குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சமூக நீதியையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்து மேம்பாட்டை விரைவுபடுத்த நல்ல கல்வி அடிப்படையானது: குடியரசுத் துணைத்தலைவர் திருச்சி தேசியக் கல்லூரி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து குடியரசுத்துணைத் தலைவர் உரை
Posted On:
10 JAN 2020 5:55PM by PIB Chennai
சமூக நீதியையும் சம வாய்ப்புகளையும் உறுதி செய்து, மேம்பாட்டை விரைவுபடுத்த நல்ல கல்வி அடிப்படையானது என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். கல்வியில் முதலீடு செய்வது நாட்டின் ஒளிமிக்க எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கு ஒப்பாகும் என்பதால், கல்விக்கு நமது முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதுள்ள 4.6 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருச்சியில் இன்று (10.01.2020) தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளும் முதலாவது பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வந்து உரையாற்றிய பெருமைமிக்க இந்தக் கல்லூரியின் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். இந்தக் கல்லூரி, தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் கல்வித் தேவைகளை நிறைவு செய்து வருகிறது என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.
உயர்கல்வி மொத்த மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தில் தமிழ்நாடு 46.9 சதவீதத்துடன் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது என்று குறிப்பிட்ட திரு வெங்கையா நாயுடு, தேசியக் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், கிராமப்பகுதிகளில் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய கல்விச் சேவைகளே, இந்த நிலையை அடைய உதவியுள்ளது என்றார்.
ஐந்து முதல் 24 வயது வரையிலான சுமார் ஐம்பது கோடி பேரைக் கொண்டுள்ள இந்தியா, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளையோரைக் கொண்ட நாடாக உள்ளதால், நாட்டில் கல்வித்துறை வளர்ச்சியடைய பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்தகைய இளையோர் எண்ணிக்கைப் பெருக்கம், கடந்த சில பத்தாண்டுகளில் கூடுதலான கல்வி விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
எழுத்தறிவுதான் அதிகாரம் அளிப்பதலுக்கு முதலாவது படி என்கிற நிலையில், இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான எழுத்தறிவற்றோர் உள்ளனர் என்பதைக் கருதி நமது எழுத்தறிவு இயக்கங்களை, குறிப்பாக முதியோர் எழுத்தறிவு இயக்கங்களை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசுத் துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி, போன்ற உலகச் சிறப்புமிக்க கல்வி நிறுவனங்கள் உள்ள போதிலும், டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகங்கள் 2020 தரவரிசையில், முதல் 500 பல்கலைக்கழகங்களில் இந்திய நிறுவனங்கள் 56 மட்டுமே இடம் பெற்றுள்ளதும், முதல் 300 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றுகூட இடம் பெறவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது என்று அவர் கூறினார்.
பண்டைக்காலத்தில் நாலந்தா, தக்சசீலா, விக்கிரமசீலா போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் கொண்டிருந்த இந்தியா, உலகின் ஆசிரியர் என்று பொருள்படும் ‘விஷ்வகுரு’ பட்டத்தை பெற்றிருந்தது என்று குறிப்பிட்ட திரு வெங்கைய நாயுடு, இத்தகைய தொன்மைக் கால புகழை மீட்டெடுக்க, நமது நவீன கல்விமுறையில் தெரிவு செய்த பண்டைக்கால பாடங்கள், நடைமுறைகள், ஆகியவற்றை இன்றைய உலக சவால்களுக்கு ஏற்ப மாற்றியமைத்து இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பண்டைய கல்விப் பொக்கிஷங்களைப் பாதுகாத்து நமது இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்காவிட்டால், அவர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் ஆகிவிடுவோம் என்று அவர் கூறினார்.
உயர்கல்வித் துறையில் தனியார் துறையினரின் பங்கு பற்றிக் குறிப்பிட்ட திரு வெங்கையா நாயுடு, தனியார் துறையினர் கல்வியில் முதலீடு செய்து தீவிரமான ஆர்வத்துடன் அதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியாவின் கல்வி எதிர்காலம், திறன்மிக்க பொதுத்துறை – தனியார்துறை ஒத்துழைப்பு மாதிரியில்தான் அடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
அறிவியல்- தொழில்நுட்பத்தின் சில துறைகளில், குறிப்பாக விண்வெளித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில், சிறந்து விளங்கும் இந்தியா, உலகின் உற்பத்தி மையமாகவும் மனித வளத்தின் தலைநகரமாகவும் உயரும் திறன் பெற்றது என்று அவர் கூறினார். ஆனால், இந்த இலக்குகளை அடைய, நமக்கு பெரும்அளவிலான பயிற்சி பெற்ற இளைஞர்கள் தேவை என்றும், நமது பல்கலைக்கழகங்கள் திறன் பயிற்சி அளிப்பதில் மிகச்சிறந்த மையங்களாக மாற வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர், ஆராய்ச்சிகள் டாக்டர் பட்டங்களுக்காக மட்டுமின்றி பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பு மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, புதுமைப் படைப்பு பல்கலைக்கழகங்களின் பண்பாடாகவே மாறும் வகையில் அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
மாணவர்கள் எத்தகைய பாடங்களைத் தெரிவு செய்து படித்தாலும், நமது நாட்டின் வளமிக்க வரலாறு, நாட்டின் பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றார். பண்டைய வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறும் மாணவர்கள், மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திய அவர், சமீபகாலமாக பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை உலகம் அனுபவித்து வரும் நிலையில், இதனைச் சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், பாதிப்பு நிரந்தரமாகிவிடும் என்று எச்சரித்தார். இப்புவியின் அறங்காவலர்களான நாம், அதன் வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அளிப்பது, நமது புனிதக்கடமை என்றார் அவர்.
பன்முகத்தன்மையும், துடிப்பும் கொண்ட இந்தியாவின் ஜனநாயக நன்னெறிகளைப் பாதுகாக்க, அறிவுசார்ந்த நேர்மையான, சமூக உணர்வுகொண்ட, கருணைச் சிந்தனை உடைய குடிமக்களை உருவாக்க வேண்டியது நமது கல்வி நிறுவனங்களின் கடமை என்பதால், நமது கல்விமுறை, நன்னெறிகள் அடிப்படையிலானதாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
----
(Release ID: 1599054)
Visitor Counter : 246