குடியரசுத் தலைவர் செயலகம்

புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை

प्रविष्टि तिथि: 23 DEC 2019 2:37PM by PIB Chennai
  1. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. 

 

  1. புதுச்சேரி என்பது கவிஞர்களின், தேச பக்தர்களின், தெய்வபக்தி நிறைந்தவர்களின் நிலமாகும்.  ஆன்மீகம் மற்றும் ஒப்பற்ற, வளமான, பாரம்பரியத்தின் கலவையாகவும், பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் சிறந்த சேர்க்கையாகவும்  இது உள்ளது.  பிரான்ஸ் நாட்டுடன் பல நூற்றாண்டு உறவுகளின் காரணமாக இந்த அழகிய நகரில் பிரெஞ்ச் செல்வாக்கு வலுவாக உள்ளது.  அது இங்குள்ள கட்டிடங்களிலும், தெருக்களிலும் கண்கூடாகத் தெரிகிறது.  புதுச்சேரி உலகம் முழுவதும் அறியப்பட்டதற்கு  மகரிஷி அரவிந்தருக்கும், அன்னைக்கும் நன்றி சொல்ல வேண்டும், அந்த மகா கவி, விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகத் தலைவர், அமைதியான இந்த இடத்தை உறைவிடமாகத் தெரிவு செய்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கியிருந்தார்.  அமைதியையும், உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் தேடுகின்ற மக்களை உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து ஈர்ப்பதாக அரவிந்த ஆசிரமமும், ஆரோவில்லும் உள்ளன.  பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிகர தமிழ்க் கவிஞர்களும் தங்களின் இறவாக் கவிதைகளை எழுதியதும் புதுச்சேரியில்தான்.

 

  1. இந்த பூமிக்கு நான் வருகை தந்த போது, நாடாளுமன்ற உறுப்பினராக புதுச்சேரியில் பயணம் மேற்கொண்ட காலத்தை நோக்கி எனது நினைவு செல்கிறது.  எனது நண்பரும், மாநிலங்களவையில் உடனிருந்த உறுப்பினருமான தலைசிறந்த தலைவர் எம் ஓ ஹெச் பரூக் அப்போது தனது இல்லத்திற்கு  என்னைத் தேநீர் அருந்த அழைத்திருந்தார்.  உயிரோட்டமான கலந்துரையாடலை நாங்கள் நடத்தினோம்.  அதிலிருந்து புதுச்சேரி மீதான எனது அன்பு காலந்தோறும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

  1. பலதுறைப் படிப்பை ஊக்கப்படுத்த வழிகாட்டுதல் மற்றும் ஆராய்ச்சி வசதிகளைக் கொண்ட புதுச்சேரி பல்கலைக் கழகம் மத்திய பல்கலைக் கழகமாக 1985-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது.  மாணவர்களின் தேவையை அதிகரிப்பதற்கான தன்மையுடனும், பல்வேறு தரத்துடனும், ஒட்டுமொத்த செயல்பாட்டுடனும் இது உலகத்தரத்திலான பல்கலைக் கழகமாக வளர்ந்து வருகிறது.  மேலும், உயர்ந்த நிலையில் கற்பதற்குரிய மாணவர்களுக்கு உகந்த நிறுவனமாகவும் இது உள்ளது. 

 

  1. 2019-20 கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 6,500 மாணவர்களில்  பாதியளவினராக மாணவிகள் இருக்கிறார்கள் என்பது மனநிறைவை அளிக்கிறது.   பெரும்பாலான மாணவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  மாணவர், ஆசிரியர் விகிதம் என்பது ஆரோக்கியமான முறையில் 16.7-க்கு ஒன்று என உள்ளது. 

