அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் வளர்ச்சிக்கான தடைகளை அகற்ற மகளிருக்கான வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்த அறிவியல் மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 05 JAN 2020 8:38PM by PIB Chennai

பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டின் ஒரு பகுதியாக ஒன்பதாவது மகளிர் அறிவியல் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, பெண் விஞ்ஞானிகளின் சாதனைகளை வெளிப்படுத்தியதோடு, பலவகையான பிரச்சினைகளுக்கு  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் எளிய தீர்வுகளைக் கண்டறிவதற்கு  தீவிரமாகப் பங்கேற்பதற்கு இளம் பெண்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்தது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேரி க்யூரி, காதம்பினி கங்குலி, ராஜேஸ்வரி சட்டர்ஜி, கிரண் கிரண் மஜூந்தார் ஷா போன்ற பெண் விஞ்ஞானிகளின் மெச்சத்தக்க பங்களிப்புப் பற்றி பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உள்ள ஏரோனாட்டிக்கல் பிரிவின் தலைமை இயக்குனர் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் தெரிவித்தார்.

அறிவியலுக்குப் பங்களிப்பு செய்வதில் உள்ள தடைகளை அகற்றுவதில் தலைசிறந்த பெண் விஞ்ஞானிகள் ஆற்றிய அளப்பரிய துணிவிலிருந்து இளம் பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஊக்கப்படுத்தினார்.

தேச வளர்ச்சி என்ற மைய நீரோட்டத்திற்குப் பெண்களைக் கொண்டுவருவதன் அவசியத்தை வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின்  செயலாளரும், ஐசிஏஆர் தலைமை இயக்குனருமான டாக்டர்.திரிலோச்சன் மொஹபத்ரா வலியுறுத்தினார்.

வீடு, பள்ளி, கல்லூரி நிலைகளில் பெண்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். வீடுகளில் பாலினப் பாகுபாடு இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த நடைமுறை பிரச்சினையில் மாற்றம் தேவை என்றார்.

அறிவியல் தொழில்நுட்பத்துறையில் பெண்களுக்காக  அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த இந்தத் துறையின் விஞ்ஞானி டாக்டர். நமிதா குப்தா, கிரண் போன்ற பெண்களுக்கான திட்டங்களுக்குப் பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பித்துப் பலர் பயனடைந்திருப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்த 107வது இந்திய அறிவியல் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மகளிருக்கான அறிவியல் மாநாடு அமைந்திருந்தது.

                                                *****


(வெளியீட்டு அடையாள எண்: 1598491) வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी