மத்திய அமைச்சரவை
இந்திய ரயில்வேயை அமைப்பு ரீதியாக மாற்றியமைத்து மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
24 DEC 2019 4:21PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ரயில்வேயை அமைப்பு ரீதியாக மாற்றியமைத்து மறுசீரமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சீர்திருத்த நடவடிக்கை இந்திய ரயில்வேயை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது என்ற அரசின் தொலைநோக்கு செயல் திட்டத்தை அடைய பேருதவியாக அமையும்.
ரயில்வேத் துறையில் தற்போதுள்ள 8 ஏ பிரிவு பணிகளை ஒருங்கிணைத்து, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (IRMS) என்ற பெயரில் மத்திய பணியாக மாற்றப்படும்.
இந்தப் பணிகள் ஒருங்கிணைப்பு, துறை ரீதியான ஆதிக்கத்திற்கு முடிவுகட்டுவதுடன் ரயில்வேத்துறை சுமூகமாக செயல்படுவதை ஊக்குவித்து, முடிவுகள் மேற்கொள்வதை விரைவுபடுத்துவதோடு, ரயில்வேத் துறைக்கு உகந்த கண்ணோட்டத்தை உருவாக்குவதுடன், பகுத்தறிவு ரீதியான முடிவுகள் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும்.
ரயில்வே வாரியம் இனி துறை ரீதியான பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக இருக்காது என்பதோடு, குறைந்த அளவிலான கட்டமைப்பைக் கொண்ட அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.
ரயில்வே வாரியத் தலைவரை தலைமை செயல் அதிகாரியாகவும் 4 உறுப்பினர்கள் மற்றும் சில சுதந்திரமான உறுப்பினர்களை கொண்டதாக ரயில்வே வாரியம் இருக்கும்.
ரயில்வே பணிகள் ஒருங்கிணைப்பு, இத்துறையை மாற்றியமைக்க நியமிக்கப்பட்ட பிரகாஷ் தாண்டன், ராகேஷ் மோகன், சாம் பிட்ரோடா மற்றும் விவேக் தேப்ராய் குழுக்களின் பரிந்துரை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.
2019 டிசம்பர் 7 & 8 ஆம் தேதிகளில் நடைபெற்ற “பரிவர்த்தன் சங்கோஸ்தி” என்ற பெயரிலான 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்ட ரயில்வே அதிகாரிகளின் கருத்தொற்றுமை மற்றும் ஒட்டுமொத்த ஆதரவின் படியே இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
பணிகள் ஒருங்கிணைப்புக்கான நடைமுறைகள் மத்திய பணியாளர் நலத்துறையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்படும்.
******************
(Release ID: 1597473)
Visitor Counter : 161