 

Ladies & Gentlemen,

  1. பல்கலைக் கழகமாக இருந்தாலும், வேறு எந்த அமைப்பாக இருந்தாலும், இறுதியில் நாம் அனைவரும் சமூகத்தின் அங்கமாக இருக்கிறோம்.  மேலும், சமூகத்திற்கு பொறுப்பானவர்களாக நாம் இருக்கிறோம்.  ‘பெருநிறுவன சமூக பொறுப்பு’ மூலமாகப் பெரு நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒருபகுதியை சமூகத்திற்கு செலவிட அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.  இந்தக் கோட்பாட்டை நான் பாராட்டுகிறேன்.  அது விரிவாக்கப்படும் என்று நம்புகிறேன்.    நமது பல்கலைக் கழகங்களின் கோட்பாடு விரிவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நான் அவ்வப்போது பேசிவருகிறேன்.   அதனைப் “பெருநிறுவன சமூகப் பொறுப்பிலிருந்து பல்கலைக் கழக சமூக பொறுப்பு” என அழைக்கிறேன்.  இதுபற்றி நான் ஆர்வமாக இருக்கும் நிலையில் புதுச்சேரி பல்கலைக் கழகத் தலைமை ரெக்டாரும், துணை நிலை ஆளுநருமான  டாக்டர் கிரண்பேடி இந்தத் திட்டத்தை சென்ற ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்த மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதில் முதலமைச்சரும், மாநிலங்களவை காலங்களில் எனது உடனிருந்த உறுப்பினரும் நல்ல நண்பருமான திரு வி நாராயணசாமியின் பங்களிப்பை  நான்  பாராட்டுகிறேன். 

 

  1. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் ரத்த தானம், உறுப்புதானம், கண் பரிசோதனை, புகைப்படக் கண்காட்சி, உடல் நல பரிசோதனை போன்ற சமூக சேவைகளை தொடங்கியது உட்பட குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்தப் பல்கலைக் கழகம் ஏற்கனவே பதிவு செய்துள்ளது.  இத்தகைய சமூகப் பொறுப்புத் திட்டங்களை செயல்படுத்தியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

 

  1. எனக்கு மனநிறைவை அளிக்கின்ற மற்றொரு விஷயமாக இருப்பது தூய்மையாகும்.  தூய்மை இந்தியா இயக்கத்தைத் தங்களின் வளாகத்தில் செயல்படுத்திய முதலாவது பல்கலைக் கழகமாக புதுச்சேரி பல்கலைக் கழகம் இருந்துள்ளது.    இது  விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து  மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் அளித்துள்ளது.  மேலும், இந்தப் பல்கலைக் கழகமும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் சுற்றியுள்ள 103 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளன.  இவற்றை ‘முன்மாதிரி கிராமங்களாக’ மேம்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

 

  1. கிராமப்புற இளைஞர்களுக்கு உதவி செய்ய சமுதாயக் கல்லூரி ஒன்றைத் தொடங்குவது என்ற பல்கலைக் கழகத்தின் செயல் மெச்சத்தக்கது.  புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக் கல்லூரியின் குறிக்கோள் “திறன் உருவாக்கத்தின் மூலம் வேலை வாய்ப்புக்கான கல்வி” என்பதாகும்.    உள்ளூர் சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் அடிப்படையில் கல்விச் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  மேலும், குறிப்பாக  சமூகத் தேவைக்கான குறிப்பிட்ட மனித ஆற்றல் அடிப்படையில் வேலை வாய்ப்புக்கான படிப்புகளை வழங்குவது இந்த கல்லூரியின் முதன்மை நோக்கமாக உள்ளது.  சுருக்கமாக கூறினால், சமுதாயக் கல்லூரி என்பது சமுதாயத்தால், சமுதாயத்திற்காக எனலாம். 

