிருக்கிறோம். ‘Sarve Jana Sukhino Bhavanthu’ என்பது தான் எப்போதும் நமது பிரார்த்தனையாக உள்ளது.
தொன்மையான இந்த கலாச்சாரத்தை, நம்முடைய பாரம்பரியமாக உள்ள அழியாத, மனிதகுல மாண்புகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
நமது கலாச்சாரப் பொக்கிஷங்களை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது தான், இதைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழியாக இருக்கும். தியாகராஜ சுவாமிகள் போன்ற ஆளுமைமிக்கவர்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், தங்களுடைய கலாச்சாரம் எவ்வளவு புகழ்மிக்கது என்பதை அறிவதில் அவர்கள் பெருமைப்பட வேண்டும்.அதன் அறிவார்ந்த விஷயங்களில் இருந்து அவர்கள் உத்வேகம் பெற்று, நாட்டுக்கு புதிய பாதை அமைப்பதற்கு அவர்கள் ஒன்றுபட வேண்டும்.
நமது கலாச்சாரத்தின் பன்முக அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் நமது பள்ளிக்கூடங்களும், கல்வி நிலையங்களும் அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். Jataka கதைகளைப் படிப்பதில் தொடங்கி, பழங்கால இந்தியாவின் கட்டடக்கலையின் நுணுக்கங்களை அறிவது வரையில், நமது கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை அறிந்து கொள்வதற்கும் அவற்றில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளவும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
நமது எதிர்கால தலைமுறையினர், தங்களின் வேர்களை மறந்துவிடக் கூடாது. ஆனால், அதனுடனேயே அவர்கள் நின்றுவிடவும் கூடாது.
``நாம் தனித்துவமானவர்கள் என்றோ தடைகளை உருவாக்கிடலாம் என்பதோ என் கருத்தாக இல்லை. மற்ற கலாச்சாரங்களைப் பொருத்தமாகப் பாராட்டுவதும் தொடர வேண்டும், ஒருபோதும் முனைப்பு காட்டுவதாக இருக்கக் கூடாது, பாராட்டுவதும், ஒன்றாக இணைவதும் தேவையானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.'' என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியுள்ளார்.
173வது தியாகராஜர் ஆராதனை விழாவை இதன் மூலம் நான் தொடங்கி வைக்கிறேன்.
இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் பொக்கிஷங்களை எதிர்கால தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதில் இது வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
வணக்கம்.
அனைவருக்கும் நன்றி!
ஜெய் ஹிந்த்!
*******
(रिलीज़ आईडी: 1599146)
आगंतुक पटल : 378
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English