 

  1. இந்தப் பல்கலைக் கழகம் தனது தரத்தை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது.  அத்துடன் உலகின் சிறந்தவற்றுக்கு இணையான கல்வித் தரத்தை வழங்குவது அதன்  விருப்பமாக உள்ளது.  இந்த நோக்கத்திற்காக தைவான், கொரியா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இது கைகோர்த்துள்ளது.  இதன் முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அறக்கட்டளை நிதியம் அமைக்கப்பட்டிருப்பது என் மனதுக்கு நெருக்கமான மற்றொரு விஷயமாகும்.  முன்னாள் மாணவர்கள் தாராளமாக நன்கொடை வழங்குவது இந்தப் பல்கலைக் கழகம் விரும்பும் சிறந்தவற்றை செய்வதற்கான  ஊக்கத்தை அளிக்கும்.

 

  1. இந்தப் பல்கலைக் கழகம் அளிக்கின்ற மகத்தான வாய்ப்புகளை மாணவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.  இந்தப் பட்டமளிப்பு விழாவில் 335 முனைவர் பட்ட அறிஞர்களும், 26 எம்.ஃபில் ஆய்வாளர்களும், பெரும் எண்ணிக்கையில் முதுநிலை, இளநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மாணவர்களும்  பட்டங்களைப் பெறுகிறார்கள்.  மேலும், 189 சிறந்த மாணவர்கள் தங்கப்பதக்கங்களுடன் கவுரவிக்கப்படவுள்ளனர்.  இது  உங்களுக்குப் பசுமையாக நினைவில் தங்கும் நாளாகும்.  உங்களின் பெற்றோர்களுக்கும் கூட இது பெருமிதம் தரும் விஷயமாகும்.  தகுதியான பட்டங்களைப் பெறுகின்ற உங்களை நான் மீண்டும் பாராட்டுகிறேன்.  உங்களில் சிலர் கூடுதலாக படிப்பைத் தொடரக்கூடும்.  சிலர் இந்த வளாக வாழ்க்கைக்கு நன்றி சொல்லிவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கக்கூடும்.  உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.  போட்டி நிறைந்த இந்த உலகத்தில் இரக்கமும், தாராள குணமும் குறைவாக இருக்கலாம்.     ஆனால் நீங்கள் அதிகம் இரக்கமுள்ளவராகவும், தாராளமானவராகவும் இருக்க முயற்சி செய்தால், நிச்சயமாக சமநிலையைக் காணலாம். 

 

  1. இந்த நாள் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் சிறந்த நாளாகும்.  சிறப்பான இந்த மாணவர்களுக்குக் கற்பித்தல் மட்டுமல்ல, கவுரவமிக்க தேசிய, சர்வதேச விருதுகளையும், பரிசுகளையும் பெற்றதன் மூலம் பல்கலைக் கழகத்திற்கு பெருமையை சேர்த்திருக்கிறீர்கள்.  மிகவும் புகழ்பெற்ற சஞ்சிகைகளில் உங்களின் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன. அறிவுசார்ந்த நாட்டங்கள் எப்போதும்  கூட்டு முயற்சிகளால் உருவாகின்றன.  மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆதரவாக உள்ள நிர்வாகம் மற்றும் ஊழியர்களும் பாராட்டப்பட வேண்டும். 

 

  1. நிறைவாக பல்கலைக் கழகத்தின் கீதம் பற்றி கூற விரும்புகிறேன்.  இதன் வார்த்தைகள் உயர்வானதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளன.  இது பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், அரவிந்தருக்கும் புகழாரம் சூட்டுகிறது.  பிரகதாரண்யக உபநிடதத்திலிருந்து புகழ்பெற்ற, தொன்மையான மந்திரத்துடன் இது தொடங்குகிறது. 

 

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு எங்களை வழிநடத்து!

  1. இந்த கீதத்தின் உணர்விலிருந்து ஒட்டுமொத்த பல்கலைக் கழக சமூகத்திற்கு நான் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.    இந்தப் பல்கலைக் கழகம் மேலும் வளரவும், நீங்கள் எப்போதும் வளமாக இருக்கவும் வாழ்த்துகிறேன்.

 

உங்கள் அனைவருக்கும் நன்றி

ஜெய் ஹிந்த்!

 

*****


(रिलीज़ आईडी: 1597208) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English